mercredi 26 juin 2013

இந்தியாவின் மோசமான வெளிவிவகாரக் கொள்கையே, சிறிலங்கா மோசமடையக் காரணம்

இந்தியாவின் மோசமான வெளிவிவகாரக் கொள்கையே, சிறிலங்காவுடனான உறவுகள் மோசமடையக் காரணம் என்று இந்தியாவின் முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த்சிங் குற்றம்சாட்டியுள்ளார். 

புதுடெல்லியில் இன்று சியாம் பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ‘தேசிய அடையாளம் மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்‘ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் அங்கு உரையாற்றும்போது, 

“இந்தியாவின் மோசமான வெளிவிவகாரக் கொள்கையே, சிறிலங்காவுடனான உறவுகள் மோசமடைந்ததற்குக் காரணம். 

இந்தியா ஊக்குவித்த விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே, சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையினரைப் போரிட வைத்தது,எமது மோசமான அனுபவத்துக்கு ஒரு உதாரணம். 

எல்லை விவகாரங்களில் சீனா, பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தவறான வெளிவிவகாரக் கொள்கைக்கு உதாரணமாகும். 

சீனா தனது உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைகளை வலுப்படுத்திக் கொண்டிருந்த போது, உலகில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதே நேருவின் முதல் கவலையாக இருந்தது. 

பெரும் பிரதேசத்தைக் கொண்ட, ஆனால் சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளின் பின்னரும் இன்னமும் தெளிவாக எல்லைகளை வரையறுக்காத உலகின் ஒரே நாடாக இந்தியாவே இருக்கிறது. 

2002ம் ஆண்டு வரை இந்தியாவுக்குச் சொந்தமாக எத்தனை தீவுகள் உள்ளன என்ற விபரமே தெரியாது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஜஸ்வந்த்சிங், 1998ம் அண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை இந்தியாவில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தில், வெளிவிவகார, நிதி, பாதுகாப்பு அமைச்சர் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire