lundi 17 juin 2013

சிறிலங்கா தமிழ் தலைவர்கள் மாநாடு இந்தியா தலையிட வேண்டும் - புதுடெல்லி மாநாட்டில் தீர்மானம்

இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை மீறும் சிறிலங்கா அரசாங்கத்தை வேடிக்கை பார்க்காமல், அதனைக் காப்பாற்ற இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனின் ஏற்பாட்டில், சிறிலங்கா தமிழ் தலைவர்கள் மாநாடு-2013 என்ற பெயரில், புதுடெல்லியில், இரண்டு நாள் மாநாடு நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. 

இந்த மாநாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின தலைவருமான வீ. ஆனந்தசங்கரி, வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாள், ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ஞா.ஞானசேகரன் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பலரும், பங்கேற்றனர். 

நேற்று இந்த மாநாட்டின் முடிவில், சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முழுமையாக இணைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னரே, அங்கு தேர்தல்களை நடத்த வேண்டும். 

காணி, காவல்துறை, கல்வி போன்ற உரிமைகளில், தமிழர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். 

இந்த அதிகாரங்கள் அனைத்தும் மாகாண அரசுக்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

தமிழர்களின் காணிகளை சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் கொள்வதும், தமிழர்களின் வாழ்வாதாரங்களை பறித்துக் கொள்வதும் தீவிரமடைந்து வருகிறது. 

இதை, சிறிலங்கா அரசு தடுத்து நிறுத்த வேண்டும். 

தமிழை ஆட்சி மொழி நிலையில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளையும், மாகாணசபையின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசாங்கம் கைவிட வேண்டும். 

1987ல் கையெழுத்திடப்பட்ட இந்திய – சிறிலங்கா உடன்பாட்டின்படி, கொண்டு வரப்பட்ட 13வது சட்டத்திருத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் மதிக்காமல் நடந்து வருகிறது. 

இதை, இந்தியா கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது. அந்த உடன்பாடு ஏற்பட, இந்தியாவே காரணம். 

எனவே, இந்தியாவே தலையிட்டு, அந்த உடன்பாட்டைக் காப்பாற்ற முன்வர வேண்டும். இவ்வாறு தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது. 

இந்த தீர்மானங்களின் பிரதிகளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோருக்கு வழங்கவும் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire