lundi 12 octobre 2015

ஈ.என்.டி.எல்.எப். அஞ்சலி! ஆயுதப் போராட்டத்துக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் .தியாகி டேவிட் ஐயாதான்

ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த, யாழ்.கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்துறையைச் சேர்ந்த, தியாகி. உயர்திரு.டேவிட் ஐயா (சொலமோன் அருளானந்தம் டேவிட்)  தியாகம் என்பதே அவர் வாழ்நாள் முழுவதும் கடைப் பிடித்து வந்த கொள்கையாகும்.


ஈழத் தமிழர்கள் விடுதலை பெற வேண்டும், அதிலும் ஆயுதம் ஏந்திப் போரிட்டு எங்கள் விடுதலையைப் பெறவேண்டும் என்று சிந்தித்துச் செயற்பட்டவர் உயர்திரு. டேவிட் ஐயா அவர்கள்.


கருவி ஏந்திப் போராடும் சிந்தனையை, நான்தான் நீதான் என்று பலரும் நூல்கள் வழியாக பெருமை பேசிக்கொள்கின்றனர். ஆயுதப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் உயர்திரு. டேவிட் ஐயாதான் என்பது பின்நாளில் வளர்ச்சிப்பெற்ற கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!


1968 ஆம் ஆண்டு சாம்பியாவிலிருந்து இஸ்ரவேல் தலைநகர் ரெல்லவீவ் விமான நிலையத்தைச் சென்றடைந்தார் டேவிட் ஐயா. நேராக ஓர் வாடகை வாகனத்தை அமர்த்திக்கொண்டு இஸ்ரவேல் இராணுவத் தமைமை அலுவலகத்தைச் சென்றடைந்த டேவிட் ஐயா அவர்கள், அந்நாட்டின் இராணுவத் தளபதியை சந்திக்க வேண்டும் என்று ஓர் துண்டுக் காகிதத்தில் எழுதிக் கொடுத்தார்.



அதனை வாங்கிப் படித்த இராணுவ கடமை அலுவலர் என்ன விடயமாக அவரைச் சந்திக்க வேண்டும் என்று வினவினார். ஓர் பயிற்சி சம்பந்தமாக (பயிற்சி) பார்க்க வேண்டும் என்று அந்த அதிகாரியிடம் தெரிவித்தார்.


கடவுச் சீட்டை வாங்கிப்பார்த்த அந்த அதிகாரி இவர் ஓர் இலங்கைப் பிரஜை என்பதைத் தெரிந்து கொண்டு, தளபதியிடம் முன் கூட்டியே அனுமதி பெற்றுள்ளீர்களா? என்று கேட்டதற்கு, இல்லை. என்று கூறியுள்ளார் ஐயா!


பயிற்சி என்ன? என்றதற்கு, ஆயுதப் பயிற்சிதான் என்று பதில் கூறியதைக் கேட்ட அந்த அலுவலர் திகைப்படைந்துவிட்டார். இருங்கள் என்று உள்ளே சென்ற அந்த அதிகாரி மேலும் சில உயர் அதிகாரிகளுடன் வந்து டேவிட் ஐயாவைச் சந்தித்தார்.


தேனீர் வரவழைத்து பருகச் சொல்லி விலாவாரியாகச் சொல்லுங்கள் உங்கள் பிரச்சினையை என்று அந்த அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர்.


இரண்டு மணித்தியாலங்கள் அந்த அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார் டேவிட் ஐயா. யூதர்கள் பட்ட கொடுமைகள் போன்றுதான் நாங்களும் ஈழத்தில் பட்டுவருகிறோம். எனவேதான் எங்கள் விடுதலையைப் போராடிப் பெறவேண்டும் என்ற கொள்கையுடன் பயிற்சிக்காக உங்களிடம் வந்துள்ளேன் என்று விளக்கினார் அவர்களுக்கு. பெரும் குழப்பத்துடன் உள்ளே சென்ற அந்த இராணுவ அதிகாரிகள் நான்குமணி நேரம் கழித்து வந்தனர்.


ஹலோ இளைஞன் மிகவும் வருந்துகிறோம். நாங்கள் யாருக்கும் ஆயுதப் பயிற்சி வழங்குவதில்லை. நீங்கள் திரும்பிச் செல்லலாம் என்று கூறிவிட்டனர். இவர் மீண்டும் ஓர் விண்ணப்பத்தை அவர்களிடம் முன்வைத்தார். அன்றைய இஸ்ரவேல் இராணுவத் தளபதிகளில் முக்கியமானவர் மோசேஸ் தயான் என்பவர்.


அவரை மட்டுமாவது சந்திக்க அனுமதி கொடுங்கள் என்று வேண்டினார். அதற்கும் அவர்கள் அனுமதி வழங்கவில்லை. நீங்கள் சென்று வரலாம் என்று கூறி ஓர் இராணுவ வாகனத்தில் ஏற்றி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர் டேவிட் ஐயாவை.


இதன் பின்னர்தான் காந்தியடிகளின் வழியில் தமிழ் இனத்தின் விடுதலையை வென்றெடுக்கலாம் என்ற சிந்தனையில் "காந்தீயம்" என்ற அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு, முதற் கட்டமாக மலையக மக்களை வடக்குக் கிழக்குப் பகுதிகளில் குடியமர்த்தும் பணியினை மேற்கொண்டார்.


1983 ஆம் ஆண்டுடன் அவை தடைபட்டன. பின்னர் அவரை சிங்கள அரசு கைது செய்து வெலிக்கடையில் அடைத்தது, படுகொலையிலிருந்து தப்பி மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து தப்பித்து இந்தியா சென்றடைந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே!



அன்று யாருமே ஆயுதப் போராட்டங்கள் பற்றிச் சிந்திக்காத வேளை திரு.டேவிட் ஐயா அவர்கள் பிற நாடு ஒன்றுக்குச் சென்று பயிற்சி பெற்று வந்து எங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று முற்பட்டதற்கு நாம் அனைவரும் தலை வணங்கியே ஆகவேண்டும். அந்த வழி அடைக்கப்பட்டு விட்டது என்று சோர்ந்து விடாமல், தமிழ் மக்களை ஒன்றுபடுத்தி விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று விடாது முயற்சி மேற்கொண்டார் உயர்திரு. டேவிட் ஐயா அவர்கள்.


இவ்வாறு தமிழ் மக்களின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த, ஈழப் போராட்டத்தின் முன்னோடி. உயர்திரு. காந்தியம். டேவிட் ஐயா அவர்களுக்கு, ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) தலை வணங்கி அஞ்சலி செய்கிறது.


அன்னாரின் இறுதி ஊர்வலம் 14-10-2015 புதன் கிழமை நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.


இவ்வண்ணம்,
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)

Aucun commentaire:

Enregistrer un commentaire