lundi 2 avril 2012

தமிழ்நாட்டில் மூன்று ரகசிய முகாம்களில் புலிகளுக்கு பயிற்சி ?

தமிழ்நாட்டில் மூன்று ரகசிய முகாம்களில் விசேட ஆயுதப் பயிற்சி பெற்ற சுமார் 150 பயங்கரவாதிகள் இலங்கைக்குள் மீனவர்கள் என்ற போர்வையில் ஊடுருவியிருப்பதாகவும், இவர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பதுங்கியிருப்பதாகவும் , நாட்டை சீர்குலைக்க இவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும், இலங்கையின் ஆங்கில நாளேடான “ஐலண்ட்” வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று கூறுகிறது. இலங்கையின் உளவுத்துறையை மேற்கோள் காட்டும் இந்த பத்திரிகைச் செய்தி, தற்போது நடந்து கொண்டிருக்கும் நல்லிணக்க வழிமுறையைக் குலைப்பதே இந்தப் பயங்கரவாதிகளின் நோக்கம் என்றும், சமீபத்தில் திருகோணமலையில் வெட்டிக்கொல்லப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயக்கட்சியின் உறுப்பினர் கொலையின் பின்னணியில் இருந்த மூன்று பேர் விடுதலைப்புலிப் போராளிகள் என்றும் கூறுகிறது. போர் முடிந்த போது தமிழகத்துக்கு தப்பியோடியதாக இந்தப் போராளிகள் விசாரணையில் ஒப்புக்கொண்டதாகவும், அங்கே ரகசிய முகாம்களில் தங்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியதாக இந்த செய்தி கூறுகிறது. திருகோணமலை சம்பவத்தைத் தவிர,இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமீபத்தில் நடந்த பல கொலைகளுடனும் இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று இந்தச் செய்திகள் கூறுகின்றன. ஆனால், இலங்கையிலிருந்து வெளிவரும் மற்றொரு நாளேடான, “டெய்லி மிர்ர்” திருகோணமலை கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள்தானா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதாக மட்டும் கூறுகிறது. இந்தியா மறுப்பு இந்த செய்திகளைப் பற்றி, இலங்கையிலிருக்கும் இந்தியத்தூதரகம் , வெளியிட்டிருக்கும் மறுப்பறிக்கை ஒன்றில், தமிழ் நாட்டில், விடுதலைப்புலிகளுக்கான பயிற்சி முகாம்கள் இருப்பதாக கூறப்படுவதை நிராகரிக்கிறது. இந்த செய்தி முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படையற்றது என்று அந்த அறிக்கை கூறுகிறது. இந்த இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட துறைகளும் இது போன்ற விஷயங்களில் தொடர்ந்து ஒத்துழைத்துக்கொண்டிருக்கின்றன, இது போன்ற ஒரு தகவல் இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்படவேயில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது. "செய்தி ஆதாரமற்றது"- தமிழகக் காவல்துறை தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் கே.ராமானுஜம் இந்தச் செய்தியை மறுத்து வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், இந்தச் செய்தி “ முற்றிலும் ஆதாரமற்றது. அத்தகைய ஆயுதப்பயிற்சி முகாம்கள் தமிழகத்தில் எதுவும் இல்லை. சில காலத்துக்கு முன்பு இது போன்ற ஒரு தகவல் இலங்கையில் கிளப்பப்பட்டு, பின்னர் அது வெளியானதற்குப் பழியை இந்திய ஊடகங்களின் மீது தவறாகப் போட்டு அச்செய்தி திரும்ப பெறப்பட்டது. தமிழ் நாட்டில் தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டு மறைமுக அல்லது வெளிப்படையான தீவிரவாதச் செயல்கள் ஏதும் நடைபெறாதபடி கடுமையாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது. யாராவது தீவிரவாதி என்று கண்டறியப்பட்டால் அவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். எனவே தமிழ் நாட்டில் ஆயுதப் பயிற்சி முகாம்கள் நட்த்தப்படுவது அல்லது அவ்வாறு நடத்தப்பட அனுமதி வழங்கப்படுவது என்ற கேள்விக்கே இடமில்லை “ என்று அவர் கூறியிருக்கிறார். இலங்கையும் மறுக்கிறது இதனிடையே இது குறித்து இலங்கை தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் தலைமை இயக்குநர் லக்ஷ்மண் ஹுலுகல்ல தமிழோசையிடம் கருத்து வெளியிடுகையில், இந்தச் செய்தியை மறுத்தார். தானும் அந்தச் செய்திகளைப் பார்த்ததாகவும், ஆனால் இதை உறுதிப்படுத்தும் வகையில் நம்பகத்தன்மை கொண்ட ஆதாரம் ஏதும் இல்லை. எனவே இதில் உண்மை எதுவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும், என்றார் ஹுலுகல்ல ஆனால் இந்த பத்திரிகை, இலங்கை உளவுத்துறையை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த ஹுலுகல்ல, “ ஆனால் இந்த செய்தி பொதுப்படையாக அப்படிக்கூறுகிறது. எந்த ஒரு பொறுப்பான அதிகாரியையும் மேற்கோள் காட்டவில்லை. இவ்வாறு அவர்கள் கூற முடியாது”, என்றார் .

Aucun commentaire:

Enregistrer un commentaire