இலங்கையில் மாகாணசபை முறைமையை ஏற்படுத்திய அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை ஒழித்துவிட வேண்டும் என்று ஆளுந்தரப்பில் உள்ளவர்களே கடந்த சில நாட்களாக கூறிவருகின்ற நிலையில், அப்படியான ஒரு எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
1987-ம் ஆண்டு உருவான இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் அரசியலமைப்புக்கு ஒழித்துவிடவேண்டும் என்று ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பங்காளிகளாக உள்ள சில கடும்போக்கு தேசியவாத கட்சிகள் பிரசாரம் செய்துவருகின்றன.
ஜனாதிபதியின் சகோதரர்களான பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்களும் 13-ம் திருத்தத்தை ஒழிப்பது பற்றிய கருத்துக்களுக்கு அரசு ஆதரவளிப்பதாக இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.
இந்த நிலைமையிலேயே, இதுபற்றி அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்ன என்று இன்று வியாழக்கிழமை நடந்த அமைச்சரவை நிலைப்பாடுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, '13-வது திருத்தம் என்பது அரசியலமைப்பின் ஓர் அங்கம். அதனை பாதுகாப்பதற்கு நாடாளுமன்றத்தில் இருக்கின்ற அனைவரும், குறிப்பாக அரசாங்கம் என்ற ரீதியில் நாங்களும் கடமைப்பட்டிருக்கிறோம்' என்று கூறினார்.
ஜனாதிபதி 13 பிளஸ் என்று கூறியது நாடாளுமன்றத்திற்கு செனட்சபை ஒன்றை உருவாக்குவதைத் தான்': கெஹெலிய
அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்கும் அப்பால் செல்லும் அதிகார பரவலாக்கல் மூலம் நாட்டின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதானே அரசின் நிலைப்பாடு என்று ஊடகவியலாளர்கள் இங்கு கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், '13 பிளஸ் என்பதன் மூலம் செனட் சபை ஒன்றை, அதாவது நாடாளுமன்றத்தில் மேலவை ஒன்றை ஏற்படுத்தி, சிதறிகிடக்கும் பிராந்தியங்களின் தலைவர்களை மத்திய அதிகார மையத்துடன் ஒன்றிணைக்கும் திட்டத்தைத் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் டில்லியில் நடந்த கூட்டமொன்றில் தெளிவாக விளக்கியிருந்தார்'என்று கூறினார்.
எனினும் நாட்டில் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பது அவசியம் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருப்பதாக அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.
அப்படியான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதம் கிடைத்துவிட்டதா என்று பிபிசி சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்படியான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதம் கிடைத்துவிட்டதா என்று பிபிசி சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், 'கடந்த 6 மாதங்களாக இதுபற்றி பேசப்பட்டுவருகிறது. இந்தியாவுக்கு போகிறார்கள்,. வருகிறார்கள் அங்கு ஆலோசனை பெறுகிறார்கள். சில நேரங்களில் (நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு) வருவதாகக் கூறுகிறார்கள். சில நேரங்களில் இவர்களுடன் பேசி வேலை இல்லை என்றும் கூறுகிறார்கள். எல்லாக் கட்சிகளும் அங்களும் வகிக்கும் நாடாளுமன்றத்தில் பேசாவிட்டால் எங்கு பேசுவது, யாருடன் பேசினாலும் இறுதியில் நாடாளுமன்றத்துக்கு வந்துதானே ஆகவேண்டும்' என்று கூறினார்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்துகின்ற அரசாங்கம், இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசு அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்று பிபிசி மீண்டும் கேள்வி எழுப்பியது.
'எதிரில் இருக்கின்ற பிரதானமான அரசியல் கட்சி என்ற ரீதியில் டிஎன்ஏக்கு அரசாங்கம் முடியுமான வாய்ப்புகளை வழங்கும். அப்படி இல்லாவிட்டால், இருக்கின்ற நிலைமைகளை கருத்தில்கொண்டு,நாட்டில் பல்வேறு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வுகாண்பது என்று ஆராய்வதற்காக. பொருத்தமானவர்கள் என்று அரசாங்கம் கருதுகின்ற தரப்பினருடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும்' என்று இலங்கை அரசின் அமைச்சரவை நிலைப்பாடுகளை அறிவிக்கும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதற்குப் பதிலளித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire