dimanche 22 avril 2012

பிரபாகரன் முதலாவது அரசியல் தீர்வு. இரண்டாவது மனிதஉரிமைகள் அவர் கவனத்தில் கொள்ளவில்லை. இரா. சம்பந்தன்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு, கொழும்பிலுள்ள இந்தியத் துதரகம் ஏற்பாடு செய்த இராப்போசன விருந்தில் பங்கேற்ற பசில் ராஜபக்ச, இரா.சம்பந்தன், ரங்கராஜன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து கலந்துரையாடியதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இராப்போசன விருந்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரி.கே.ரங்கராஜன், ஒரு கதை சொல்லப் போவதாக தொடங்கினார். எனது மகனுக்கு 12 வயதாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை அவர் தனது நூலகத்தில் வைத்திருந்தான். எதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாய் என்று கேட்டபோது அதற்கு அவர்தான் தமிழ் மக்களின் தலைவர் என்று எனது மகன் பதிலளித்தான். சில காலங்களுக்குப் பின்னர் அந்தப் படத்தைக் காணவில்லை. அதற்கு என்ன நடந்தது என்று மகனிடம் கேட்டபோது, அவர் ஒரு கதாநாயகன் அல்ல என்று புரிந்து கொண்டதால் தான் அதை அகற்றி விட்டதாக மகன் கூறினான். அவனது அந்த முடிவுக்கு அமர்தலிங்கத்தைப் புலிகள் சுட்டதே காரணம் என்று பின்னர் அறிந்து கொண்டேன் என்று ரங்கராஜன் கூறினார். அந்தக் கதையை ரங்கராஜன் கூறி முடித்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடங்கினார். போர் முடிவடைய முன்னதாக பிரபாகரனைச் சந்தித்தபோது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்களை வலியுறுத்தினேன். முதலாவது அரசியல் தீர்வு. இரண்டாவது மனிதஉரிமைகள். இந்த இரண்டையுமே அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்றார் இரா. சம்பந்தன். இவர்கள் இருவரும் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர் பசில் ராஜபக்ச, ரங்கராஜனைப் பார்த்து, “விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் முதலாவதாக இருந்தது யார் என்று உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார். அவர்களின் கொலைப்பட்டியலில் முதலில் இருந்தது எனது சகோதரர் மகிந்த ராஜபக்ச தான். அதற்கடுத்ததாக இருந்தது யார் என்று தெரியுமா? அது சம்பந்தன் தான் என்றார். அதை நீங்கள் அறிவீர்களா? என்று இரா.சம்பந்தனைப் பார்த்துக் கேட்டார் பசில் ராஜபக்ச. அதற்கு அவர் தனக்குத் தெரியும் என்று பதிலளித்தார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire