vendredi 23 janvier 2015

மூடச் சடங்கில் முக்கியச் சடங்கு!திருமணம்


திருமணச் சடங்குகளிலேயே பெரும் மூடச் சடங்கு மணமகளுக்குத் தாலி கட்டுதல் ஆகும். ஒருத்தி ஒருவனுக்கு உரியவளாகி விட்டாள் என்பதை எடுத்துக்காட்டும் சடங்காம். தாலி எனும் சொல் திருமணச் சின்னத்தைக் குறிக்கும் சொல். ஆக 11ஆம் நூற்றாண்டில்தான் பயன்படுத்தப்பட்டது.

கடவுள் எனப்படும் முருகன் செய்துகொண்ட ஒரு திருமணத்தில் தாலி கட்டியதாகக் குறிப்பு உள்ளது. அவனே செய்துகொண்ட இன்னொரு திருமணத்தில் (வள்ளி திருமணம்) இத்தகைய குறிப்பில்லை.

இக்கடவுளின் தந்தைக் கடவுள் செய்து கொண்ட (சிவன்) திருமணத்திலும்கூட இக்குறிப்பில்லை. தெய்வயானை என்பாளை முருகன் திருமணம் செய்துகொண்ட நிகழ்ச்சியை,

மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து  நங்கை முடிக்கோர் நறுந்தொடை சூழ்ந்தான் என்று கந்த புராணம் கூறுகிறது. மங்கல நாண் அணிவித்தானாம். அத்துடன் மலரையும் அவளின் கூந்தலில் சூட்டினானாம்.

திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு மலர் சூடுவதுதான், அவள் திருமணம் ஆனவள் என்பதற்கான அடையாளம் என்பதாக அகநானூற்றுக் காலத்திலிருந்தே வரும் பழக்கம். ஒன்றுக்கு இரண்டாக அடையாளம் இருக்கட்டுமே என்றானோ, கடவுள்? ஒன்றுக்கு இரண்டாக மனைவியைக் கொண்டவன் ஆயிற்றே!

தொங்குதல் எனும் பொருள் கொண்டது நாலுதல் எனும் சொல். நாலுதல் தாலுதலாகி அதுவும் சுருங்கி தாலி என்றாகியது என விளக்கம் தருகின்றார்கள் தமிழ் படித்தோர். தால், தாலம் என்பன பனைமரத்தின் பெயர்கள்.

பனங்குருத்தோலையால் செய்யப்பட்ட நகைகள் சிறுவர் சிறுமியர்க்கு அணிவிப்பது வழக்கம். தாலிக் கொழுந்தைத் தடங் கழுத்தில் பூண்டு என்று கண்ணனை வருணிக்கிறார் பெரியாழ்வார்.

திருமால் எனும் கடவுளின் ஆயுதங்கள் எனப்படும் சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய அய்ந்தையும் சிறு வடிவில் செய்து ஆண் குழந்தைக்கு அய்ந்து மாதம் வயதாகும்போது அணிவிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அய்ம்படைத் தாலி என்றனர்.

அய்ம்படைச் சதங்கை சாத்தி என்று பெரிய புராணத்தில் குறிப்பிடப்படுகிறது. தாலி அய்ம்படைத் தழுவு மார்பிடை என்று கம்பராமாயணம் பாடுகிறது. அய்ம்படை மார்பிற் காணேன் என்ற பரஞ்சோதி எழுதிய திருவிளையாடல் புராணம் கூறும்.

புறநானூற்றில்கூட (பாடல் 77) தார்பூண்டு தாலி களைந்தன்றுமிலனே பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே எனக் கூறி, தலையானங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இளம் பருவத்திலேயே பகைவரை வென்றதைப் பாடுகிறது.

புலியுடன் சண்டை செய்து கொன்று அதன் பல்லைக் கொண்டு அணிசெய்து அதனைப் புலிப்பல் தாலி என்றனர். புறநானூறு (374). இதனை புலிப்பல் தாலிப் புலம்பு மணிச் சிறார் எனப் பாடுகிறது. இதனையே சிறுமியரும் அணிந்ததை அகநானூறு (பாடல் 7) இவ்வாறு பாடுகிறது.

புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல் என்று!

மறங்கொள் வயப்புலி வாய்பிளந்துபெற்ற
மாலை வெண் பற்றாலி _ என்று இதனைச் சிலப்பதிகாரமும் பாடுகிறது.
இதுதவிர, பின் தாலி எனவும் ஒன்றுண்டு என சிலப்பதிகாரம் கூறுகிறது.

முதுகை மறைக்கும் அளவுக்கு முத்தாரத்தில் நவ ரத்தினங்கள் கோத்துச் செய்யப்படும் அணி பின்தாலி எனப்பட்டது. தாலி என்றால் தொங்குவது எனும் பொருளில்தான் இந்தப் பெயர். இவ்வாறே முன்பக்கம் தொங்கும் அணி சின்மணித்தாலி எனப்பட்டது.

ஆமைத்தாலி என்பதை அக்குவடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்தசயனன் தளர்நடை நடலானே எனப் பெரியாழ்வார் பாசுரத்தில் குறிப்பிடப்-படுகிறது. இதுவும் சிறுவர்கள் கழுத்தில் அணியும் நகை என்கிறார்கள்.

இவற்றால், தாலி என்பது மணமகன் மணமகளை மனைவியாக ஏற்றுக் கொண்டதன் அடையாளச் சின்னமாக அறியப்பட்டது என்பது சரியில்லை. தொங்கும் அணிகளைக் குறிக்கும் சொல்லாகத்தான் பயன்படுத்தப்-பட்டது.

சின்னம் இழையே

அகநானூற்றில் வரும் (பாடல் 86) மணமகளுக்குக் குளிப்பாட்டிய முதிய மகளிர்பற்றிப் பாடும்போது வாலிழை மகளிர் நால்வர்கூடி என வருகிறது. பாடல் 136இல் மழைபட்டன்ன மணன்மலிபந்தக்/இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பாற்றி என வரும் வரிகளால் இழை அணிவிக்கப்பட்டது என உணரலாம்.

இந்த இழை வெறும் நூல் இழை மட்டுமே. இவர்கள் கூறும் தாலி கோக்கப்படாத வெறும் இழைதான் அணிவிக்கப்பட்டதாகக் கருதலாம்.

ஈகையரிய இழையணி மகளிரொடு
சாயின்றென்ப ஆய்கோயில்

என வரும் புறநானூற்றுப் பாடலில் (127) எல்லாப் பொருளையும் வாரி வழங்கிய ஆய் மன்னனின் மகளிர் ஓர் இழையை மட்டுமே அணிந்திருந்த காரணத்தால் ஒளி குறைந்து காணப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. தகதகக்கும் தங்கநகை இன்மையால் ஒளி குறையத்தானே செய்யும்?

கரிகால் பெருவளத்தான் இறந்தபோது அவனின் உரிமை மகளிர் அணிமணிகளைக் களைந்தனர் என்றாலும் இழையையும் களைந்துவிட்டனர் என்று புறநானூறு பாடல் 224இல் புலவர் கருங்குழலாதனார் பாடியுள்ளார். கணவனை இழந்தோர் கழற்ற வேண்டியது இழை எனப் பொருள்படுகிறது. தாலி அல்ல என்பதை உணரலாம்.

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் வந்து திருமணம் செய்துகொண்ட காட்சியைக் காட்டும் சிலப்பதிகாரம்கூட தாலி கட்டிய காட்சியைக் காட்டவில்லை. கோவலன் கொலை செய்யப்பட்டதை அறிந்த கண்ணகி தாலியை அகற்றினாள் எனப் பாடவும் இல்லை. வளையல்களை உடைத்தாள் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தாலி மங்கல மகளிர் இழக்கக் கூடாத ஒன்று எனும் பொருளில் கந்தபுராணம் மட்டுமே முதலில் கூறியுள்ளது. திருப்பாற்கடலை (உலக வரைபடத்தில் அப்படியொரு கடல் இருக்காது _ புராணப் புளுகில் இதுவும் ஒன்று) தேவரும் அசுரரும் கடைந்தபோது எழுந்த ஆலகால விஷத்தைச் சிவன் உண்டதால் பிரம்மன், திருமால் முதலிய தேவர்களின் உயிரைக் காப்பாற்றினான் என்றும் அதன்மூலம் தேவர்களின் மனைவியரின் தாலிகளைக் காப்பாற்றினான் என்றும் பாடல் உள்ளது.

செற்றால முயிரனைத்தும் உண்டிடவே
நிமிர்ந்தெழலும் சிந்தை மேற்கொள்
பற்றாலங்கது நுகர்ந்து நான்முகனே
முதலோர் தம்பாவை மார்கள்
பொற்றாலி தனையளித்தோன் புகழ்போற்றி

என்பது பாடல். இதனால்தான் இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை என்கிற சொல்லடை உண்டானதுவோ?

ராம காதையைப் பாடிய கம்பன் இறந்தபோது பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப நாமடந்தை நூலிழந்த நாள் என்று ஒட்டக்கூத்தர் எனும் புலவர் பாடியதாகப் பாடல் ஒன்று உண்டு. கொண்டவன் இறந்தால் மகளிர் இழக்க வேண்டியது இழை என்றுதான் இப்பாடலும் குறிக்கிறது.

மாறாக, அபிதான சிந்தாமணி கூறுகிறது. திருமணத்தில் கொண்டோன் தெய்வம் வாழ்த்தித் தன் தேச சம்ரட்சணார்த்தம் தன் சந்ததியின் விருத்தியின் பொருட்டும் கொண்ட மனைவியின் கழுத்தில் தேவரிஷிகள் புரோகிதர் முதலியோர் சாட்சியாகக் கட்டும் அடையாளமாம்.

இதற்குத் தாலி என்பது முற்கால, தற்கால வழக்கம். இந்தத் தாலியைச் செல்வமுள்ளோர் பொன் முதலியவற்றாலும் மற்றவற்றாலும் செய்து அணிவர். செல்வமில்லா ஏழைகள் மரத்தாலும் ஓலையாலும் செய்து அணிவர்.

இதனைத் தாலபத்திரம் என்னும் ஓலையால் பலர் அணிதல் பற்றியே இதற்குத் தாலி என்று காரணப் பெயர் உண்டாயிற்று. மரத்தாலியும் உண்டாயிற்று போலும்.

இது வடநாட்டில் தற்காலம் சில கீழ் ஜாதியாரிடம் நடைபெறுகிறது. இதன் உரு, தேசங்கள் தோறும் ஜாதிகள்தோறும் வேறுபடுகிறது. இத்தாலி, பலவற்றால் செய்யப்படும் என்பதை ஸ்வர்ணேன ரஜதேனை வாதாம் ரேணதா ருஜைரபிஅதலா தால பத்ரேவா பவுஞ்ச சதுஸ்ரகம் எனும் ஸ்ரீஉத்தர காரண வாக்கியத்தால் அறிக. இதனைப் பதினாறு இழைகள் கொண்ட சூத்திரத்தில் கோக்க வேண்டும் என்பது. (பக்கம் 1234)

ஊருக்கு ஊர் வேறுபட்டும் ஜாதிக்கு ஜாதி மாறுபட்டும் காட்சியளிக்கும் தாலி பலவகைப்படும். 1. பெருந்தாலி, 2. சிறுதாலி, 3. தொங்குத்தாலி, 4. பொட்டுத்தாலி, 5. சங்குத்தாலி, 6. ரசத்தாலி, 7. தொப்புத்தாலி, 8. உருண்டைத்தாலி, 9. கருந்தாலி, 10. ஜாகாத்தாலி, 11. இருதாலி, 12. தாலிகட்டி எனப் பட்டியல் நீளும். இதன்னியில், காதுகளில் அணியும் தோடுகூட மங்கல அணியாகக் கருதப்பட்ட நிலையும் இருந்தது. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றிய மதுரைக் கலம்பகத்தில்,

நம்பா நினக்குஓலம் முறையோ எனக்கால
நஞ்சுண்டு பித்துண்டு நாம்தேவர் என்பார்
தம்பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த
தயவாளர்... என்று பாடிப் போகிறார்.

எனவே மலர் அணிந்தும், இழை அணிந்தும், வளை அணிந்தும், தோடு அணிந்தும் தாம் மணமானவர் என்பதை மகளிர் உணர்த்தி இறுதியில் தாலியை அணிந்து அதனை இசகுபிசகான இடத்தில் தொங்கவிட்டு அதைத் துருவிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நிலைக்குக் கொண்டு வந்துள்ளதைக் கவனிக்க வேண்டும்.

இந்த நிலை தமிழ் மகளிர்க்கு மட்டுமே! தமிழ்நாட்டு மகளிர்க்கு மட்டுமே! வடநாட்டுப் பெண்கள் தாலி அணி-வதில்லை.

அவர்கட்குத் தாலி கட்டுவ-தில்லை. நெற்றிக் குங்குமம் மட்டுமே அடையாளம். பார்த்தாலே தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

திருமணம் செய்துகொள்ளும் வரை அவர்கள் பொட்டு வைப்பதில்லை. வடநாட்டில் இல்லாதது தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வந்தது? தமிழர் திருமணத்தில் மட்டும் எப்படிப் புகுந்தது?

Aucun commentaire:

Enregistrer un commentaire