mercredi 4 avril 2012

ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தீர்மானம் கியூபாவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்பதை நாம் நினைவு கொள்ளலாம்.பம்மாத்து’ என்பதை விட வேறு எதுவும் சொல்வதற்கில்லை

"மழை பெய்கிறது ஊர் முழுவதும் ஈரமாகிவிட்டது தமிழர்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே நடக்கிறார்கள் ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல்; ஈரத்திலேயே உணவு உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்பட மாட்டான்." மார்ச் மாதம் இருபத்திரண்டாம் நாள் இலங்கை பற்றிய தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிற்பாடு தமிழர்களில் பலருடைய – குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலருடைய – செயற்பாடுகளைப் பார்க்கிற போது பாரதியின் மேற்கூறிய வரிகள் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை (புலிகளாக இருந்த தமிழர்களை எருமைகளாக மாற்ற முற்படுகிறேன் எனத் தயவு செய்து என் மீது கோபம் கொள்ள வேண்டாம்!) ஐ.நா அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிற்பாடு ஒரு கூட்டம் தமிழர்கள் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு முன்னால் திரண்டு அமெரிக்காவுக்கும் ஹிலரி கிளிண்டனுக்கும் நன்றி தெரிவித்தார்கள். இன்னொரு கூட்டம் தமிழர்கள் கனடாவிலுள்ள அமெரிக்கக் கொன்சலேற்றுக்கு முன்னால்கூடி நன்றிக் கண்ணீர் வடித்தார்கள். இன்னொரு கூட்டம் தமிழர்களே இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்குப் பின்நின்று உழைத்த கனடிய அரசுக்கு நன்றி கூறுவதற்காகக் கனடியத் தலைநகரான ஓட்டாவாவில் அமைந்திருக்கும் நாடாளுமன்றத்துக்கு முன்னால் அடுத்த வாரம் கூடப் போகிறார்கள். 1987 இல் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்ததும் அதன் பின்னர் நடந்தவையும் நாம் மறந்து விடலாம்! சிட்டுக் குருவிகளுக்குக் கூட அற்புதமான மூளை இருக்கிறது. கனடாவைப் பொறுத்தவரை இத்தகைய செயற்பாடுகளுக்கு அமைப்பு சார்ந்து பின்னணியில் இருக்கின்றவர்கள் முன்னாள் விடுதலைப் புலிகளும் அவர்களது சார்பில் முன்பு இயங்கிய நிறுவனங்களும் என்பது ஒரு கேலிக்க்குரிய முரண்நகையாகும். கனடிய வரலாற்றிலேயே மிகவும் மோமான பிற்போக்குவாத பழமை பேணும், மக்களுக்கு எதிரான ஒரு அரசாங்கத்தின் வெளிப்படையான ஆதரவாளர்களாக இருப்பதிலும் இந்த நிறுவனங்களுக்கு நாணம் கிடையாது. இது நாணயம் சம்பந்தப்பட்ட விடயம். ஐ.நா மனித உரிமைகள் அவையில் தீர்மானம் வெற்றி பெற்ற மறுநாளே அமெரிக்க அரசு முக்கியமான ஒரு பரிசை இலங்கைக்கு வழங்கியது. கடலோரப் பாதுகாப்பு, கடல் வலையக் கண்காணிப்பு சார்ந்த தொழில்நுட்பம், கண்காணிப்பு தொடர்பான உதாரிகள் இலங்கைக்கு வழங்கப்படுவதற்கு கடந்த முட்பது ஆண்டுகாலமாக இருந்த தடை மார்ச் 23 ஆம் நாள் நீக்கப்பட்டது, என்ற செய்தியை வாஷிங்டன் போஸட் நாளிதழ் வெளியிட்டது. பாதுகாப்பு, படைத்தளவாடங்கள், பயிற்சி போன்ற விடயங்களில் இலங்கை அரசுக்கு முக்கியமான சலுகை இது. கூடவே, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாகவும் அமெரிக்கா இலங்கைக்கு ஒரு பெரிய சலுகையை வழங்கியிருக்கிறது. ஈரான் மீதான பொருளாதாரத் தடையும் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதித் தடையையும் இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதில் முன் நிற்கும் அமெரிக்கா இலங்கை அரசுக்கு வழங்கியுள்ள சலுகையின் படி எண்ணெய் இறக்குமதியில் 15 வீதத்தைக் குறைத்தால் மட்டுமே போதுமானது. இலங்கை தனது எண்ணெய் இறக்குமதியில் 93வீதத்தை ஈரானில் இருந்தே பெற்றுக் கொள்கிறது. எனவேதான் நான் ஏற்கனவே இந்தப் பத்தியில் குறிப்பிட்டதுபோல இலங்கை அரசு அமெரிக்க எதிர்ப்பை இவ்வளவு மூர்க்கத்தனமாகக் காட்டுவது ஒரு ‘தேசபக்தி’ நாடகமாகவே இருக்கமுடியும். இத்தகைய பின்னணியில் ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தீர்மானம் பற்றிய வேறு சில தரவுகளையும் இத்தீர்மானம் ஏற்படுத்திப்போகும் தாக்கங்களையும் பார்க்கலாம்.இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எத்தகைய கடப்பாடும் இலங்கை அரசுக்குக் கிடையாது. (Non-binding). மனித உரிமைகள் அவையில் கியூபாவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்பதை நாம் நினைவு கொள்ளலாம். மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்படுகிற எந்தத் தீர்மானமும் சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்பதலோடும். அந்த நாட்டுடன் கலந்தாலோசிக்கப்பட்டுமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஐ.நா. அவையின் ஒழுங்குமுறை அடிப்படை விதிகளில் ஒன்றாகும். இது நிரந்தரமானது. எனவே இந்திய அரசு கொண்டு வந்த ‘திருத்தம்’ என்று ஊடகங்கள் பல தூக்கிப் பிடித்த விடயம் பெரும் ‘பம்மாத்து’ என்பதை விட வேறு எதுவும் சொல்வதற்கில்லை. ஐ.நா. மனித உரிமை அவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அரசியல், புவியியல் - அரசியல், நாடுகளின் சுயநலம் பேணல் போன்ற, மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட காரணங்களே முன்னிலை வகிக்கின்றன. ஐ.நா அவையின் தீர்மானங்கள் தமக்குச் சாதகமாக இல்லாத போது நாடுகள் எதிர்க்கின்றன. அதற்காக அவர்கள் முன்னிலைப்படுத்துகிற ஒரேயொரு காரணம் நாடுகளது ‘இறைமை’ ‘இறையாண்மை’ யில் எவருமே தலையிடமுடியாது என்ற பழைய வாதமாகும். இந்த இரண்டு சொற்களுமே அடிப்படையில் தவறானவை என்பது ஒருபுறம் இருக்க, உலகமயமாதலின் தீவிரம் எல்லா நாடுகளதும் ‘இறைமை’ யைத் திட்டமிட்ட முறையில் வேரறுத்து வருவதால் ‘இறைமை’ என்ற கோட்பாடே இப்போது யானை தின்ற விளாம்பழமாக மாறிவிட்டது. இன்னொரு தளத்தில். தமது சொந்த மக்களையே எண்ணுக் கணக்கற்றுப் படுகொலை செய்யும் அரசுகள் ‘இறைமை’ யைத் தூக்கிப் பிடிப்பதற்கான அறவலிமையை இழந்து விடுகின்றன. ‘இறைமை’ , "இறையாண்மை" என்பதை அரசுகளுக்கு உரியது என்று புரிந்து கொள்வதைவிட "இறைமை" மக்களிடமே உள்ளார்ந்து இருக்கிறது-இறைவனிடமும் ஆண்மையிடமும் இருந்து அது பெறப்படுவதில்லை என்ற புரிதலை நாம் முன்னிலைப் படுத்த வேண்டும். அதுதான் புதிய அரசியலாக இருக்க முடியும். இந்தப் புதிய அரசியல் ஐ.நா,அவையைத் தாண்டியது. பல்வேறு மக்களின் உணர்வொருமைப்பாட்டிலும் உணர்வுத் தோழமையிலும் (solidarity) உருவாவது. இலங்கை பற்றிய ஐ.நா. அவைத் தீர்மானம் விவாதிக்கப்பட்ட போது ஐ.நா. அவைக்கான கியூபாவின் தூதர் அங்கதச் சுவையோடு ஒரு கேள்வியைக் கேட்டார், போரின் போது இலங்கை பயன்படுத்திய ஆயுதங்களால் நாற்பது வீதமானவற்றை அமெரிக்காவே வழங்கியது. பிறகு ஏன் இந்தத் தீர்மானத்தை நீங்களே முன் வைக்கிறீர்கள்? மீதி 60 வீதமான ஆயுதங்களை வழங்கியவர்களில் பலரும் அந்த அவையில் இருந்தார்கள். எனினும் மகிந்த அரசும் அதனுடைய தொண்டர் அடிப்பொடிகளும் இத்தகைய ‘மென்மை’ யான தீர்மானத்துக்கே சஞ்சலம் கொள்வது ஏன்? முதலாவதாக, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது பற்றிய வேலைத் திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும். இரண்டாவது, இடம் பெற்று போர்க் குற்றங்களைப் பற்றிய சுயாதீனமான விசாரணை பற்றிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மூன்றாவதாக, இவை இரண்டையும் பற்றிய இலங்கையின் நடவடிக்கைகள் பற்றி அறிக்கைகளை மனித உரிமைகள் அவை ஆணையாளர், மற்றும் சிறப்பு அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவே தொடர்ந்து நீண்ட காலத்துக்கு இலங்கை விடயம் ஐ.நா அவையில் இடம் பெறப் போகிறது. வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு முன்வராவிட்டால், அல்லது மறுத்தால் என்ன பின் விளைவுகள் நிகமும் என்பது பழையபடி சூதாட்டத்திலும் சதுரங்கத்திலும் தான் தங்கியுள்ளது. பொதுவாகவே சர்வதேசச் சட்டங்களும் ஐ,நா. தொழில்முறைகளும் மிக நீண்ட காலம் எடுப்பவை. இத்தகைய கால அவகாசம் இலங்கை அரசுக்கு மிகவும் வாய்ப்பானது. ஏனெனில், பலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்வது போல ஒவ்வொரு நாளும் திட்டமிட்ட முறையில் வடக்கு, கிழக்கின் சமூக, பொருளியல், குடியியல் மற்றும் நுண் அரசியல் நிலைமகளை மாற்றி விடலாம். இவ்வாறு ஐ.நா.அவைக்கும் இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமான கயிறிழுப்பில் இலங்கை அரசு சாமர்த்தியமாக வெற்றி பெற்றால் அமெரிக்காவுக்காக ஆனந்தக் கண்ணீர் சிந்திய தமிழர்கள், ஒரு கோப்பை, கண்ணீருக்குள் பழையபடி தமது தலையை மூழ்கடிக்க வேண்டியது தான்!

Aucun commentaire:

Enregistrer un commentaire