samedi 22 juin 2013

88-89 காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர் ஜனாதிபதி ஆணைக்குழுக்களைப் பற்றி மக்கள் அறிவார்கள்: சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ

88-89 காலப்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சிக்கு எதிரான அரச நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர் உண்மைநிலை அம்பலமாவதைத் தடுப்பதற்காகவே மாத்தளை புதைகுழி தொடர்பில் ஜனாதிபதி சிறப்பு ஆணைக்குழு அமைத்துள்ளதாக அந்தப் புதைகுழி தொடர்பில் நீதிகோரும் காணாமல்போனோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
1988-89 காலப்பகுதியில் மாத்தளையில் காணாமல்போனோரின் குடும்பத்தினர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிவரும் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டை பிபிசியிடம் முன்வைத்தார்.ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பில் மக்கள் நன்கறிவார்கள் என்றும், பிரச்சனைகளை மூடி மறைப்பதற்காகவே அவ்வாறான ஆணைக்குழுக்கள் இதுவரை அமைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க உயர்பீடத்தில் இருக்கின்ற நபரே, மாத்தளை புதைகுழிக்குரிய காலம் என்று மதிப்பிடப்பட்டுள்ள காலத்தில் அங்கு இராணுவப் பொறுப்பில் இருந்துள்ளதாகவும் சட்டத்தரணி நாமல் கூறினார்.இது தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாட்டு மக்கள் மத்தியில் குரல்கள் வலுத்துள்ள நிலையில், மாத்தளை புதைகுழி தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை நடத்திவரும் நீதவானை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தோடு உண்மை நிலை வெளியில் வருவதைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைப்பதாக அறிவித்துள்ளதாகவும் காணாமல்போனோர் சார்பான சட்டத்தரணி கூறுகிறார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவை ரத்துசெய்துவிட்டு, அரச சாரபற்ற சுயாதீன குழுவொன்றின் மூலம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire