சர்ச்சையில் சிக்கியுள்ள கூடங்குளம் அணு உலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல்களையும் தாக்குப்பிடிக்கக்கூடிய அளவுக்கு, அந்த அணு உலை நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அணு உலைக்கு எதிரான வழக்கு விசாரணையில், கடந்த வாரம் மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.
அதேநேரத்தில் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
செவ்வாயன்று, மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் வஹன்வதி வாதிட்டார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக, ஜெனரேஷன் 3 ப்ளல் என்ற நவீன தொழில்நுட்பம் கூடங்குளம் அணு உலையில்தான் பயன்படுத்தப்படடிருப்பதாக அவர் தெரிவித்தார்.
"விமானங்கள், ஏவுகணைகள் போன்றவை தாக்கினாலும் கூட அந்த அணு உலைக்கு பாதிப்பு வராது. விபத்து ஏற்பட்டாலும் கூட அணு உலை தானாகவே இயக்கத்தை நிறுத்திவிடும். அதேநேரத்தில் குளிரூட்டும் இயந்திரங்கள் இயங்கத் துவங்கிவிடும். பேட்டரி மற்றும் ஜெனரெட்டர்களுடன் 24 மணி நேரமும் கூடுதல் மின் வசதிக்கும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று வஹன்வதி தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, கூடுதலாகப் பரிந்துரைக்கப்பட்ட 17 பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றவில்லை என்பது தற்போது முக்கியக் குற்றச்சாட்டாக இருக்கிறதே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
"அவை, ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்தான். அவை 6 மாதத்தில் இருந்து பல்வேறு காலவரையறைகளாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன", என்றார் வஹன்வதி.
Aucun commentaire:
Enregistrer un commentaire