mardi 23 octobre 2012

தமிழ் அமைச்சர் இல்லாத குறையை நிவர்த்தி செய்வேன் - நஜீப் ஏ. மஜீத்


நான் அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செயற்படவுள்ளேன். கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையிலே தமிழர் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை. அந்தக் குறையினை என்னால் நிவர்த்தி செய்ய முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் ஏற்பாடு செய்திருந்த திவிநெகும அறிவூட்டல் கருத்தரங்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளரும் அம்பாறை மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபருமாகிய ஏ.ஏ.அசீஸ் தலைமையில் அம்பாறை நகரசபை மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
‘இந்த கிழக்கு மாகாணத்திலே ஓடிய இரத்த ஆறு எமது ஜனாதிபதியினால் 2009ம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்புதான் அபிவிருத்திப் பணிகள் இங்கு நடைபெறுகின்றது என்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஆகவே எங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கின்றது. நாங்கள் மக்களின் சேவகர்கள். மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு சேவைசெய்வது எமது கடமை என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒருபோதும் எஜமானர்கள் என்ற எண்ணத்தில் இருக்கக் கூடாது.
உங்களுக்கு தெரியும் கடந்த 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த விகிதாசார பிரதி நிதித்துவத்தின் மூலமாக உள்ளூராட்சி மன்றங்களில் மட்டுமல்ல மாகாண சபைகளிலே, பாராளுமன்றத்திலே இந்த தேர்தல் முறையிலே பல மாற்றங்களும் பல அசௌகரியங்களும் எங்களுக்கு ஏற்பட்டதை நாங்கள் அறிவோம்.
ஆகவே தான் இந்தத் திருத்தம் மிக முக்கியமானது. இன்றைய ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலோடு எமது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் திவிநெகும என்ற திட்டத்தை இந்த நாட்டிலே அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் அடிப்படையிலே நிச்சயமாக வறுமை ஒழிப்பு திட்டத்தை நாங்கள் வெற்றிகொள்ள முடியும் என்ற வகையிலேதான் இத்திட்டத்திற்கு கிழக்கு மாகாண சபையிலே நாங்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளோம்.
நான் அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செயற்படவுள்ளேன். கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையிலே தமிழர் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை. அந்தக் குறையினை என்னால் நிவர்த்தி செய்ய முடியும். தமிழ் மக்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றனவோ அவைகளை அறிந்து எல்லாவற்றையும் நிறைவேற்றக் காத்திருக்கின்றேன் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்’ எனத் தெரிவித்துள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire