dimanche 16 juin 2013

டில்லி மாநாட்டில் பெருமாள், சங்கரி வலியுறுத்தல் 13ஐ காப்பாற்ற இந்தியா முன்வர வேண்டும்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் புதுடில்லிக்கும் பயணமாகியுள்ளார். 

இந்நிலையில், இந்தியா - இலங்கை ஒப்பந்தம் தொடர்பான மாநாடொன்று புதுடில்லியில் நடைபெற்ற நிலையில் அதில் வரதராஜப் பெருமாளுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமாக ஆனந்தசங்கரியும் பங்கேற்றுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதன்போது 'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது எனவும் இந்த திருத்தச் சட்டம் ஏற்படக் காரணமாக இருந்த இந்தியா, இலங்கையுடனான தனது ஒப்பந்தத்தைக் காப்பாற்ற முன்வர வேண்டும்' என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அச்செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. 

இந்தியா - இலங்கை ஒப்பந்தம் தொடர்பான மாநாடு ஒன்று, புதுடில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த மாநாட்டில், இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமாக ஆனந்தசங்கரி, வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். 

இந்த மாநாட்டின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், இந்த தீர்மானங்கள் அடங்கிய நகல்களை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர்  சல்மான் குர்ஷித் ஆகியோரிடம் கையளிப்பதாகவும் இம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த மாநாட்டின் போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு, 'கடந்த, 1987ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட, இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை, நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளில், இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதை வேடிக்கை பார்க்காமல், இந்திய மத்திய அரசு தலையிட வேண்டும். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முழுமையாக இணைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இணைத்த பிறகே, அங்கு தேர்தல்களை நடத்த வேண்டும். நிலம், பாதுகாப்பு, கல்வி போன்றவை தொடர்பான உரிமைகளில், தமிழர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த அதிகாரங்கள் எல்லாம், மாநில அரசுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

தமிழர்களின் நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் கொள்வதும், தமிழர்களின் வாழ்வாதாரங்களை பறித்துக் கொள்வதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை, இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழை ஆட்சி மொழி அந்தஸ்தில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளையும், மாகாண சபை அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். 

கடந்த, 1987இல், இந்தியா - இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு மதிக்காமல் நடந்து வருகிறது. இதை, இந்தியா கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது. அந்த ஒப்பந்தம் ஏற்பட, இந்தியாவே காரணம். எனவே, இந்தியாவே தலையிட்டு, அந்த ஒப்பந்தத்தை காப்பாற்ற முன்வர வேண்டும்' என்று மேற்படி தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire