vendredi 6 septembre 2013

மறுக்கிறது ஆணையர் அலுவலகம் விடுதலைப் புலிகளுக்கு மலரஞ்சலியா ?-

ஐநா மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை , சமீபத்தில் மேற்கொண்ட இலங்கை விஜயத்தின் போது, விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டிருந்தார் என்ற செய்திகள் “ திரிபுபடுத்தப்பட்டவை” என்று அவரது அலுவலகம் மறுத்திருக்கிறது.
இலங்கைக்கு சென்றிருந்த நவி பிள்ளை , போர் முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் , இறந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தார் என்று இலங்கை ஊடங்களில் செய்தி வந்திருந்தது.
இது குறித்து இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் செய்திகள் தவறானவை என்று பிபிசியிடம் மறுத்திருக்கும் ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகத்துக்காகப் பேசவல்ல ரூபர்ட் கோல்வில், மனித உரிமை ஆணையர் , இது போன்று மோதல் நடந்து முடிந்து இயல்பு நிலைக்கு வரும் நாடுகளுக்கு செல்லும்போதெல்லாம், அந்த மோதல்களில் உயிரிழந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் தனது அஞ்சலியை செலுத்துவது வழக்கம், அந்த வகையில்தான் இது போன்ற ஒரு அஞ்சலியை இலங்கையிலும் செலுத்த விரும்பினார் என்று கூறினார்.
இது போன்ற ஒரு அஞ்சலியை செலுத்த பொருத்தமான இடமாக, இந்த 30 ஆண்டு காலப் போர் முடிந்த பகுதியை ஐநா மன்ற மனித உரிமை அலுவலகம் கருதியது என்றார் அவர்.
இந்த அஞ்சலி என்பது போரில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்குமானது. இந்த நிகழ்வின்போது நவி பிள்ளை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்த வாசகங்கள் அவரது விஜயத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சேர்க்கப்பட்டன என்றும் கோல்வில் கூறினார்.
“நாங்கள் இது போன்ற ஒரு அஞ்சலி நிகழ்வைச் செய்ய பரீசிலித்து வருகிறோம் என்பதை அறிந்த இலங்கை அரசு, இதை தாங்கள் வேறு விதமாகத்தான் பார்க்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டனர். இதன் பின்னர் அவர்களது கருத்தை கவனமாகப் பரிசீலித்த ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையர் அலுவலகம், இது இறுதியில் தவறாகத்தான் புரிந்துகொள்ளப்படும் என்று உணர்ந்து , இந்த நடவடிக்கையைக் கைவிட்டது, என்றார் மனித உரிமை ஆணையருக்காகப் பேசவல்ல ரூபர்ட் கோல்வில்.
இந்தச் சம்பவமே நடக்கவில்லை என்ற நிலையில், இது குறித்து அதிகமான அளவில் சலசலப்பு ஏற்படுத்தப்படுவது ஆச்சரியத்தைத் தருகிறது என்றார் கோல்வில்.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நவி பிள்ளை அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தார் என்று பாவனை செய்வது மிகவும் பாரிய திரிபுநடவடிக்கையாகும் என்றும் கோல்வில் கூறினார். விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்த நவி பிள்ளையின் கருத்துக்கள் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்தவைதான் என்றும் அவர் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire