jeudi 5 avril 2012

தமிழரின் வன்முறை சாராத போராட்டம் புலிக்கதை கூறிக் கொண்டிருக்காமல் தீர்வை முன்வையுங்கள் : சம்பந்தன்

புலிகளைப் பற்றி மட்டும் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்காமல் உயிருடனிருக்கும் தமிழ் மக்களுக்கான தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன், தமிழ் மக்களின் பகுதிகளில் ஜனநாயக ஆட்சி நடக்கக்கூடாதென்பதில் அரசாங்கம் உறுதியுடனிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் 6 தசாப்தகாலமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் அணுகுமுறையையே தொடர்ந்தும் முன்னெடுக்கும் போக்கினையே அரசிடம் காண முடிவதாகவும் குறிப்பிட்ட சம்பந்தன், இவ்வாறான போக்கு சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துமெனவும் எச்சரித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஜெனீவாத் தீர்மானம் தொடர்பிலான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சம்பந்தன் எம்.பி.மேலும் கூறியதாவது சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகளில் அவர்களை சிறுபான்மையினராக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 1956,1958,1961,1971,1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் பல்வேறான நெருக்கடிகளுக்கு தமிழ் மக்கள் முகம்கொடுத்தனர். பல இலட்சம் மக்கள் இக்காலப்பகுதியில் வெளியேறினர். தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே தமிழ்மக்கள் சமத்துவமாக நடத்தப்படவில்லை. அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவில்லை. தமிழரின் வன்முறை சாராத போராட்டம் கவனத்தில் எடுக்கப்படாமையினால் தான் ஆயுதப் போராட்டம் உருவெடுத்தது. ஆயுதக் குழுக்கள் தடை செய்யப்பட்டன. பல நாடுகள் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்தன. அவ்வாறான நாடுகள் ஆயுதக் குழுக்களை அழிப்பதற்காக இலங்கை அரசுக்கு ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்கியது. ஆனாலும் ஆயுதக் குழுக்களை அழிப்பதற்காக ஆதரவு வழங்கிய நாடுகள் சட்டபூர்வமான, தனித்துவமான அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காகவே ஆயுதப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பதனையும் அறிந்து வைத்திருந்தன. இவ்வாறான நாடுகள் இலங்கையிலும் தமிழ் மக்களின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் மீறப்பட்டு வருகின்றமையையும் அறிந்து வைத்திருந்தன. அத்துடன் உணர்ந்தும் இருந்தன. இந்நாடுகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சமத்துவமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதனை அவ்வப்போது இலங்கைக்கு உணர்த்தியிருந்தன. எனினும் அவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ளாது தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டது. தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்காத அரசு தமிழர்களின் பிரச்சினைகள் இயற்கையான முறையில் அழிந்துவரும் என்றே எண்ணியிருந்தது. சுய நிர்ணய உரிமையை இலங்கை அரசே சிக்கலுக்குள்ளாக்கியது. ஆயுதப் போராட்டத்திற்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் மிதவாதத் தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்கள் உயிர்த்தியாகம் செய்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான, நீதியான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கே அவர்கள் முயற்சித்தனர். இதற்குப் பின்னரான ஆயுதப் போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டு வருவதற்கும் கொண்டு வந்த பின்னரும் பல நாடுகள் இலங்கைக்கு உதவின. யுத்தம் முடிவடைந்து 3 வருடங்களாகிவிட்ட போதும் தொட்டு உணரக் கூடிய அடைவுகள் எதுவுமே இல்லை. இந்நிலைமை தொடர்ந்தால் தமிழர் மட்டுமன்றி சகலருமே பாதிக்கப்படுவர். வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கட்டியெழுப்பப்படவேண்டும். அதற்காக மனித சமுதாயம், நிர்வாகம், சர்வதேச நிறுவகம் ஆகியவற்றை உள்ளடக்கி பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு நுண்ணறிவுடனும் புத்திக்கூர்மையுடனும் செயற்பட வேண்டும். யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்தியா பாரிய பங்களிப்புச் செய்தது. அதேபோல் அரசியல் தீர்வு, இராணுவப் பிரசன்னங்களின் குறைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான இந்தியாவின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப இலங்கை தனது அர்ப்பணிப்பை இந்தியாவுக்குக் காட்டவில்லை. தமிழ் மக்கள் விடயத்தில் இலங்கை அரசுகள் பல தசாப்தங்களாக நியாயமாக நடந்துகொள்ளவில்லை. அழிந்துவிட்ட புலிகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் பற்றியும் பேசுகின்றீர்கள். இது மிகப்பெரும் தவறு. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைத்தால் புலம்பெயர்ந்தவர்கள் வடக்கு, கிழக்கிற்கு மட்டுமல்ல முழு நாட்டினது அபிவிருத்திக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள். தமிழர்களின் பிரச்சினைக்கு நீதியானதும் நல்லிணக்கமானதுமான தீர்வே தேவை. பரிகாரம் தேவையில்லை. அழிந்து போன புலிகளைப் பற்றித்தான் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கப் போகின்றீர்களா? அல்லது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணப்போகின்றீர்களா? சர்வதேசத்தைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியுமென நினைக்கின்றீர்கள். இந்த நாட்டில் பல்லி ன சமூகங்கள் வாழும் நிலையில் உங்களால் ஏன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. சிங்கள மக்களுக்கு இருக்கும் அதிகாரம், உரிமை, சுதந்திரம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் வேண்டும். அதிகாரப் பகிர்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தேவை. தமிழ் மக்களுக்குத் தேவையில்லையென தொடர்ந்தும் கதையளக்க வேண்டாம். இறைமையை பாதிக்காத வகையில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றும் சிறுபான்மைக் கட்சிகளுடன் முனைப்புடன் பேச வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது. எனினும் நீங்கள் அதாவது அமைச்சர்கள் வேறுபட்ட குரல்களில் பேசுகின்றீர்கள். தலைமுறை தலைமுறையாக நாம் வாழ்ந்த இடங்களில் இரண்டாம் தரப்பினர்களாக வாழ முடியாது. பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க நாம் தயாராகவேயுள்ளோம். தமிழ் மக்களுக்கு நீங்கள் கருணை காட்ட வேண்டாம். அரசுக்குள்ள கடமையை மட்டும் செய்தால் போதும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த தவறு என்ன? நான் என்ன குற்றவாளியா? தமிழ்க் கூட்டமைப்புக்கு அதிகாரம் தேவையில்லை. ஆனால், தமிழ் மக்களுக்கு அதிகாரம் தேவை. எனவே அதிகாரத்தை மக்களின் கைகளில் கொடுங்கள். அதற்கு நாம் உங்களுக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராகவுள்ளோம். 6 தசாப்தகாலமாகத் தொடரும் அணுகுமுறையைத் தான் அரசு தொடர்ந்தும் செய்ய முற்படுகின்றது. இது இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழ் மக்களுக்கு நீதியானதும் சமத்துவமானதும் அங்கீகரிக்கப்பட்டதுமான தீர்வு தேவை. புலிகள் பற்றி மட்டுமே தொடர்ந்தும் பேசும் உங்களுக்கு தீர்வொன்றைக் காண்பதில் அக்கறையில்லை. தமிழ் மக்களின் பகுதிகளில் ஜனநாயக ரீதியான ஆட்சி நடக்கக்கூடாதென்பதில் மட்டுமே அரசு உறுதியாகவிருக்கின்றது. உங்கள் இறைமையைப் பற்றி மட்டும் பேசும் நீங்கள் ஏனைய நாடுகளுக்கும் இறைமை உள்ளதென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவக் கட்டமைப்புகள் அகற்றப்படவேண்டும். தமிழ்மக்கள் சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் உரிமையுடனும் வாழ வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire