lundi 10 juin 2013

உளவு ரகசியங்கள் அமெரிக்க உளவுத்துறையான சீஐஏ-இன் முன்னாள் கணினி நிபுணர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான, அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
29- வயதான எட்வர்ட் ஸ்நோவ்டென் என்ற இந்த இளைஞன் அமெரிக்க உளவுத்துறையான சீஐஏ-இன் முன்னாள் கணினி நிபுணர்.அமெரிக்காவின் மிகவும் ரகசியமானதும் வெளியிடப்பட முடியாததுமான மிக நுணுக்கமான உலக கண்காணிப்பு செயற்திட்டத்தை அம்பலப்படுத்தியதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
கோடிக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய உலகளாவிய நாளாந்த தொடர்பாடல்களைக் கண்காணிக்கின்ற புலனாய்வு பொறிமுறை செயற்திட்டத்தையே அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.
அமெரிக்க உளவுத்துறையினர் அரச அதிகாரத்தை சீர்குலைத்து ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் த கார்டியன் நாளிதழின் இணையதளத்துக்கு அனுப்பியுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
மக்களின் அந்தரங்க வாழ்க்கையையும் இணையதள சுதந்திரம் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களையும் அழிப்பதற்கு தான் இடமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஒபாமா இவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஸ்நோவ்டென் விசனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் தன்மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்பார்கள் என்றும் தான் தற்போது ஹாங்காங்கில் இருப்பதாகவும் பேச்சு சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள எந்தவொரு நாட்டிலும் தஞ்சம் கோரவுள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அமெரிக்க நீதிவிசாரணைத் துறை அறிவித்துள்ளது.இப்போது வேறு நாட்டில் தஞ்சம் தேடுகிறார் எட்வர்ட் ஸ்நோவ்டென், சீஐஏ-இன் முன்னாள் கணினி நிபுணர்

Aucun commentaire:

Enregistrer un commentaire