jeudi 5 avril 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகலரும் ஆயுதம் ஏந்தியவர்கள்:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களுக்குமிடையில் நேற்று பாராளுமன்றத்தில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சகலரும் ஆயதம் தரித்தவர்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேர்தல் கூட்டமைப்பு என்றும் தமிழ்த் தேசிய இராணுவம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட்டமைப்பு எம்.பி.க்களைப் பார்த்து கூறினார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன், அரியநேந்திரன் உள்ளிட்ட எம்.பி. க்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் மூண்டது. ஜெனீவா விவகாரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக் கொண்டிருக்கையிலேயே இந்த வாய்தர்க்கம் எழுந்தது. இருதரப்புகளும் வார்த்தைகளால் திட்டிக் கொண்டதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அதில் காணப்படுகின்ற வெற்றி தொடர்பிலும் இங்கு சவால்கள் விடுக்கப்பட்டன. வட மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் நிச்சயமாக நடத்தவிருக்கின்றது. அந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் காட்டுங்கள் பார்ப்போம் என அமைச்சர் டக்ளஸ் கூறிய அதேநேரம் பார்ப்போம். தேர்தலை நடத்துங்கள் பார்ப்போம் என கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஒருமித்துக் கூறினர். இதேவேளை கூட்டமைப்பின் தலைவர் கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிகின்றார் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார். எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. அமைதியாகவே அமர்ந்திருந்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire