lundi 10 juin 2013

மீண்டும் பலிகொடுக்கவே கூட்டமைப்பு தயாராகின்றது மக்களை

அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதில் சம்பந்தன் பெயர் பெற்றவர். ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்று முள்ளிவாய்க்கால் தோல்விக்குப்பின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். சர்வதேச சமூகம் தீர்வுத் திட்டத்துடன் தயாராக இருக்கின்றது என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறினார். தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து இராணுவத்தை முற்றாக நீக்குமாறு நாங்கள் கோரவில்லை என்று நாடாளுமன்றத்தில் சொன்னார். இந்த அறிவிப்புகள் எல்லாம் மிகக் குறுகிய காலத்திலேயே நம்பகத்தன்மையை இழந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தமிழ் மக்களோ மீண்டும் வன்முறை அரசியல் இடம்பெறுவதை விரும்பவில்லை என்று இப்போது சொல்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு ஊடகவியலாயாளர்கள் மத்தியில் உரையாற்றியபோது இப்படிக் கூறினார். அவரது கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயங்களின்போது தெரிவித்த சில கருத்துகள் சம்பந்தனுடைய இக்கூற்றின் நம்பகத் தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. தனிநாடு தான் கூட்டமைப்பின் இலக்கு என்று இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் தெரிவித்த கருத்து பதிவாகியுள்ளது. அரசியல் தீர்வுக்கான கொள்கைத் திட்டத்தை வெளியிடாமல் நான்கு வருடங்களாகக் காலங்கடத்துவது தனிநாட்டுச் சிந்தனையின் தாக்கத்தினாலா என்ற கேள்வியும் எழுகின்றது.
வன்முறையை நிராகரித்துக்கொண்டு தனிநாட்டுக் கற்பனையில் மிதப்பது முரண்பாடானதாகத் தோன்றலாம். ஆனால், அதற்காக ஒரு மூலோபாயத்தை இவர்கள் பின்பற்றுவது போல் தெரிகின்றது. அரசாங்கம் தமிழ் மக்களை எவ்வளவு கடுமையான அடக்குமுறைக்கு உட்படுத்துகின்றதோ அவ்வளவுக்குத் தனிநாட்டுக்கான ஆதரவு பெருகும் என்று ஒரு காலத்தில் ஆயுதப் போராளிகள் கூறினார்கள். அந்தச் சிந்தனை கூட்டங்கூட்டமாகத் தமிழ் மக்களைப் பலிகொடுப்பதிலேயே முடிந்தது.
இப்போதும் அப்படியான சிந்தனை வழி நடத்துகின்றதா என்ற சந்தேகம் தோன்றுகின்றது. அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால், தீர்வுத் திட்டத்தை வெளியிடவில்லை. தீர்வை அடைவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. தீர்வு பற்றிப் பேசுவதற்குக் கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் நிராகரிக்கின்றார்கள். தமிழ் மக்கள் மென்மேலும் துன்பங்களை அனுபவிக்கும் பட்சத்தில் வெளிநாட்டுத் தலையீட்டின் மூலம் வன்முறை இல்லாமலே தனிநாட்டை அடையலாம் என்று கனவு காண்கின்றார்கள் போலும். இது மீண்டும் தமிழ் மக்களைக் கூட்டங்கூட்டமாகப் பலிகொடுப்பதற்கான முயற்சி. இவர்கள் எதிர்பார்ப்பது போல் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டுத் தனிநாட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு எந்த வெளிநாடும் தயாராக இல்லை. வீணாக கற்பனையில் மிதந்து கொண்டிருக்காமல் தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக்கொடுப்பதற்குக் கூட்டமைப்புத் தலைவர்கள் முன்வரவேண்டும். அரசியல் தீர்வுதான் தமிழ் மக்களுக்கான விமோசனம்.
மீண்டும் வன்முறை அரசியலை விரும்பமாட்டோம் என்று சொன்னவுடன் அரசியல் தீர்வு வரப்போவதில்லை. தீர்வுத் திட்டமொன்று அடிப்படையான தேவை. ஒரே தடவையில் அத்தீர்வைப் பெற முடியாதென்பதால் படிப்படியாக அதை வென்றெடுப்பதற்கேற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். அதேநேரம் இறுதித்தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் வகையில் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். அரசியல் தீர்வை அடையும் நடைமுறையில் இவை முக்கியமானவை. கூட்டமைப்பு இவற்றுள் ஒன்றையேனும் செய்யாமல் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை.
பதவியிலுள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வைப் பெறவேண்டும் என்று பல நாடுகள் பல தடவைகள் கூறிவிட்டன. அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதையே சொன்னார்கள். ஆனால், கூட்டமைப்பு நொண்டிச் சாட்டுகள் கூறிப் பேச்சுவார்த்தையை நிராகரிக்கின்றது. இனப்பிரச்சினையின் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒரு உதாரணம். தெரிவுக் குழுவுக்குச் செல்வதைக் கூட்டமைப்பு ஏதேதோ காரணங்கள் கூறித் தவிர்க்கின்றது. தெரிவுக் குழுவில் பங்கு பற்றாமலிருப்பதற்கு இவர்கள் கூறும் பிரதான காரணம் அது பதின்மூன்றாவது திருத்தத்தை வலுக்குறைப்புச் செய்துவிடும் என்பதாகும். இதுவும் ஒரு கற்பனைதான். சரியான சிந்தனையிலிருந்து தமிழ் மக்களைத் திசை திருப்புவதற்கான இந்தக் கற்பனையை அவிழ்த்து விடுகின்றார்கள்.
பதின்மூன்றாவது திருத்தத்தை வலுக்குறைப்புச் செய்துவிடும் என்று தெரிவுக் குழுவின் செயற்பாடு ஆரம்பிப்பதற்கு முன்னரே இவர்கள் எப்படிக் கூறலாம்? சரி, அப்படித்தான் என்றாலும் தெரிவுக் குழுவில் பங்குபற்றி அதன் தவறான நோக்கத்தை அம்பலப்படுத்தலாமே. அப்போது அரசாங்கம் தானே தற்காப்பு நிலைக்குத் தள்ளப்படும். கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் பங்கு பற்றாதிருப்பதற்கான உண்மைக் காரணம் வேறு. தெரிவுக் குழுவில் பங்குபற்றினால் தீர்வுக்கான ஆலோசனையை முன்வைத்தாக வேண்டும். அப்படி முன்வைப்பதற்கு இவர்களிடம் ஒரு ஆலோசனையும் இல்லையே. இந்த வெறுமையை மூடி மறைப்பதற்காகவே பதின்மூன்றாவது திருத்தத்தை வலுக்குறைப்புச் செய்துவிடும் எனக் கூறி மக்களைத் திசை திருப்புகின்றார்கள். மக்களுக்குப் பொய்யான தகவல்களைக் கூறும் செயல் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவோடு மட்டும் நிற்கவில்லை.
பதின்மூன்றாவது திருத்தத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சுரேஷ; பிரேமச்சந்திரன் மக்களைத் திசை திருப்பும் வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்தார். அக்கம் பக்கமாக இருக்கும் இரண்டு அல்லது மூன்று மாகாண சபைகள் தீர்மானமொன்றின் மூலம் ஒன்றாக இணைவதற்குப் பதின்மூன்றாவது திருத்தத்தில் ஏற்பாடு உண்டு என்றும், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணையக்கூடாது என்பதற்காக அரசாங்கம் அந்த ஏற்பாட்டை இரத்துச் செய்யப்போகின்றது என்றும் கூறினார்.
இரண்டு அல்லது மூன்று மாகாண சபைகள் தங்களுக்குள் தீர்மானமொன்றை நிறைவேற்றி ஒன்றாக இணைவதற்கான ஏற்பாடு எதுவும் பதின்மூன்றாவது திருத்தத்தில் இல்லை. நாடாளுமன்றம் சட்டமொன்றை இயற்றி அங்கீகாரம் அளிக்கும் பட்சத்தில் அக்கம் பக்கமாக உள்ள இரண்டு அல்லது மூன்று மாகாண சபைகள் ஒன்றிணையலாம் என்பதே பதின்மூன்றாவது திருத்தத்திலுள்ள ஏற்பாடு. நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடனேயே ஒன்றிணைவு ஏற்பட முடியும். வடமாகாண சபையும் கிழக்கு மாகாண சபையும் தங்களுக்குள் தீர்மானித்து ஒன்றிணையலாம் என்ற அபிப்பிராயத்தைத் தோற்றுவிக்கும் வகையில் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவித்திருப்பதைப் பிழையான தகவல்கள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சி என்றுதானே கூறவேண்டும்.
அரசியல் தீர்வு விடயத்திலும் கூட்டமைப்புத் தலைவர்கள் மக்களைத் தவறாக வழி நடத்துகின்றார்கள். அரசாங்கத்திடம் தீர்வு ஆலோசனைகளை முன்வைத்திருப்பதாகத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் அடிக்கடி கூறுவது வழக்கம். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் உயர் மட்டக் கூட்டம் பற்றி ஊடகவியலாளருக்கு விளக்கமளித்த மாவை சேனாதிராசா அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்த தீர்வு ஆலோசனைகள் பற்றியும் பேசினோம் என்று சொன்னார். மங்கள முனசிங்கவின் சிபார்சுகள், திஸ்ஸ விதாரணவின் அறிக்கை, சந்திரிகாவின் தீர்வுத் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். என்று கூட்டமைப்புத் தலைவர்கள் அடிக்கடி கூறுகின்றார்கள். அரசாங்கத்திடம் ஏற்கனவே, தீர்வு ஆலோசனைகளைச் சமர்ப்பித்திருந்தால் இப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே. நாங்கள் முன்வைத்த தீர்வை முன்வைக்க வேண்டும் என்று தானே சொல்ல வேண்டும். கூட்டமைப்பு பொய்யான தகவல்களைக் கூறி மக்களை ஏமாற்றுகின்றது எனப்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.
கூட்டமைப்புத் தலைவர்களுக்குத் தமிழ் மக்களின் விமோசனத்தில் உண்மையான அக்கறை இருக்குமேயானால் பிழையான தகவல்களைக் கூறி மக்களைத் தவறாக வழிநடத்துவதையும் போலியான நம்பிக்கைகளை வளர்ப்பதையும் உடனடியாக நிறுத்திவிட்டு அரசியல் தீர்வுக்கான முயற்சியில் ஆக்கபூர்வமாக ஈடுபட வேண்டும். அதற்கு இப்போது கிடைத்திருக்கும் நல்ல சந்தரப்பம் நாடாளுமன்றத் தெரிவுக் குழு. இந்தத் தெரிவுக் குழு பதின்மூன்றாவது திருத்தத்தை வலுக்குறைப்புச் செய்துவிடும் என்று வழமையான பாணியில் மக்களுக்குப் படங்காட்டாமல் அதில் பங்கு பற்றித் தீர்வுக்கான ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும். பதின்மூன்றாவது திருத்தத்தை வலுக்குறைப்புச் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுமேயானால் அதை எதிர்ப்பதற்கான இடமும் தெரிவுக்குழுவே தான். பதின்மூன்றாவது திருத்தத்துக்கு ஆதரவானவர்களும் தெரிவுக்குழுவில் இருப்பார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
அரசியல் தீர்வுக்கான முயற்சியை முன்னெடுப்பதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியான முறையில் பயன்படுத்தக் கூட்டமைப்புத் தலைவர்கள் தவறுவார்களானால் அதீதமான கற்பனையுடன் தமிழ் மக்களை மீண்டும் கூட்டங்கூட்டமாகப் பலிகொடுக்கத் தயாராகின்றார்கள் என்பதே அர்த்தம்.
(சங்கர சிவன் – 51)

Aucun commentaire:

Enregistrer un commentaire