vendredi 6 avril 2012

சிலைகள் உடைப்பு மட்டக்களப்பில்

சுவாமி விபுலானந்தர், மகாத்மா காந்தி உருவச் சிலைகள் உட்பட நான்கு முழு உருவச் சிலைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு விசமிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளன. நகரின் மத்தியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மற்றும் சாரணியத் தந்தை சேர் பேடன் பவுல் சிலைகளின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ள அதேவேளை ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலை முன்றலில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தர் சிலை மற்றும் கல்வி அலுவலகச சந்தியில் அமைந்திருந்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை சிலைகளின் தலைகள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன. உடைக்கப்பட்ட பேடன் பவுல் சிலை மட்டக்களப்பு நகரில் நிறுவப்பட்டுள்ள இந்த உருவச் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் அரசியல்வாதிகள், தமிழ் ஆர்வலர்கள் உட்பட பலரையும் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. குறித்த சிலைகளில் மகாத்மா காந்தி சிலை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டது. ஏனைய சிலைகள் சுமார் 10 முதல் 15 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டவை. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு பொலிசார் இதன் பின்னணி என்பது குறித்தோ அல்லது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்தோ இதுவரை தெரியவரவில்லை என்கின்றனர். 29 வது ஆசிய பசுபிக் பிராந்திய சாரணர் ஜம்போரியும் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் தம்புள்ளை நகரில் கடந்த முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி இன்று வெள்ளிக்கிழமை முடிவடையவிருக்கும் வேளையில் சாரணியத் தந்தை சேர் பேடன் பவுலின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire