mercredi 25 septembre 2013

தொடர்ந்து குறிவைப்பது ஏன் சிறிலங்காவை?ஐ.நா பொதுச்சபையில் மகிந்த

உள்நாட்டு விவகாரங்களில் சில வெளிநாடுகள் தலையிட முனைவது குறித்து, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். 

நியுயோர்க்கில் நேற்று ஆரம்பமான ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “பாதுகாப்பு, மனிதஉரிமைகள் என்ற போர்வையில் சில நாடுகள் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. 

அனைத்துலக அனுமதியுடன், இந்தக் கடமைகளை ஆற்றுவதற்கு ஐ.நா பணிக்கப்பட்டிருக்கும் சூழலில், இதுபோல சில நாடுகள் அனைத்துலக அரங்கில் காவல்காரன் வேலை பார்ப்பது தேவையற்றது. 

வளர்ந்து வரும் நாடுகளில் இதுபோன்ற காரணங்களைக் காட்டி, சில நாடுகள் தலையிட்டு வருவது கவலையளிக்கிறது. 

பல்வேறு கலாசாரங்கள் உள்ள நாடுகளில், ஒரு குறிப்பிட்ட விதமான ஜனநாயகத்தைத் திணிக்க முனைவது பெருங்குழப்பத்தையே விளைவிக்கும். 

இத்தகைய தலையீடுகளால் இந்த நாடுகளில் மேலதிக  உறுதிப்பாடு ஏற்பட்டு விடவில்லை. 
தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சிறிலங்காவில் இப்போது நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. 

வடமாகாண மக்களுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதுபோன்று தெளிவாகத் தெரியும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், ஐ.நாவுடன் சிறிலங்கா இணக்கமாகச் செயற்படும் நிலையிலும், சிறிலங்காவை சில நாடுகள் அனைத்துலக அரங்கில், ஐ.நாவின் பல்வேறு அரங்குகளைப் பயன்படுத்தி, குறிவைப்பது சரியானதா? 

சிறிலங்காவுக்கு கொடுக்கப்படும் அளவுக்கு மீறிய அழுத்தங்கள் பல நாடுகளை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. 

இதுபோன்ற விவகாரங்களில் சமமற்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்படுவது குறித்து ஐ.நா விழிப்புடன் இருக்க வேண்டும். 

முப்பதாண்டு கால உள்நாட்டுப் போர் மற்றும் சுனாமி போன்றவற்றையும் தாண்டி, சிறிலங்கா, வளர்ச்சி இலக்குகளை எட்டியிருக்கிறது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire