ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி இடம்பெறவுள்ள புவியியல் கால மீளாய்வுக் கூட்டத்திற்காக இலங்கை சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்பெயின், கனடா, இங்கிலாந்து, மெக்சிகோ, அமெரிக்கா, செக்.குடியரசு, ஹாலந்து, டென்மார்க் போன்ற நாடுகளே இலங்கையின் அறிக்கை தொடர்பாக ஏற்கனவே கேள்விகளை எழுப்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பது, உயர்பாதுகாப்பு வலயங்கள், ஊடகத்திற்கான அச்சுறுத்தல்கள், 2006ஆம் ஆண்டு திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட மனித உரிமை விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாமை, மூதூரில் 17 பிரான்ஸ் தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலை, சன்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, கேலிச்சித்திர ஓய்வியர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக இந்த நாடுகள் விசாரணை தேவை என்று வலியுறுத்தி வருகின்றன.
செனல் 4 ஒளிப்பரப்பிய வீடியோ தொடர்பான விசாரணை, தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான இருதரப்பு பேச்சுகளில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வரும் இழுபறி நிலை ஆகியவை குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுதற்கான செயற்திட்டத்தில், உள்ளடக்கப்படாத பரிந்துரைகளின் நிலை என்ன என்று பிரித்தானியாவும், அமெரிக்காவும் கேள்விகளை எழுப்பியுள்ளன.
உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக சுதந்திர விசாரணை மூலம் இலங்கை அரசு எப்போது பொறுப்புக்கூறபோகிறது என்று கனடா கேள்வி எழுப்பியுள்ளது.
இதனால் இலங்கை இந்தக் கூட்டத்தில் பலமுனைகளிலிருந்தும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி நடக்கவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தை அடுத்து நவம்பர் 5ஆம் திகதி தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire