samedi 20 octobre 2012

ஈழத்தின் முதல் எதிரியே ஜெயலலிதாதான்! திருமாவளவன்


 20 ஒக்ரோபர் 2012, 
பேசினால் உள்ளே வைத்து விடுவார்கள் என்று வைகோ முதல் சீமான் வரை எல்லோருமே ஜெயலலிதாவுக்குப் பயப்படுகிறார்கள். ராஜபக்சவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ் ஈழத்தின் முதல் எதிரியே ஜெயலலிதாதான். இவ்வாறு விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடன் இதழுக்கு வழங்கிய பேட்டியில் இலங்கை தொடர்பான சில பகுதிகள்:
கேள்வி: தி.மு.க. கூட்டணியில் நீங்கள் தொடர்வதற்கு வலுவான காரணம் கூற முடியுமா?
பதில்: என்னை ஜெயலலிதா அழைத்து, நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டா கலைஞருடன் சேர்ந்தேன்? ஜெயலலிதா எங்களை வேண்டாம் என்று சொன்னதால்தான் கலைஞருடன் போனேன். நாங்கள் நடுத்தெருவில் நிற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட பிறகுதான் கலைஞருடன் சேர்ந்தேன்.
இப்போதும் சரி, எப்போதும் சரி... தமிழ் ஈழ விஷயத்தில் கலைஞர் எந்த முடிவு எடுத்தாலும் அறிக்கை விட்டாலும் அதில் என்பங்கு கண்டிப்பாக இருக்கும். கலைஞரைச் சுற்றிலும் உள்ளவர்கள் அவரை செயல்பட விடாமல் வைத்திருக்கிறார்கள்.
நான் மேடையில் வைக்கும் கோரிக்கைகளால்தான் கலைஞர் தூண்டி விடப்பட்டு, ஈழத் தமிழர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமே என செய்கிறார்.
தி.மு.க-வில் உள்ளவர்களுக்கே இது பிடிக்கவில்லை. தி.மு.க-வை விட்டால் வேறு மாற்று என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஈழத்தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி தி.மு.க-வுடன் சேரக்கூடாது என்றால், சாதி ஒழிப்புப் பிரச்னையில் நாங்கள் எந்தக் கட்சியுடனும் சேரவே முடியாதே?
கேள்வி: ஈழத்துயரம் நிகழ்ந்தபோது கருணாநிதிதானே மத்திய அரசில் இருந்தார்?
பதில்: தி.மு.க. விலகி இருந்தால் அ.தி.மு.க. உள்ளே நுழைந்திருக்கும். ஜெயலலிதா அதற்குத் தயாராகத் தான் இருந்தார். வெளியே வந்திருந்தாலும், போர் நின்றிருக்க வாய்ப்பு இல்லை.
ஈழத்தமிழர் விடயத்தில் கலைஞரை மட்டுமே குறிவைத்துத் தாக்க வேண்டாம். பேசினால் உள்ளே வைத்து விடுவார்கள் என்று வைகோ முதல் சீமான் வரை எல்லோருமே ஜெயலலிதாவுக்குப் பயப்படுகிறார்கள்.
ராஜபக்சவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ் ஈழத்தின் முதல் எதிரியே ஜெயலலிதா தான்!
கேள்வி: நாம் ஒன்றுபட வேண்டும் என்று நீங்கள் பேசியதற்கு, 'துரோகிகளுடன் கைகோக்க முடியாது’ என, வைகோ பதிலடி கொடுத்திருக்கிறாரே?
பதில்: ஒருமித்த கருத்து உடையவர்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என்பதுதான் நான் வைத்த கோரிக்கை. ஈழம் முதல் காவிரி வரை ஒரேகருத்தை வலியுறுத்தும் நானும் வைகோவும் இன்னும் கைகோக்க முடியவில்லை. துரோகிகள் தான் காரணம் என்கிறார் வைகோ. அந்தத் துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காண்பதுதான் பிரச்சினை.
தன்னை 18 மாதங்கள் சிறையில் வைத்து அழகு பார்த்த ஜெயலலிதாவுடன் வைகோவினால் சேரமுடிந்தது. ஆனால், 18 ஆண்டுகள் அவரை எம்.பி-யாக்கி அழகுபார்த்த கலைஞருடன் ஏன் கைகோக்க முடியவில்லை? எனக்கு ஓட்டுப் போட்டனர் என்ற காரணத்துக்காக என் தொகுதி மக்களின் வீடுகளில் புகுந்து வெட்டித் தீயிட்டு கொளுத்தினார் பா.ம.க-வின் குரு. ஆனால், நாங்கள் ஈழத்துக்காகவும் இனத்துக்காகவும் பா.ம.க-வுடன் சேரவில்லையா?
கேள்வி:  தமிழக அரசியல்வாதிகள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?
பதில்: ஜெயலலிதா, கலைஞரை விடுங்கள், சிறிய கட்சித் தலைவர்கள்கூட எங்களைப் புறக்கணிக்கிறார்கள். இது திட்டமிட்டு நடக்கிறதா அல்லது எதேச்சையாக நடக்கிறதா என்று தெரியவில்லை.
ஆனால், இன்னும் ஒரு தலைவராக என்னை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். இன்னமும் கையறு நிலையில்தான் இருக்கிறேன். எந்த உள்நோக்கத்தின் அடிப்படையில் என்னை ஒதுக்குகிறார்கள் என்பதே தெரியவில்லை.
இந்தத் தேர்தலுக்குத் திருமா தேவையா... இல்லையா என்ற அடிப்படையில்தான் முடிவு எடுக்கிறார்கள். எங்களை முன்னிறுத்தவோ, தலைமை ஏற்கவோ யாரும் தயாராக இல்லை. என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire