dimanche 18 janvier 2015

ஆயுதம்.பணம், தங்கம், கப்பல்கள் கே.பி.க்கு எதிராக வழக்கு ஜேவிபி

விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு, தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கையின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குமரன் பத்மநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜேவிபி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.
ராஜீவ் கொலை விசாரணைக்காக இந்தியாவின் சிபிஐ இண்டர்போலின் உதவியை கோரியுள்ளது (கோப்புப் படம்)
யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் என்று தன்னை அறிவித்துக் கொண்ட குமரன் பத்மநாதன் மீது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற ரீதியில் அவர் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.
'(கே.பி. மீது குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையிலும்) எந்தவிதமான விசாரணைகளும் இன்றி, எந்தவிமான சட்டநடவடிக்கைகளும் இன்றி அவர் இன்று கிளிநொச்சியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றார்' என்றார் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
'பணம், தங்கம், கப்பல்கள் அனைத்தையும் மகிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் கே.பி.யும் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்களா என்கின்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது' என்றார் ராமலிங்கம் சந்திரசேகரன்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் புனர்வாழ்வு பெற்று சிவில் வாழ்க்கையில் இணைந்துகொண்டிருப்பதை வரவேற்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
ஆனால் கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் எந்தவிதமான புனர்வாழ்வு நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்படவில்லை என்றும் சந்திரசேகரன் தெரிவித்தார்.
கே.பி.-யின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் விபரம் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக விளக்கம் கோரப்படும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கின்ற வழக்கு நடவடிக்கை தொடர்பில் குமரன் பத்மநாதனுடன் தமிழோசை தொடர்புகொண்டு கேட்டபோது, அதுபற்றி தற்போது கருத்துக்கூற முடியாது என்று கூறிவிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire