lundi 24 juin 2013

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீர் பகுதி ஓட்டலில் துப்பாக்கிச் சூடு: 10 வெளிநாட்டு பயணிகள் பலி

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீர் பகுதியில் உள்ள ஓட்டலில்  இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்நாட்டு போலீசார் தகவல் தெரி வித்துள்ளனர். பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தில் வெளிநாட்டுப் பயணிகள் தங்கியிருந்த ஓட்டல் ஒன்றில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 10 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். 
இறந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் தெரியவில்லை. ஆனால், அங்கு அதிக அளவில் சீன சுற்றுலா பயணிகள் தங்கி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் 

வெளிநாட்ட வர்களுக்கு காணிகளை விற்பனை செய்வதனை தடைசெய்வதற்கான ஜனாதிபதியின் புதிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்"

அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளையோ, அல்லது தனியாருக்கு சொந்தமான காணிகளையோ, வெளிநாட்ட வர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிணங்க வெளிநாட்டவர்களுக்கு காணிகளை வழங்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய சட்டதிட்டங்களை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சட்டமூலம் உருவாக்கப்பட்டதன் பின்னர் நீதிபதியினதும் அமைச்சரவையினதும் அனுமதியினை பெற்று அதனை பாராளுமன்றத்திற்கு முன்வைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இத்துடன் நாட்டில் நிலவும் சமாதானம், மற்றும் துரித அபிவிருத்தியின் காரணமாக அண்மைக்காலமாக வெளிநாட்டவர்கள் காணிகளை பெற்றுக்கொள்ளும் அளவு அதிகரித்துள்ளது. அவற்றை விற்பனை செய்வது தொடர்பில் பல்வேறு அசௌகரியங்கள் எதிர்நோக்கப்படுவதன் காரணமாக வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பதற்கான கொள்கையில் மாற்றம் செய்வதற்கு வேண்டிய தேவை ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்வது தொடர்பில் திறந்த கொள்கை ஒன்று வகுக்கப்படவேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி முன்வைத்த அந்த யோசனைக்கு விரிவாக ஆராய்ந்து சட்டமூலத்தை உருவாக்க அதிகாரத்தை வழங்குவதற்கும், நீதிபதியினதும், அமைச்சரவையினதும் அனுமதியின் பின்னர் அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், பரிசு, விற்பனை, மற்றும் நன்கொடை உள்ளிட்ட வகையில் எவ்விதத்திலேனும் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியாது எனவும், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இனி சட்டத்தில் இடமில்லை எனவும், இனிவரும் காலங்களில் வெளிநாட்டவர்கள், குத்தகைக்கு மாத்திரமே காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞர்களுக்கிடையே வாள் வெட்டுச் சம்பவங்கள்.கோயில்களில் இரவு இசை நிகழ்ச்சிகளை தடை செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம்: யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

இரவு வேளைகளில் நடைபெறுகின்ற இசை நிகழ்ச்சிகளில் இளைஞர்களுக்கிடையே வாள் வெட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன எனத் தெரிவித்த யாழ்.பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி, யாழ்.குடாநாட்டிலுள்ள  கோயில்களில் இரவு 10மணிக்குப் பின்னர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார். யாழ்.குடாநாட்டில் உள்ள  கோயில்களின் திருவிழாக் காலங்களில் நடாத்தப்படும் இசை நிகழ்ச்சியின் போது இளைஞர்களிடையே ஏற்படும் வாள் வெட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடா நாட்டிலுள்ள  ஆலயங்களில் திருவிழாக்காலங்கள் ஆரம்பித்துள்ளமையினால் கோயில்களில் பாரிய குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் இறுதிநாள் நிகழ்வின்போது நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்குப் பின்னர் நடைபெறுவதினால் அவ் இசை நிகழ்ச்சி முடிவடைய இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடுகின்றன. இதனால் இசை நிகழ்ச்சியைப் பார்க்க வரும் இளைஞர்கள் மதுபானம் அருந்திவிட்டு தகராறுகளில் ஈடுபட்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் ஏற்படுகின்றன. அண்மையில் திருநெல்வேலியில் அமைந்துள்ள கொண்டலடி வைரவ கோயிலில் இசை நிகழ்ச்சியின்போது வாள் வெட்டு சம்பவம் ஏற்பட்டதில் இளைஞன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில்களில் இரவு 10 மணிக்குப் பின்னர் இசை நிகழ்ச்சிகளை நடாத்த தடைவிதிக்கவுள்ளோம் என்றார்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் பிரதமருக்கு அவசர கடிதம்;யெச்சூரி எம்.பி.

புதுதில்லி, ஜூன் 21-
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இந்திய அரசு முன்வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலமைப்புக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஊடகங்களில் வெளியிட்டிருப்பது போல் இலங்கையின் வடக்கு மாநில கவுன்சில் தேர்தலுக்கு முன் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தத்தின் சில முக்கிய பகுதிகள் திட்டமிட்டே நீர்த்துப் போகும் வகையில் சில ஆலோசனைகளை இலங்கை அரசு முன் வைத்திருப்பதைக் கண்டு உங்கள் கவலையினை வெளியிட்டிருப்பது முற்றிலும் சரியானதே.13-வது திருத்தத்தையும் அதற்கு மேலும் சென்று ஒரு அரசியல் தீர்வினை கொடுப்பதாக இந்திய அரசிடமும் சர்வதேச சமூகத்திடமும் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகள் பற்றிய சந்தேகத்தினை தற்போது இலங்கை அரசால் முன்வைக்கப்படும் மாற்றங்கள் எழுப்புகின்றன.
போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழு தன்னுடைய பரிந்துரையாக வைத்திருந்த மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வினை அளிக்கும் அரசியல் தீர்வு என்ற நோக்கத்துக்கு தற்போது இலங்கை அரசு முன்வைக்கும் மாற்றங்கள் எந்த வகையிலும் பொருந்துவதாக இல்லை.இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வு குறித்தும் அங்கு வாழும் தமிழ் சமூகம் இலங்கையில் கண்ணியமான வாழ்வும், சம உரிமையும் பெற்று குடி மக்களாக வாழ வேண்டும் என்பதிலும் இந்தியாவில் ஆழ்ந்த அக்கறை உள்ளது. நீங்கள் தெரிவித்துள்ள கருத்தின் வழியே நின்று, எதிர்காலத்தில் சமத்துவம், நீதி, சுயமரியாதையுடன் இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் வாழ்வதற்கான உறுதிப்பாட்டினைப் பெற இந்திய அரசு தனது அரசியல் உறவினை செயலூக்கத் தோடு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 13-வது திருத்தம் என்பது வரலாற்று ரீதியாக ஏற்கனவே உருவான ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக உருவானது என்பது அனை வரும் அறிந்த ஒன்று. இறையாண்மை மிக்க இந்த இரு நாடுகளும் அவர்களுக் கிடையேயான நல்லுறவை வலுப்படுத்திக் கொண்டே, அந்த ஒப்பந்தத்தை செயல் படுத்துவதற்கான ஊக்கமுடன் இந்திய அரசு செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துடன் சமரசமாகத் தான் செல்ல வேண்டும்;மத்திய இணை அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன்

இன்னொரு பாகிஸ்தானாக சிறிலங்கா மாறுவதைத் தடுக்கவே, சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சி அளித்து வருவதாக இந்திய மத்திய இணை அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். 

வெலிங்டனில் சிறிலங்கா படைஅதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவது குறித்து, கருத்து வெளியிட்டுள்ள அவர், 

“சிறிலங்காவில் 49 இலட்சம் தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. 

எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம், சிறிலங்கா அரசாங்கத்துடன் சமரசமாகத் தான் செல்ல வேண்டும். 

சிறிலங்காப் படை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இந்தியா மறுப்புத் தெரிவித்தால், அந்த அதிகாரிகளை சீனாவுக்கு அனுப்புவார்கள். 

அது இந்தியாவின் எதிரிகளைப் பலப்படுத்துவதாக அமையும். 

இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானால் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. 

இன்னொரு பாகிஸ்தானாக சிறிலங்கா உருவெடுப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். 

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொண்டுள்ளது. 

தமிழர்களினதும் அவர்களிது சொத்துக்களினதும் பாதுகாப்பையும் இந்தியா கவனத்தில் கொள்கிறது.

இந்த விவகாரம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

அதேவேளை, சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படக் கூடாது என்று மற்றொரு மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன் கூறியுள்ளார். 

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 

தமிழ்நாட்டில் சிறிலங்காப் படையினருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனியிடம் உறுதியாக எடுத்துக் கூறியுள்ளோம். 

இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

dimanche 23 juin 2013

18/05/2013 புலம்பெயர் மக்களின் அத்தனை ஆசைகளையும் நிராசையாக்கியது. ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? அது எவ்வாறு ஏற்பட்டது? அதற்கான காரணம் என்ன? அதன் பின்னணி என்ன? இந்த நிலைக்கான பொறுப்பை யார் எடுப்பது?

கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்)
அமெரிக்காவின் பிரபல்யமான கொள்கை பகுப்பாய்வாளரான ‘டாக்டர். பீட்டர் சாக்’ என்பவர் தனது ‘வெளிநாட்டில் புலிகள்’ (Tigers in Abroad) என்னும் ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.  ‘விடுதலைப்புலிகளின் வருடாந்த வருமானம் புலத்தில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 200-300 மில்லியன் அமெரிக்க டாலர் வரை இருந்தது. இதில் அவர்களின் போராட்டத்தை களத்தில் வழிநடத்திச் செல்ல ஏற்பட்ட மொத்த செலவீனம் ஒரு வருடத்திற்கு ஏறத்தாள 8 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. எனவே வருடத்திற்கு அவர்கள் ஏறத்தாள 198 மில்லியன் அமெரிக்க டாலர்களை நியம இலாபமாக பெற்றார்கள்’. இந்த கூற்றானது விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு புலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பினை மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டி நிற்கின்ற அதேநேரம் போராட்டத்திற்காக தேவைப்பட்ட நிதியின் அளவுப் பெறுமானத்தையும் கோடிட்டு நிற்கின்றது.
diaspora ltteஒருகட்டத்தில் முழு உலகிலுமே அதிக சக்திவாய்ந்த ஒரு பயங்கரவாத இயக்கமாக விடுதலைப் புலிகள் உருவெடுத்தபோது எல்லோர் உள்ளங்களிலும் எழுந்த கேள்வி இவர்களுக்கு பின்னணியாக இருந்து கொண்டு நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்துவரும் நாடு/நாடுகள் எது/எவை என்பதுதான். ஆனால் அதற்கு விடையாக புலத்தில் வாழும் தமிழர்கள்தான் என்ற யதார்த்தம் வெளிவந்தபோது அனைவருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஏனெனில் பொதுவாக இவ்வாறு உள்நாட்டு யுத்தம் நடைபெறுகின்றபோது அநேகமாக வெளியில் இருக்கும் பலமான நாடுகள் தான் இவ்வாறான போராட்ட இயக்கங்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்குவதும் மறுபுறமாக பேச்சுவார்த்தைக்கான அழுத்தங்களைக் கொடுப்பதும் என்றவாறாக “பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவித்தல்” வழமையாகும். ஆனால் இங்கோ விடயம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே காணப்பட்டது. முழு உலகமுமே வியர்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த புலத்தில் வாழும் தமிழர்கள் இந்த போராட்டத்தை வழிநடத்த நிதி ரீதியாக உதவி வந்தனர். அதுவும் ஒருசில வருடங்கள் அல்ல; ஏறத்தாள மூன்று தசாப்தங்கள் அவர்கள் இந்த போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்தார்கள் என்பது உண்மையிலேயே யாவரையும் ஆச்சரியப்படவைக்கும் நிஜமாகும்.
தொடர்ந்தேர்ச்சியாக நீட்சிக்கப்பட்ட நிதிவழங்குகையில் இவர்கள் ஒருபோதும் மனம் சோர்ந்து விடவோ அல்லது மனம் சலித்துக்கொள்ளவோ இல்லை என்பதுதான் இங்கு கவனிக்கப்படத்தக்க மற்றோர் விடயமாகும். இந்த மூன்று தசாப்தங்களில் மொத்தம் எத்தனை நூறு கோடி ரூபாய்களை விடுதலைப் புலிகளுக்கு வாரி வழங்கியிருப்பார்கள் என்று யாரிடமுமே கணக்கு வழக்கு இருக்க முடியாது. அதிகமான வெளிநாட்டு ஆய்வாளர்களினாலும், கொள்கை வகுப்பாளர்களினாலும், அரசியல்வாதிகளினாலும் பார்த்து வியக்கப்பட்ட விடயம் இந்த புலம்பெயர் தமிழரின் போராட்டத்திற்கான நிதி தொடர்பான பங்களிப்புத்தான்.
தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிலவிதமான நிதி மற்றும் ஆயுத உதவிகளை இந்தியா விடுதலைப் புலிகளுக்கு வழங்கி வந்தாலும் கூட குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தின் பின்னர் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தனிநபர்களை மையமாகக் கொண்ட பங்களிப்புகளே இந்த போராட்டத்திற்கு இந்தியாவிடம் இருந்து குறிப்பாக தமிழ் நாட்டிலிருந்து கிடைத்தது என்பதுதான் யதார்த்தம். ஈழப்போராட்டம் இந்தியாவின் நலன்களுக்கும் அதன் அபிலாசைகளுக்கும் எதிராக திசைதிரும்பியபோது இந்தியா படிப்படியாக தனது சகலவிதமான ஆதரவுகளையும் நிறுத்திக்கொண்டது. எனவே ஒரு கட்டத்திற்கு அப்பால் விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு முழுமையான நிதியை முன்னிறுத்திய பங்களிப்பு என்பது தாயகத்திலும் புலத்திலும் வாழ்ந்த தமிழர்களாலேயே வழங்கப்பட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆகவே அந்தப்போராட்டத்தில் முழுமையாகவே உரிமைகோரும் அந்தஸ்து மட்டுமல்ல; அதனால் ஏற்பட்ட அனைத்துவிதமான விளைவுகளுக்கும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சொந்தங்களும் பொறுப்புச் சொல்லவேண்டும் என்பதுதான் இங்கு சுட்டிக்காட்டவேண்டிய மற்றோர் அம்சமாகும்.
ஒரு நீண்ட நீடித்த யுத்தத்தின் பின்னால் நின்று கொண்டு ஈழக்கனவுடன் இந்த புலம்பெயர் தமிழ் மக்கள் செய்த அத்தனை தியாகங்களும் அவர்களின் கண்முன்னாலேயே நிர்மூலமாக்கப்பட்ட போதுதான் அவர்களின் அத்தனை முயற்சிகளும் வீணாக்கப்பட்டதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியுடன் கூடிய  சோகமான முடிவானது இந்த புலம்பெயர் மக்களின் அத்தனை ஆசைகளையும் நிராசையாக்கியது. ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது? அது எவ்வாறு ஏற்பட்டது? அதற்கான காரணம் என்ன? அதன் பின்னணி என்ன? இந்த நிலைக்கான பொறுப்பை யார் எடுப்பது? போன்ற கேள்விகளை கேட்டு அதைப்பற்றி ஒரு சுயவிமர்சனத்துடன் கூடிய மீள்பார்வையினை செய்யக்கூடிய அளவிற்கு கூட முடியாதவர்களாக, எதிர்பார்ப்புகள் தகர்த்தெறியப்பட்டும் அதனை ஜீரணிக்கக்கூட இன்றுவரை இயலாதவர்களாகவும் இவர்கள் உள்ளனர். ஒரு சிறந்த கல்விச்சமூகமாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த இலங்கைத் தமிழ் மக்கள் பலமான தமது பங்களிப்பினை தசாப்தங்களாக இவ் விடுதலைப் போராட்டத்திற்கு முன்னிறுத்தியும் ஏன் அந்த போராட்டத்தை தக்கவைத்து அதன் இலக்கினை அடைய முடியாமற்போனது? என்ற கேள்விக்கு மிகவும் சுலபமான பதில் ஒன்றுதான் இருக்கின்றது; அதுதான் போராட்டம் என்பது தனியே ஆயுதரீதியான யுத்தமும் அதனால் கிடைக்கும் வெற்றிகளுமே என போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் எண்ணியமையும்; அவர்களை சர்வதேச அரசியல் போக்குகளுக்கு ஏற்ப வழிநடத்த முடியாத ஒரு கையறு நிலையில் இந்த போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்தவர்கள் காணப்பட்டதுமாகும்.
தமக்கு கிடைத்த இராணுவ வெற்றிகளையெல்லாம் அரசியல் வெற்றியாக மாற்றும் திறனும் இராஜதந்திரமும் விடுதலைப்புலிகளிடம் அறவே இருக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றி என்பது அதன் இராணுவ மற்றும் அரசியல் காய்நகர்த்தல்களிலேயே அதிகம் தங்கியுள்ளது. இவை இரண்டையும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தும் ஆற்றலும் திறமையும் அதனை வழிநடத்துபவர்களிடம் காணப்படல் வேண்டும். அரசியல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளில் தமக்கு சாதகமாகவும் சமமாகவும் எதிரியைக் கொண்டுவரும் நிலைமை ஏற்படும் வரையுமே ஆயுதப் போராட்டம் களத்தில் நடத்தப்படல் வேண்டும். அந்நிலை உருவான பின்னர் அந்த ஆயுத தளத்தில் அல்லது அந்த சமநிலையை வைத்து கொண்டு தமது இலக்கினை அடைய அரசியல் மற்றும் இராஜதந்திர உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். உண்மையில் இராணுவ வெற்றிகளின் மூலம் மட்டும் போராட்டம் வெற்றிபெற முடியுமாயின் இன்று தமிழீழம் கிடைத்து ஒரு தசாப்த காலம் நிறைவு பெற்றிருக்கும். காரணம் அந்தளவு தூரம் இராணுவ வெற்றிகள் 2000 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகளின் கைகளில் குவிந்திருந்தது. ஆனால் எந்த இராணுவ வெற்றியும் குறித்த இலக்கினை அடைவதற்கு துணைபோகாது வீண் போன அடைவுகளாகவே அமைந்தன.falls of ltte
விடுதலைப் போராட்டத்தின் வெற்றியின் யதார்த்தம் என்பது வெறுமனே இராணுவ தந்திரோபாயங்கள் மற்றும் இராணுவ வெற்றிகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படுபவை  அல்ல என்பதை விடுதலைப்புலிகளின் தலைமைத்துவம் விளங்கிக் கொள்ளவும் இல்லை; விளங்கியவர்கள் அதனை எடுத்துச் சொல்லும் நிலையில் இருக்கவும் இல்லை. யுத்தத்தை முழுமையாக வழிநடத்திச் செல்ல சகல வழிகளிலும் உதவி செய்த புலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் இதுவிடயத்தில் பாரிய தவறொன்றை இழைத்தவர்களாகவே பார்க்கப்பட முடியும். காரணம் நிதியினை வசூலித்துக் கொடுப்பதுடன் தமது கடைமை முடிந்து விட்டதாகவே இவர்களில் பலரும் நினைத்தனர். அதுமாத்திரமின்றி, தாயகத்தை பெற்றுக்கொடுப்பது விடுதலை புலிகளின் கடமை என்றும் அதற்கான சகல வல்லமையும் அதன் தலைமைத்துவத்திடம் இருப்பதாக அதீத நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.

யுத்தகளத்தில் போராடி வெற்றிவாகை சூடி உயிர்தப்பியவர்களை தளபதிகளாகவும், மாண்டவர்களை மாவீரர்களாகவும், தப்பியோடி எதிரியுடன் சேர்ந்தவர்களை ஒட்டுக்குழுக்களாகவும், தூரே நின்று வேடிக்கை பார்த்தவர்களை துரோகிகளாகவும் பார்த்த இந்த புலம்பெயர் சமூகம் தனது பிரதான பணியில் பின்நின்றதால் ஏற்பட்ட விளைவினைத்தான் இன்று ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் அனுபவிக்கவேண்டியுள்ளது என்பதுதான் நிதர்சனமாகும். யுத்தத்தை ஆயுதரீதியாக வழிநடத்திச் செல்ல முன்வந்த இவர்கள் அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் வழிநடத்த முன்வராமையானது ஒரு துரதிஸ்டமான நிகழ்வாகவே பலராலும் இன்று பார்க்கப்படுகின்றது. சிலவேளைகளில் அதுவிடயம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் கொண்டிருந்த இறுக்கமான நிலைப்பாடுகள் இவர்களை அவ்வாறான பணிகளில் இருந்து அந்நியப்படுத்தி இருக்கலாம் எனவும் நம்ப இடமுண்டு. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக மிக நீண்ட காலமாக செயற்பட்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கம் (‘தேசத்தின் குரல்’ என அவரின் மரணத்தின் பின்னர் விடுதலைப் புலிகளினால் அழைக்கப்பட்டவர்) அவர்கள் அடிக்கடி பகிரங்கமாகவே கூறிய கூற்றான ‘ஆலோசனை வழங்குவது மட்டும்தான் எனது கடமை ஆனால் இறுதி முடிவு எடுப்பது தம்பியின் (பிரபாகரன்) கைகளிலேயே உள்ளது’ என்ற விடயத்தை இங்கு பதிவு செய்வது சாலப்பொருந்தும் என நினைக்கின்றேன்.

எது எவ்வாறாயினும் இன்று நிலைமைகள் முற்றுமுழுதாக மாறியுள்ளன. மீண்டுமொரு விடுதலைப் போராட்டம் ஆயுத வடிவில் முன்னெடுக்கப்படுவதற்கான அக மற்றும் புறக்காரணிகள் பாரியளவில் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. சிலவேளைகளில் அவ்வாறானதொரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் முன்னர் செய்தது போன்றதொரு பங்களிப்பினை செய்யும் நிலையில் இந்த புலம்பெயர் சமூகம் இருக்கின்றதா என்பதே இன்றுள்ள கேள்வியாகும். விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான வீழ்ச்சிக்குப் பின்னர் புலத்தில் வாழும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் இன்று பலதரப்பட்ட முன்னெடுப்புகள் சர்வதேச மட்டத்தில் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களின் செயற்பாடுகள் எல்லாமே புலத்தில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளன. தாயகத்தில் எதுவிதமான காத்திரமான முன்னெடுப்புகளையும் செய்யமுடியாத ஒரு இக்கட்டான நிலையில் அவர்கள் இன்று உள்ளார்கள். எனினும் அவர்களின் கடல்கடந்த செயற்பாடுகளானவை நேரடியாகவே தாயகத்தில் வாழும் உறவுகளின் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்புச் செய்யும் நிலை இன்று உருவாகியுள்ளது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இன்று இலங்கையின் அரசியலில் அதிகமாக பேசப்பட்டுவரும் 13 ஆவது திருத்த சட்டத்தினையும் அதனோடு தொடர்புபட்ட மாகாண சபைகளுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களையும் நாம் குறிப்பிடலாம்.falls of ltte-1

எனவே ஒரு விடுதலையை நோக்கிய ஆயுதப்போராட்டம் முழுமையாக தோல்வியடைந்துள்ள நிலையில் நடைமுறையில் அதிகமாக பேசப்பட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டும் வருகின்ற ‘நல்லாட்சி’, ஜனநாயகம், மற்றும் ‘அடிப்படை மனித உரிமைகள்’ என்பவற்றின் அடிப்படையில் நின்றுகொண்டு தமது உரிமைகளை வென்றெடுக்கும் போராட்ட யுக்திகளை கையாளவேண்டிய கடப்பாடு இன்று இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றை அடியோடு நிராகரித்த நிலையில் நிதர்சனங்களை புறந்தள்ளிவிட்டு எடுக்கும் எந்த முயற்சிகளும் தாயகத்தில் வாழும் உறவுகளை மென்மேலும் பிரச்சினைகளுக்குள் தள்ளுகின்ற ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும்.

எல்லாவற்றையும் விட முக்கியமான விடயம்தான் இந்த புலம்பெயர் சமூகத்தின் இரண்டாம் தலைமுறையினர் இந்த விடயத்தை எவ்வாறு பார்க்கப்போகின்றார்கள் என்ற விடயமாகும். அவர்கள் பிறந்து வளர்ந்து வருகின்ற சூழலானது இவ்வாறான வன்முறைகளுடன்  கூடிய போராட்டங்களை ஆதரிக்கின்ற விடயத்திற்கு ஒருபோதும் இடம்கொடுக்காது. அவர்களின் மனோபாங்கு, சிந்தனையோட்டம் என்பன இந்த முதல் தலைமுறையினரில் இருந்து முற்றிலும் வேறுபட்டதொன்றாகும். அவர்கள் இந்தநாட்டில் வாழ்ந்து பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு நேரடியாக முகம் கொடுத்தவர்கள் அல்ல; யுத்தத்திலும், இனக்கலவரங்களிலும் அகப்பட்டு நேரடி அனுபவத்தை பெறவில்லை; உறவுகளை இழந்து அல்லது தொலைத்து மன உளைச்சல்களுக்கு ஆளாகவில்லை; இந்த மண்ணின் மகிமை மற்றும் அதன் வாசனையை நுகராதவர்கள். எனவே இந்த அடுத்த தலைமுறையினர் எதிர்வரும் காலங்களில் இந்த போராட்டத்திற்கு எவ்விதமான பங்களிப்பினை செய்யப்போகின்றார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

சிலவேளைகளில் முதல் தலைமுறையினராகிய பெற்றோர் தமது கசப்பான அனுபவங்களையும் தமது மண்ணின் மீதான பற்றினையும் தமது தாயகத்தின் விடுதலையின் அவசியத்தையும் பிள்ளைகளுக்கு ஊட்ட முயற்சி செய்தாலும் ஒரு எல்லைக்கு அப்பால் அதனை செய்யமுடியாது என்பதுதான் யதார்த்தம். காரணம் இவர்களில் பெரும்பாலானோர் இன்று அந்த இரண்டாம் தலைமுறையினரின் உழைப்பிலும் பராமரிப்பிலும் வாழவேண்டிய ஓய்வுநிலையினை அடைந்து விட்டார்கள். எனவே தமது தங்கியிருத்தல் நிலையில் நின்றுகொண்டு எந்தளவு தூரம் இன்னுமொரு போராட்டத்திற்கு தாம் கடந்தகாலங்களில் செய்த பங்களிப்பினை செய்யமுடியும் என்பதுதான் அடுத்து வரும் கேள்வியாகும்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ எட்டக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.வட-இந்திய மழைவெள்ளத்தில்


இதுவரை 600க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. உத்தராகண்ட் மாநில மலைப் பிரதேசங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர்.ஹெலிகொப்டர்கள் மூலம் ஆட்கள் மீட்கப்பட்டுவருகின்றனர். பல இடங்களில் சிறப்பு ரயில்கள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்படுகின்றனர்.
தாழ்வான இடங்களில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுவதால் சிக்கியுள்ளவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
கடந்த 60 ஆண்டுகளில், இம்முறை முன்கூட்டியே பெய்துள்ள பருவ மழையே பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
பலியானவர்களின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கலாம் என்று அஞ்சுவதாக உத்தராகண்ட் முதல்வர் விஜய் பாகுகுணா பிபிசியிடம் தெரிவித்தார்.
இதேவேளை, கேதார்நாத் கோவில் பிரதேசத்தில் சிக்கியிருந்தவர்கள் எல்லோரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடும் பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

samedi 22 juin 2013

88-89 காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர் ஜனாதிபதி ஆணைக்குழுக்களைப் பற்றி மக்கள் அறிவார்கள்: சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ

88-89 காலப்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சிக்கு எதிரான அரச நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர் உண்மைநிலை அம்பலமாவதைத் தடுப்பதற்காகவே மாத்தளை புதைகுழி தொடர்பில் ஜனாதிபதி சிறப்பு ஆணைக்குழு அமைத்துள்ளதாக அந்தப் புதைகுழி தொடர்பில் நீதிகோரும் காணாமல்போனோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
1988-89 காலப்பகுதியில் மாத்தளையில் காணாமல்போனோரின் குடும்பத்தினர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிவரும் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டை பிபிசியிடம் முன்வைத்தார்.ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பில் மக்கள் நன்கறிவார்கள் என்றும், பிரச்சனைகளை மூடி மறைப்பதற்காகவே அவ்வாறான ஆணைக்குழுக்கள் இதுவரை அமைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க உயர்பீடத்தில் இருக்கின்ற நபரே, மாத்தளை புதைகுழிக்குரிய காலம் என்று மதிப்பிடப்பட்டுள்ள காலத்தில் அங்கு இராணுவப் பொறுப்பில் இருந்துள்ளதாகவும் சட்டத்தரணி நாமல் கூறினார்.இது தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாட்டு மக்கள் மத்தியில் குரல்கள் வலுத்துள்ள நிலையில், மாத்தளை புதைகுழி தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை நடத்திவரும் நீதவானை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தோடு உண்மை நிலை வெளியில் வருவதைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைப்பதாக அறிவித்துள்ளதாகவும் காணாமல்போனோர் சார்பான சட்டத்தரணி கூறுகிறார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவை ரத்துசெய்துவிட்டு, அரச சாரபற்ற சுயாதீன குழுவொன்றின் மூலம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மாகாணசபை முறையை வெள்ளை யானை என்று சிலர் முத்திரை குத்துகின்றனர்;மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவில் மாகாணசபை முறைமை முற்றாகத் தோல்வியடைந்து விடவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். 

நேற்று அலரி மாளிகையில் ஊடகங்களின் ஆசிரியர்கள் நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

“மாகாணசபை முறையை வெள்ளை யானை என்று சிலர் முத்திரை குத்துகின்றனர். 

இருந்தாலும் அதனை மக்களுக்கு பயனுள்ள வகையில் சேவையாற்றும் வகையில் பயன்படுத்த வேண்டும். 

மாகாணசபை முறைமை சிறிலங்காவில் முற்றாகத் தோல்வியடைந்து விடவில்லை. அது பல நன்மைகளையும் கொடுத்துள்ளது. 

இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. எனவே திடீர் முடிவுகள் மூலம் இதனை மாற்ற முடியாது. 

இதனைத் தொடர்வதா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். 

அரசியல் முடிவுகள் குறித்து மக்களின் கருத்தை அறிவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தீவுகள் இருந்தும் செயற்கை தீவுகள் ஏற்படுத்த திட்டமாம்

சிறிலங்காவில் முதல் முறையாக பொழுதுபோக்கிற்கு செயற்கையான குட்டித்தீவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. 

அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு அருகாகவே இந்தக் குட்டித்தீவு உருவாக்கப்படவுள்ளது. 

சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் பொறியாளர்களின் வழிகாட்டிலில் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கான சாத்திய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாக, சிறிலங்கா துறைமுக அதிகாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

குறைந்தது 5 ஏக்கரில் இந்த குட்டித தீவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். 

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் அடுத்த கட்ட விரிவாக்கப் பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன. 

சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளும் இந்தத் திட்டத்தை சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. 

இதன்போது, சுமார் 40 ஆயிரம் கியூபிக் மீற்றர் மண் அகழப்படும். இந்த மண் குட்டித்தீவை உருவாக்கப் பயன்படுத்தப்படவுள்ளது. 

குட்டித்தீவை உருவாக்கும் பணிகள் முடிவடைந்த பின்னர் அது, பொழுதுபோக்கு வசதிகளை செய்வதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது. 

பணிகள் முடிந்த பின்னர், இதற்கு அனைத்துலக அளவில் கேள்விப்பத்திரங்களை கோரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் இது போன்றதொரு துறைமுக நகரை கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் அமைக்கவும் துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. 

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படாதுவிடின் ஞானஸாரர் காவியுடையைக் களைவாரா? – வாசுவின் சவால்!

எதிர்வரும் தேர்தலில் இரத்தினபுரிக்கு வருகைதந்து, தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கடகொட அத்தே ஞானஸார தேரருக்கு சவால் விடுத்திருக்கின்றார் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.

‘நாட்டின் யாப்பில் குறிக்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படாதுவிடின் நான் அரசியலை விட்டும் ஒதுங்கிவிடுவேன்’ என அமைச்சர் தெளிவுறுத்தினார். 

வாசுதேவ நாணயக்காரவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரர் குறிப்பிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில், நேற்று (20) தனது அமைச்சில் ஊடகவியலாளர்களைக் கூட்டி மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர் நாணயக்கார, 

‘ஞானஸார தேரர் குறிப்பிடுவது போல எங்களது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வர வேண்டும். தேரரின் சிந்தனையின்படி எங்கள் உயிரையும் நீக்க வேண்டிய காலமும் வந்துவிட்டது போலும். தேர்தல் நடைபெறும்போது இரத்தினபுரிக்கு வருகை தருமாறு அவருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். எங்கள் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் இரத்தினபுரிக்கு வரவேண்டும். 

13 ஆவது திருத்தச் சட்டத்துடன் நாங்கள் வட மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு வைப்பதென்பதை நாங்கள் பார்ப்போம் என்று ஞானஸார தேரர் குறிப்பிட்டிருந்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்தின்கீழ் நாங்கள் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்துவோம் என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இது எங்கள் அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்டுள்ள விடயம். நாங்கள் அவ்வாறு வட மாகாண சபைத் தேர்தலை நடாத்தினால் தேரர் அவரது காவியுடையை அவர் களைத்துவிடுவாரா? மாகாண சபையை நிலை நிறுத்த முடியாதுவிடின் நான் எனது அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். நானும் எனது காவியுடையைக் களைவேன், பொது பல சேனா இயக்கத்தைக் களைத்துவிடுவேன் என்று அவரும் என்னைப் போல வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். 

வாய் இருக்கின்றது என்று வாய்க்கு வருவதையெல்லாம் பேசுவது சரியல்லவே! காவியுடையினுள் மறைந்துதானே அவர் கூக்குரலிடுகிறார். நிந்தனை செய்கின்ற வார்த்தைகளைத்தான் அவர் பேசுகின்றார். என்னாலும் அவ்வாறு கதைக்க முடியும். காவியுடைக்கு நாங்கள் மரியாதை செலுத்துவதால் அவ்வாறு பேசுவதில்லை. 

பொதுபல சேனாவுக்கு நோர்வே நன்றாகவே உதவுகின்றது என எனக்குத் தோன்றுகின்றது. நோர்வே தூதுவரும் சாதாரணமாக பொதுபல சேனாவின் விகாரை (பன்சலை) யில்தான் இருக்கிறார் என்றும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.

இந்தியாவில் கடுமையான பருவ மழையால் உயிரிழப்பு ஐநூறைத் தாண்டியது


ஹெலிகாப்டர் துணையுடன் இராணுவத்தினர் மீட்பு பணிகளைச் செய்துவருகின்றனர்வட இந்தியாவில் கடுமையான பருவ மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி ஐநூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது.
பாலங்களும் சாலைகளும் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டிருப்பதை அடுத்து ஐம்பதாயிரம் பேர் வரையிலானோர் சிக்குண்டுள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள கேதர்நாத் என்ற புனித நகரமும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் மிக அதிகமான பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன.
இங்குள்ள கோயில்களுக்கு யாத்திரை வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இந்திய ராணுவம் முன்னின்று செயல்படுத்துகிறது.
மிகவும் ஒதுக்குப்புறமான மலைப் பகுதிகளை இன்னும் சென்று சேர முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

vendredi 21 juin 2013

மெக்சிகோவின் கிழக்குப் பகுதியில் உள்ள மழைக்காடுகளுக்குள் மாயன்களின் நகரொன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மாயன் இனத்தவரை அவ்வளவு சீக்கிரம் எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாயன்கள் அவர்களது நாட்காட்டி, உலக அழிவு என முழு உலகையுமே நடுங்கச் செய்திருந்தது அவர்கள் தொடர்பான செய்திகள் மற்றும் வதந்திகள்.
இந்நிலையில் மெக்சிகோவின் கிழக்குப் பகுதியில் உள்ள மழைக்காடுகளுக்குள் மாயன்களின் நகரொன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பல நூறு வருடங்களாக அடர்ந்த காட்டுக்குள் மறைந்து கிடந்த மேற்படி நகரின் மூலம் மாயன் இனம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு அழிந்து போனது தொடர்பில் தடயங்கள் கிடைக்குமென ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானம் மற்றும் கலைக்கான ஸ்லோவேனிய கல்லூரியின் துணைப் பேராசிரியரான ஐவன் ஸ்பிரஜக் தலைமையிலான குழுவினரே 'சசுடான்' எனப் பெயரிடப்பட்ட குறித்த நகரைக் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பகுதியில்15 பிரமிட்டுக்கள்  (75 அடி உயரமான பிரமிட் ஒன்று அடங்களாக) ,  விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான  மைதானங்கள், உயரமான செதுக்கப்பட்ட கற்தூண்கள், போன்றவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் குவாத்தமாலாவில் உள்ள டிகல் எனப்படும் மாயன் நகரை விட குறைந்த அளவில் அதாவது சுமார் 30,000 - 40,000 வரையானோரே இங்கு வசித்திருக்கலாம் எனவும் ஸ்பிரஜக் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனோடு இப்பகுதியில் பல மைதானங்கள் காணப்படுகின்றமையானது இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவிக்கின்றது.

இப்பகுதியில்  600 மற்றும் 900 கி.பி. ஆண்டுக் காலப்பகுதியில் மாயன் நாகரீகம் வளம் பெற்று திகழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர் குழுவின் தலைவர் ஸ்பிரஜக் கூறுகின்றார்.
இந்நகரானது 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதாகவும் இப்பகுதிக்கு 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வந்திருக்கலாம் எனவும் அதற்கான தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஸ்பிரஜக் சுட்டிகாட்டியுள்ளார்.
இப்பகுதிக்கு வருவதற்கென 10 மைல் பாதையை 3 வாரமாக ஒழுங்குபடுத்த வேண்டியிருந்துள்ளது அதனோடு 6 வாரங்களாக இப்பகுதி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

இப் பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தினால் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மாயன் இனத்தவர்களின் பிரிவுகளுக்கிடையிலான உறவினை தெரிந்துகொள்ளமுடியுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களது ஆராய்ச்சியை மெக்சிகோவின் மானிடவியல் மற்றும் வரலாற்றுக்கான தேசிய நிலையம் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க போவதில்லை - பிள்ளையான்

13வது  திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க போவதில்லை - பிள்ளையான் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கோ, அதனை இரத்துச் செய்வதற்கோ அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க போவதில்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்திய - இலங்கை உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை இரத்துச் செய்வது அல்லது அதில் திருத்தங்களை ஏற்படுத்துவது என்பது தற்போதுள்ள அமைதியான சூழ்நிலையை மீண்டும் எரியூட்டுவதாகும் எனவும்  இதனால் அதில் திருத்தங்களையோ, மாற்றங்களையோ செய்வதற்கு ஆதரவளிக்க போவதில்லை.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்தே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அரசியல் நிரோட்டத்தில் இணைந்து கொண்டது. நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த போது, மாகாணத்தை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் சென்றேன். இந்த அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் காரணமாகவே அதற்கான சந்தர்ப்பம் கிடைத்து எனவும் பிள்ளையான் கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி அமையும் தனித்துப் போட்டியிட்டால்


தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிடுவதன் மூலம் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று, அந்தக் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறினார்.
சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து சொந்தப் பலத்தில் போட்டியிட்டதாலேயே இப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது.
அதேபோல, தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றார் அவர்.

குளித்த பின்னர், கால் இடுக்கு பகுதிகளில் பவுடர் போடும் பெண்களுக்கு புற்றுநோய் வரலாம்

பாஸ்டன் : குளித்த பின்னர், கால் இடுக்கு பகுதிகளில் பவுடர் போடும் பழக்கம் உள்ள பெண்களுக்கு, கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் 24 சதவீதம் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. குளித்தவுடன் உடல் முழுவதும் பவுடர் போட்டுக் கொள்ளும் பழக்கம் பலரிடம் உள்ளது. சிலர் கால் இடுக்கில் பிறப்புறுப்பு பகுதிகளில் பவுடரை அள்ளித் தெளித்து கொள்வார்கள். இதன் மூலம், நாள் முழுவதும் அரிப்பு இல்லாமல் புத்துணர்வுடன் இருப்பதாக நினைத்து கொள்கின்றனர்.

ஆனால், இதுபோன்ற பழக்கம் உள்ள பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பாஸ்டன் நகரில் உள்ள பிரிக்ஹாம் பெண்கள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள், 8 ஆய்வு முடிவுகளை தொகுத்து உறுதியான முடிவை வெளியிட்டுள்ளனர். இதில் கூறப்பட்டுள்ளதாவது:

கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட 8,525 பெண்களையும், புற்றுநோய் பாதிப்பே இல்லாத 9,800 பெண்களிடம் பவுடர் பயன்பாடு குறித்து ஆராயப்பட்டது. இதில், குளித்த பின்னர் பிறப்பு உறுப்பு பகுதிகளில் பவுடர் போட்டுக் கொண்ட பெண்களில் 24 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கு முக்கிய காரணம், பிறப்பு உறுப்பு பகுதிகளில் போட்டுக் கொள்ளும்போது, பவுடர் துகள்கள் மெதுவாக உடல் முழுவதும் பரவுகிறது. பின்னர் அது மெதுவாக எரிச்சலை உருவாக்குகிறது. இதுவே புற்றுநோய் செல்கள் பரவுவதற்கு காரணமாகிவிடுகிறது.

கருப்பை புற்றுநோய் என்பது, அமைதியாக கொல்லும் ஒரு நோய். இதன் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய முடியாது. நோய் முற்றிய நிலையில்தான் இது தன் வேலையை காட்டும். இதனால் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுவதும் கடினமாகிவிடுகிறது. குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் அவ்வப்போது சோதனை செய்து கொள்வதன் மூலமே கருப்பை புற்றுநோயை கண்டறிய முடியும். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரச நியமனங்கள் பெற்றுக்கொள்வதற்கு எவராவது இலஞ்சம் கேட்டால் முறையிடவும்: அங்கஜன்

அரச நியமனங்கள் பெற்றுக்கொள்வதற்கு எவராவது இலஞ்சம் கேட்டால் அவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அரச திணைக்கள ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரை பாவித்து சிலர் லஞ்சம் வாங்குகின்றார்கள். அவ்வாறு அரச நியமனத்தினை பெற்றுக் கொள்வதற்கு எவருக்கும் காசு கொடுக்கத் தேவையில்லை. அவ்வாறு எவராவது பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டிருந்தால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்வதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகர்களுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அரச நியமனங்கள் பெற்றுக்கொடுப்பதாக கூறி காசு வாங்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க முடியுமென்றும் அவர்  கூறினார். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரை பாவித்து லஞ்சம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையினை தடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றதாக அவர் மேலும் கூறினார்.

தோழர்பத்மநாபா தியாகிகள் தின நிகழ்வு சென்னையில்

naba day chennaiசென்னை புழல் அகதிகள் முகாமில் 19.6.13) காலை 7.30 மணியளவில் தியாகிகள் தினத்தை ஒட்டி ஈழவிடுதலைப் போராட்டத்தில் நீதிக்காகவும். ஜனநாயத்துக்காகவும், சுதந்திரத்துக்காகவும்,மனிஉரிமைகளுக்காகவும் மரணித்த தோழர்கள் பொதுமக்களுகாக அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இரண்டு நிமிட மௌன அஞ்சிலியுடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்த நிகழ்விற்கு பத்மநாபா-ஈ.பி,ஆர்.எல்.எப் தோழர்ஸ்ரனிஸ் தலைமை தாங்கினாh.; சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில காங்கிரசின் புழல் பகுதி பொறுப்பாளர் லாரன்ஸ் அழைக்கப்பட்டார். தோழர்பத்மநாபா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அவர் அஞ்சலி செலுத்தினார். ஈ.என்.டி.எல்.எப் தோழர்குட்டி தலைமையில் ஈ.என்.டி.எல்.எப் தோழர்கள் பங்குபற்றினர். புழல் முகாமில் உள்ள எமது தோழர்களும் பங்குபற்றினர். தியாகிகள் தின நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் தோழர்பத்மநாபா திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

jeudi 20 juin 2013

தனது அணு ஆயுதங்களை நெதர்லாந்தில் பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்கா!

அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் தான் நாடுகள் அனைத்துக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அமெரிக்கா மறைமுகமாகதனது அணு ஆயுதங்களை நெதர்லாந்தின் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக பதுக்கி வைத்துள்ளது. அந்த நாட்டு முன்னாள் பிரதமரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு சொந்தமான 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் நெதர்லாந்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து முன்னாள் பிரதமர் ரூட் லுபர்ஸ் தெரிவித்துள்ளார்.நேஷனல் ஜியாக்ரபி என்ற சேனலின் செய்தி படத்திற்காக பேட்டியளித்த லுபர்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.’1982 முதல் 94 வரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் பர்பண்ட் நகரில் உள்ள வோல்கெல் விமானப்படை தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

2013 வரை அவை இங்கேயே இருக்கும் என நான் நினைத்ததில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட 4 மடங்கு வீரியம் கொண்ட அணுகுண்டுகளை அமெரிக்கா நெதர்லாந்தில் பதுக்கி வைத்துள்ளது என்று நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அளித்துள்ள பேட்டி, அந்த வாதத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

1983ல் இந்தியாவினில் 6 ஆயிரம் போராளிகளையும் களத்தில் 15 ஆயிரம் போராளிகளையும் ஒருங்கிணைக்கவோ பேணவோ முடியாமல் போனமை ;சித்தார்த்தன்

சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார்"மத்திய அரசினது தலையீடு இல்லாத எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய சமஸ்டி தீர்வொன்றே எமக்கு பொருத்தமானது" என தெரிவித்தார் புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன்.
இன்று யாழப்பாணத்தினில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"எமக்கான நியாயமான தீர்வாக சமஸ்டி தீர்வே அமைய முடியும். ஆனால் இந்த இனவாத அரசு அவ்வாறான தீர்வொன்றை தரப்போவதில்லை என்பது நிச்சயம்" எனவும் அவர் தெரிவித்தார்.
26 வருடங்களிற்கு முன்னதாக தமிழ் தரப்புக்கள் நிராகரித்த 13வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபையை தப்ப வைத்துக்கொள்ள நாம் இப்போது போராட வேண்டியிருக்கின்றது.கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு சென்று  மாகாணசபைக்கான அதிகாரங்களை தக்க வைக்க டெல்லியில் பலரையும் சந்திக்க வேண்டியிருக்கின்றது.யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையெல்லாம் 13 பிளஸ் பற்றி கதைத்த மகிந்த இப்போது 13 இனில் இருப்பவற்றையும் வெட்டுவதில் முன்னுக்கு நிற்கின்றார்.
சர்வதேச அழுத்தங்கள் மூலம் தீர்வொன்று வருமென்பதில் சந்தேகமே.அவ்வாறான சூழல் இப்பிராந்தியத்தில் நிகழுமானால் அது அதிசயமே.ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இந்தியப்படையினர் நின்றிருந்த வேளை அமுல்படுத்த முடியாதவற்றை இப்போது செய்வதென்பது கேள்விக்குறியே என அவர் மேலும் தெரிவித்தார்.அத்துடன் தமிழர்கள் தற்போது பலவீனப்படுத்தப்பட்ட நிலையினிலேயே உள்ளனர்.இந்தியாவை பொறுத்த வரையினில் தமிழ் மக்களிற்கு தீர்வொன்றை பெற்றுத்தர வேண்டுமென்ற மனோ நிலையில் இப்போதிருப்பதாகவும் நான் கருதவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக பிரபாகரனுக்கும் எனக்குமிiடையே  ஒத்த கருத்துக்கள் இல்லாத போதும் பிரபாகரனை நான் பிரமிப்புடன்  மதிக்கின்றேன்.  30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார்.இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார்.பிரபாகரனுக்கு அஞ்சிப்பதுங்கிய மஹிந்த முதல் பல தெற்கு தலைவர்களை நான் நன்கு அறிவேன்.
முள்ளிவாய்க்காலில் போராட்டம் தோற்றுப் போய்விட்டதென்பதை தெரிந்திருந்தும் இறுதிக் கணங்களிலும் தற்கொலைப் போராளிகளாக வெடிக்கும் கரும்புலிகளை பிரபாகரனாலேயே உருவாக்க முடிந்திருந்தது. அதிலும் இந்தியாவிலும் கொழும்பிலுமென அனைத்து வசதி வாய்ப்புக்களுடனும் வாழ்ந்து வந்திருந்த போதும் பிரபாகரனது ஒற்றை உத்தரவினையடுத்து வெடித்து சிதறும் கரும்புலிகளை அவர் உருவாக்கியிருந்தார்.இத்தகைய இராணுவக் கட்டமைப்பு சார்ந்து  ஈழத்தை உலகை திரும்ப்பிப்பார்க்க வைத்த வகையில் அவர் மதிப்பிற்குரியவரேயென சித்தார்த்தன் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையினில் தெரிவித்தார்.
இந்தியாவினில் 6 ஆயிரம் போராளிகளையும் களத்தில் 15 ஆயிரம் போராளிகளையும் 1983 களிலேயே தமது அமைப்பு கொண்டிருந்த போதிலும் அவர்களை ஒருங்கிணைக்கவோ பேணவோ முடியாமல் போனமையாலேயே தாம் பின்னடைவை அடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.