mardi 23 octobre 2012

ஒழுங்குபடுத்த முன்வரவும்; கல்வி அமைச்சை கோருகிறார் அனோமா திஸாநாயக்க

news
நாட்டிலுள்ள அனைத்து சர்வதேசப் பாடசாலைகளையும் ஒழுங்குபடுத்த கல்வியமைச்சு முன்வர வேண்டும் என்று  சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
கம்பனி சட்டத்துக்குக் கீழ் பதிவு செய்து ஒழுங்குபடுத்தப்பட்டு வரும் சர்வதேசப் பாடசாலைகள் யாவும் நேரடியாகக் கல்வியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். எனது கோரிக்கைகளை கல்வியமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளேன்.

சர்வதேசப் பாடசாலைகளின் பதிவு மற்றும் முகாமைத்துவத்தில் கல்வி அமைச்சு நேரடியாக தலையிடுவதன் மூலம் அங்கு சிறுவர்களுக்கெதிராக இடம்பெற்று வரும் உரிமை மீறல்களுக்குத் தீர்வு காணமுடியும்.

இன்று பணம் சம்பாதிப்பதற்குரிய ஓர் உபாயமாக சிறுவர்களை மையப்பொருளாக வைத்துப் பலர் வியாபாரங்களை ஆரம்பிக்கின்றனர். சர்வதேசப் பாடசாலைகள் குறித்து என்னிடம் பல மாணவர்கள் தமது பெற்றோருடன் வந்து முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். இந்த முறைப்பாடுகள் சிறுவர் உரிமைகளை மீறும் செயற்பாட்டுடன் தொடர்புடையவை ஆகும்.

இத்தகைய பாடசாலைகளில் ஓரளவு ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் பூரண கல்வியறிவு, தகுதி, அனுபவம் ஆகியவற்றைக் கொண்டிராமை காரணமாக மாணவர்களின் எதிர்காலம் வீணாக்கப்படுகின்றது.

மாணவர்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை பெற்றுத் தருவதற்கேற்ற வகையில் கல்வி அமைச்சு   உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி அமைச்சின்  செயற்பாடுகளுக்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.      

Aucun commentaire:

Enregistrer un commentaire