vendredi 13 avril 2012

அதிமுக விலகியதால் புதுடெல்லி அதிர்ச்சி – பயணத் திட்டம் கைவிடப்படலாம் என்கிறது இந்திய ஊடகம்

சிறிலங்காவுக்கு அனுப்பப்படவுள்ள இந்தியா நாடாளுமன்றக் குழுவில் இருந்து அதிமுக திடீரென விலக்கி கொண்டது, புதுடெல்லியில் கடும் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தக் குழுவின் பயணம் தொடர்பான முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் போருக்குப் பிந்திய சூழ்நிலைகள் குறித்து அறிந்து வருவதற்காக, அனைத்துக்கட்சி குழுவை அனுப்ப இந்திய அரசு அண்மையில் எடுத்திருந்தது. இதன்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு வரும் 16ம் நாள் சிறிலங்கா செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குழு அமைக்கப்பட்டதிலேயே பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குழுவில் யார், யார் இடம்பெறுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிகாரபூர்வமாக பெயர்கள் வெளியிடப்படா விட்டாலும், கடந்தவாரமே சில பெயர்கள் கசிந்தன. பொதுவாக சிறிலங்கா குறித்த பிரச்சினைகளை, தீவிரமாக கையிலெடுத்து, ஆணித்தரமாக குரல் எழுப்பும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால் நாடாளுமன்ற கீழவையில் கணேசமூர்த்தி மற்றும் மேலவையில் டி. ராஜா போன்றவர்கள் தான். ஆனால், இவர்கள் இந்தக் குழுவில் இடம்பெறவில்லை. நாடாளுமன்ற அமைச்சகத்தில், இதுபற்றி அவர்கள் கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதாக பதில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி பார்த்தால், கடந்தமுறை சிறிலங்கா சென்ற குழுவில் திருமாவளவனுக்கு, எந்த அடிப்படையில் இடம் கிடைத்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பேரில் நான்கு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள். பா.ஜ.க சார்பில் சிறிலங்கா விவகாரங்கள் குறித்து ஓரளவு தெளிவாக புரிந்து வைத்திருப்பவரும், இந்த விடயத்தை அந்தக் கட்சி சார்பில் கையாண்டு வருபவரும் வெங்கையா நாயுடு தான். சிறிலங்கா விவகாரங்களுக்கு பா.ஜ.கவில் பொறுப்பு வகிப்பவர் யஸ்வந்த் சின்கா. இவர்களுக்கு இடம் அளிக்காமல் பல்பீர்புஞ்ச் என்பவர் செல்லவுள்ளார். சிறிலங்கா பிரச்சினையில் வடமாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ அதிகளவில் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால், அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் அதிகாரபூர்வ நிகழ்ச்சி நிரல்களும் கூட, சிறிலங்கா அரசாங்கத்தின் விருப்பதிற்கு ஏற்ற வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. மீள் குடியேற்றத்திற்காக, இந்தியா வழங்கிய, 500 கோடி ரூபா பற்றியும், அதன் செலவு குறித்தும் ஆராய்வதே, இந்தக் குழுவின் மையமாக வைக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire