dimanche 15 septembre 2013

பிரபாகரன் தன்னை கொல்லப்போவதாக நினைத்தே ராஜீவ் கொலைக்கு உத்தரவிட்டார்'- குமரன் பத்மநாதன்

KumaranPathmanathan1""தன்னைக் கொல்ல இந்தியா முயல்வதாகக் கருதியதால்தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு உத்தரவிட்டார்'' என்று அந்த அமைப்பின் சர்வதேசப் பிரிவுத் தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவின் தலைவராக இருந்தவர் குமரன் பத்மநாதன். "கே.பி' என்று அழைக்கப்படும் இவரை, போர் முடிந்த மூன்றாவது மாதத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.
வெள்ளிக்கிழமை "தி ஆஸ்திரேலியன்' பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கும்போது, ""இந்தியா தன்னைக் கொல்ல முயல்வதாக பிரபாகரன் கருதினார். எனவே, அதற்கு முன்னதாகவே ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு மனிதர்களை வெடிகுண்டாகப் பயன்படுத்தும் யோசனை பிரபாகரன் மூளையில் உதித்ததுதான். 1980-களில், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய காமிகழ் தற்கொலைத் தாக்குதலைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, பிரபாகரன் மனித வெடிகுண்டுகளைப் பயன்படுத்தலாம் என்று யோசனை கூறினார். அதுமட்டுமில்லாமல், பொதுநோக்கத்துக்காக தமிழ்நாட்டில் தீக்குளிப்பது என்பது வழக்கமான ஒன்றுதான்'' என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் உதவி:
இதனிடையே, இலங்கை இறுதிப் போரின்போது, அமெரிக்காவின் கப்பற்படை தங்களுக்கு முக்கிய உளவுத் தகவல்களை வழங்கி உதவியதாக "தி ஆஸ்திரேலியன்' பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபட்ச கூறியுள்ளார்.
""2006 முதல் 2008 வரை, ஆயுதங்களை ஏற்றி வந்த விடுதலைப் புலிகளின் 12 கப்பல்களைப் பற்றிய முக்கிய தகவல்களை தனது செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைக் கொண்டு அமெரிக்கா வழங்கியதால், அவற்றைத் தாக்கி அழிக்க முடிந்தது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire