lundi 9 septembre 2013

பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது;விறுவிறுப்பு

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும், கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்.” இவ்வாறு கூறியுள்ளார், சுப்ரமணியம் சுவாமி.
‘சுவாமி கூறியிருப்பது உண்மையாக இருக்குமோ’ என்ற சந்தேகம் ஏற்படுகிறதா?
அவர் எந்த இடத்தில், எந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு கூறினார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை ராணுவத்தின் 2013-ம் ஆண்டுக்கான 3-வது ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கு  Army’s third annual international conclave the ‘Defence Seminar – 2013′), இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில், இலங்கையின் ராணுவ உயரதிகாரிகள் கிட்டத்தட்ட அனைவருமே கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும், இறுதி யுத்தம் நடந்தபோது, இலங்கை ராணுவத்தில் இருந்தவர்கள்.
மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு கருத்தரங்கின் மேடையில்தான், கொழும்புவில் வைத்தே, சுப்ரமணியம் சுவாமி, “இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும், கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது” என்று பேசினார்.
இலங்கை ராணுவ தளபதி உட்பட யாரும் அதை மறுக்கவில்லை.
இலங்கை ராணுவ பாதுகாப்பு கருத்தரங்கில் தொடர்ந்து பேசிய சுப்ரமணியம் சுவாமி, “விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா இலங்கைக்கு உதவி செய்தன. இந்தியாவின் சிறப்பு ஒத்துழைப்பு பெறப்பட்டது.
அது எப்படியென்றால், ஜனாதிபதி ராஜபக்ஷேவின் சீனியர் ஆலோசகர், ஜனாதிபதியின் செயலர், பாதுகாப்பு செயலர் உட்பட 6 பேரடங்கிய இலங்கை உயர்மட்டக் குழுவினர், யுத்தம் முடியும்வரை டில்லியுடன் நேரடித் தொடர்பில் இருந்தார்கள். டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகார செயலர், பாதுகாப்பு செயலர் ஆகியோருடன் இலங்கை குழுவினர் எந்த நேரமும் தொடர்பு கொள்ள வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தன.
யுத்தம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, இலங்கை மற்றும் இந்திய உயர்மட்ட குழுவினர் மிகவும் ரகசியமான முறையில் உடனுக்குடன் ஆலோசனை செய்து, அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.
தி.மு.க.வின் தலைவரும், தமிழகத்தின் அன்றைய முதலமைச்சருமான கருணாநிதிக்கு விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி அடிக்கடி விளக்கிக் கூறப்பட்டது. பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது. கருணாநிதி மதிநுட்பத்துடன் நிலைமையை உணர்ந்து, இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்” என்று பேசினார்.
சுப்ரமணியம் சுவாமி கூறியிருப்பது நிஜம்தான் என்பதையும் நாம் அறிந்திருந்தோம். அதே நேரத்தில், தமிழக முதல்வர் என்ற முறையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இந்த விபரம் தெரிவிக்கப்பட்டாலும், அவரால் ஏதும் செய்து இதையெல்லாம் தடுத்திருக்க முடியாது என்பதும் நிஜம்தான். அது அவரிடமே கூறப்பட்டிருந்தது.
நாம் அறிந்தவரை, முடிவு மிகமிக மேல்மட்டத்தில், இந்தியாவுக்கு வெளியே எடுக்கப்பட்டது. டில்லிக்கும், தலையாட்டுவதை தவிர வேறு வழி கிடையாது. கருணாநிதிக்கு தகவல் மட்டும் சொல்லப்பட்டது, அவ்வளவுதான்.
அது சரி. சு.சுவாமி ஏதாவது சொன்னால் பாய்ந்து வரும் ‘உணர்வாளர்கள்’ யாரும், சுவாமியின் கொழும்பு பேச்சு தொடர்பாக வாயே திறக்கவில்லை கவனித்தீர்களா? என்ன காரணம்? “பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது” என்று சுவாமி பேசியது குறிந்து பொங்கியெழுந்தால், லாஜிக் உதைக்கும் அல்லவா?

Aucun commentaire:

Enregistrer un commentaire