dimanche 9 juin 2013

மலையக மக்களின் தனித்துவம், கல்வி, 2 1/2 இலட்சம் வீடுகள் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை ஆராய மத்திய அரசின் குழு விரைவில் இலங்கை வரும்

T_and_S
இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை ஆராய மத்திய அரசின் குழு விரைவில் இலங்கை வரும் இலங்கையின் 13 ஆவது திருத்தச் சட்டம், மலையக மக்களின் தனித்துவம், வீடமைப்பு, தொழில் பயிற்சி உயர்கல்வி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் இந்திய மத்திய அமைச்சர் நாராயணசாமியுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்தியா சென்றுள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவினர் இந்திய தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.மலையகத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் லயன் காம்பராக்களுக்குப் பதிலாக இரண்டு இலட்சத்து ஐப்பதாயிரம் வீடுகளை இந்திய அரசு கட்டிக் கொடுக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக இந்திய அமைச்சரவையில் அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் இந்திய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்திய மத்திய அரசின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குழுவில் அங்கம் வகித்துள்ள இ. தொ. கா வின் உப தலைவரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் இந்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோரை அமைச்சர் ஆறுமுகன் தொடண்டமான் தலைமையிலான குழு சந்தித்து உரையாடியது.
இலங்கையின் 13ம் அரசியல் அமைப்பு, மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கான தனித்தன்மை, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பவற்றை கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கத்தால் மலையக மக்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.இன்று மலையக தேயிலை தோட்டங்கள் மங்கி வருகின்ற காலத்தில் மலையக இந்திய வம்சாவளியினர்களுக்கு அடிப்படை பிரச்சினைகள் உள்ளன. 1938 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இ. தொ. கா. வினால் மலையக சமூக மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டாலும் கூட மலையகத்திலுள்ள படித்த இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கலாசாலைகள் அமைத்து கொடுக்க வேண்டும்.
அது மட்டுமல்லாது நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தமிழ் பாடசாலைகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். இவற்றில் ராகலை, பதுளை பகுதிகளிலுள்ள பாடசாலைகள் குறிப்பிடத்தக்கவை.ஹட்டனில் கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்கள் பலர் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். அதேபோல் மேலும் கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.மேலும் அமைச்சர் கூறுகையில் வடகிழக்கு மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதேபோல மலையக மக்களுக்கும் மாறுபட்ட பிரச்சினைகள் எழுகின்றன. மலையக மக்களுடைய வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வேலை செய்பவர்களின் தொகை குறைந்துள்ளது. இவர்களின் வாழ்க்கை முறை மாறி வருவதாகவும்,
இதற்கு வீடமைப்பு மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டார். ஏற்கனவே 4,000 வீடுகள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன. மலையக தோட்டங்களில் இருக்கும் லயன் முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. தேயிலை.இறப்பர் தோட்டங்களை கிராமங்களாக கொண்டு தனி தனி வீடுகள் அமைக்க இந்திய அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எடுத்து கூறினார் எனவும் 2 லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அது சம்பந்தமாக இந்திய அமைச்சரவையில் சமர்ப்பித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் கூறப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் குழு மலையக இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை ஆராய அண்மையில் இலங்கை வரவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவளை இந்தியாவில் இந்திய காங்கிரஸ் பழம்பெரும் கட்சியாகவுள்ளது போன்று இலங்கையில் பழம்பெரும் கட்சியாக இ. தொ. க. உள்ளதென்றும் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire