சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு செயற்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடரும். அதன் பின்னர் செயற்பாட்டை தொடர்வதில் சிக்கல்கள் உள்ளன. காரணம் இனிவரும் காலங்களில் ஈரானிடம் எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் சிக்கல்கள் உள்ளன. எனவே மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆலோசித்துவருகின்றோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு செயற்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என்று அதன் செயற்பாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நாளையுடன் ( இன்று) முடிவடையும் என்று கூறப்பட்டுவந்தாலும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஈரானிடம் இருந்து அரசாங்கம் கொள்வனவு செய்த எரிபொருளையே சப்புகஸ்கந்தையில் சுத்திகரிப்பு செய்துவந்தது. இந்நிலையில் தற்போது ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அந்நாட்டிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்துவருகின்றது. தற்போதைக்கு ஓமானிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்யப்படுகின்றது. மேலும் ஈரான் மீதான பொருளாதார தடையினால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் தடைவிதிக்க பங்களிப்பு வழங்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுடன் பேச்சு நடத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire