vendredi 14 juin 2013

இனி ஜனாதிபதிக்கு கிடையாது' மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு-அமைச்சரவை

இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.
இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை முறைமை உள்ளடக்கிய 13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்ற அமைப்பது என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களையும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆராயும்.
இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழமை, ஜூன் 18ஆம் திகதி இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அரசாங்கம் முன்வைக்கும்.
இலங்கை அரசின் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாரந்தரச் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல அவர்கள் இதனை அறிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வரக்கூடிய ஜனாதிபதிகள் கூட தமிழர்களின் தாயகமாக கொள்ளப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்புக்களை அமைச்சரவையின் இந்த தீர்மானம் இல்லாமல் செய்வதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் கருத்து 
இலங்கை அமைச்சரவை, 13வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் மாகாணங்கள் ஒன்றிணைவதற்கு இருந்த அதிகாரத்தை ரத்து செய்யும் ஒரு புதிய சட்டத்திருத்த மசோதாவை இலங்கை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவும், மாகாண சபைகளின் சில அதிகாரங்களை மட்டுப்படுத்தும் பிற திருத்தங்களை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பவும் முடிவு செய்திருப்பது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், இன்றைய அமைச்சரவை கூட்டத்துக்கு தன்னால் போகமுடியவில்லை என்றும், ஆனால், இந்த திருத்தங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரும்போது, தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கப்போவதாகவும் கூறினார்.

மாகாணங்கள் இணைவு இனிமேல் கடினமாக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், இது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமல்ல பிற மாகாணங்களுக்கும் பொருந்தும் என்றார். ஆனாலும், இனப் பிரச்சினைக்கு தீர்வாக, சிறுபான்மை இனங்கள் வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ஓரளவாவது அதிகாரங்களைத் தந்த 13வது சட்டத்திருத்ததில் அரசு கைவைப்பது ,இந்த இனப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்காதா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், கிடைத்த வாய்ப்புகளை நழுவவிட்ட தமிழ்த் தலைமைகளும் இதற்குப் பொறுப்பு என்றார்.சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து
 இலங்கை அமைச்சரவையின் இந்த முடிவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக எதிர்த்திருக்கிறார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலக் கல் என்று கூறும் அவர், இந்த முடிவு வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதை நிராகரிக்கின்றது என்று குற்றஞ்சாட்டுகிறார்.
வடக்கு, கிழக்கு மக்கள் தாம் இணைந்து வாழ்வெதென நினைத்தாலும் அதனை எதிர்காலத்தில் செய்யாதவாறு தடுக்கும் இந்த முடிவு ஒரு சர்வாதிகார முடிவு என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
13வது சட்டத்திருத்தத்தில் உள்ளவற்றை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு நாடாளுமன்ற தெரிவுக்குழுவையும் தாம் நிராகரிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire