mercredi 12 juin 2013

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கைவைக்கும் உரிமை அரசுக்கும் தேரர்களுக்கும் கிடையாது; தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி

Anandasangary'மாகாணசபைத் தேர்தல் முறைமையானது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் தெரியாத தேரர்களினால் மாத்திரமன்றி இதில் கைவைக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்கு கூட கிடையாது' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

'இந்த நாட்டில் சிறுபான்மையினர் இல்லை என்று அரசாங்கம் சொல்லி வருகின்றது. அவ்வாறு சிறுபான்மை இனத்தினர் இல்லை என்ற உணர்வை அரசாங்கமே தனது நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நாட்டில் இருபது வருடங்களாகவே ஜனநாயகம் இல்லை. காசு கொடுத்து அனைவரையும் அழைத்துவந்து மூன்றில் இரண்டைக் காட்டி ஆட்சி நடத்துப்படுகின்றது இந்த அரசாங்கம். ஆனால், ஜனாதிபதியிடம் கூறியுள்ளேன், நாட்டை உம்மிடம் தந்துள்ளதே தவிர உம் சீடர்களிடம் தரவில்லை. நாட்டை நீர் பாதுகாக்க வேண்டுமே தவிர உமது சீடர்கள் பாதுகாக்க கூடாது. நாட்டை உம் சீடர்கள் அழிக்கின்றார்கள்' என்று கூறியதாக அவர் சுட்டிக் காட்டினார்.

'2010ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்பு இனம் அழிந்து போகின்றது. ஒற்றுமையாக செயற்பட வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம்; என கேட்ட போது யாரும் ஒத்துவரவில்லை. நான் பொய் பேசுவதில்லை, இலஞ்சம் பெற்றதுமில்லை. அதனால் நிறைய வாய்ப்புக்களை இழந்துள்ளேன்' என்றார்.

 'ஊடகத்தொழில் என்பது இன்று ஒரு பயங்கரமான தொழிலாக இந்த நாட்டில் மாறிவிட்டது. இங்கு நடக்கும் அனைத்து விடயங்களையும் 10 நிமிடங்களில் உலகம் பூராகவும் வெளிப்படுத்தக்கூடிய நிலையில் இன்றைய விஞ்ஞான உலகம் வளாந்து நிக்கின்றது.

இந்த வகையில் ஊடகங்கள் உண்மையான விடயங்களை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும். இவ்வாறான பயங்கரமான தொழிலை மேற்கொள்பவர்கள் தாங்கள் எழுதுவதை நன்றாக யோசித்து எழுத வேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.

'1959ஆம் ஆண்டு தொடக்கம் நான் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றேன். 60 வருட கால அரசியல் அனுபவத்தினை நான் பெற்றிருக்கின்றேன். இந்த அரசியலில் நான் நிறைய அடிவாங்கயிருக்கின்றேன். என்னை அழிப்பதற்கு பலர் முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் என்னை அழிக்க முடியவில்லை.  என்னை எவராலும் அழிக்க முடியாது.

இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு எவ்வளவு நல்ல குணங்கள் இருக்கின்றதோ அதற்குட்பட்டவனாகவே நான் வாழந்து வருகின்றேன் என்னை அழிப்பற்கு ஆண்டவன் ஒருவனால் தான் என்னை அழிக்க முடியும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'நேர்மையாக இருந்த காரணத்தினால் பல வாய்ப்புக்களை நான் இழந்திருக்கின்றேன். கிளிநொச்சி இன்று ஒரு சிறந்த நகரமான விளங்குவதற்கு நானும் ஒரு காரணம். நான் இல்லாவிட்டால் கிளிநொச்சி இந்தளவிற்கு வந்திருக்காது' என்றார்.

'கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இருப்பினும், யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தின் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரும்பியது. தேர்தல் முடிந்த பின்னர் எல்லோரும் ஒன்று சேரவேண்டும் என்று சம்மந்தன் அழைப்பு விடுத்திருந்தார்' என்றார்.

'இன்று கூட்டமைப்பு வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த பயணங்களின் போது எனக்கு ஒரு அழைப்பையேனும் விடுப்பது கிடையாது. அல்லது வெளிநாட்டில் கதைப்பதற்கு ஏதாவது யோசனை வைத்திருக்கின்றீர்களா என்றுகூட சம்மந்தன் கேட்பது கிடையாது.  ஆனால் நாடாளுமன்றத்தில் பேசும் போதும் மட்டும் ஆனந்த சங்கரி இவ்வாறு ஊடகங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று தெரிவிப்பார்' என அவர் சுட்டிக்காட்டினார்.

'இந்த நாட்டில் சிறுபான்மையினர் இல்லை என்று நாங்கள் சொல்ல வேண்டும். அத்தகைய உணர்வை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். மாகாணசபைத் தேர்தல் முறைமையானது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் தெரியாத தேரர்களினால் மாத்திரமன்றி இதில் கைவைக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்கு கூட கிடையாது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire