mercredi 26 juin 2013

தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 

கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

புனர்வாழ்வை நிறைவு செய்துகொண்ட நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழினி, அவரது தாயாரான சிவசுப்ரமணியம் சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. இருப்பினும், இத்தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்தார்.

தமிழினி தனது விடுதலையின் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதையே விரும்புகின்றார் என்று தெரிவித்த புனர்வாழ்வு ஆணையாளர், அவர் அனைவர் மத்தியிலும் பிரசித்தமடைவதை விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், முன்னாள் போராளிகள் பலர், எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், தமிழினிக்கும் அதற்கான வாய்ப்பினை வழங்க அரசியல் முக்கியஸ்தர்கள் முன்வந்துள்ளனர் என்றும் தேர்தலை இலக்கு வைத்தே அவரது விடுதலையும் அமையப்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஆனால், அந்த வாய்ப்பினை தமிழினி எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire