lundi 26 octobre 2015

சவூதியில் பணிபுரிந்த தமிழகப் பெண் கஸ்தூரி கை துண்டிப்பு விவகாரம்:

சவூதியில் பணிபுரிந்த கஸ்தூரி முனிரத்னம் என்ற பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட விவகாரத்தில், அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இந்தியப் பிரதமரை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரி முனிரத்னத்திற்கு சரியான இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டுமென ஜெயலலிதா கோரியிருக்கிறார்.

இது தொடர்பாக இன்று பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கஸ்தூரி முனிரத்னம் தான் வேலைபார்க்கும் வீட்டைவிட்டு தப்பும்போதுதான் கை துண்டிக்கப்பட்டதாக சவூதி காவல்துறை சொல்வதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருப்பதாகவும் கஸ்தூரியை வேலைக்கு வைத்திருந்தவரைக் காப்பாற்ற முயற்சிகள் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியிருப்பதாகவும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

மேலும், கஸ்தூரி முனிரத்னத்திற்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதோடு அவரைப் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டுமென்றும் ஜெயலலிதா கோரியிருக்கிறார். கஸ்தூரிக்கு நியாயம் கிடைக்கும் வகையில் இந்த விவகாரத்தை சவூதி அரசின் உயர் மட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றும் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கும் அவர் அடைந்த துன்பத்திற்கும் போதுமான இழப்பீட்டைப் பெற்றுத்தர வேண்டுமென்றும் ஜெயலலிதா தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire