jeudi 10 mars 2016

அரசாங்கத்தை ஒன்றாக ஒட்ட வைத்திருக்கும் பசை முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழர்களுக்கு வழங்கிய அரசியல் பொதியினை........

                                           சீமா குகா
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி என்பதைவிட இன்னும் அதிகமானவற்றை உள்ளடக்கியவர். பலசாலியான மகிந்த ராஜபக்ஸவிற்கு கதவுகளைத் திறந்துவிட்ட அரசியல் ஒழுங்கமைப்பின் சிற்பி அவர்தான். தற்போது அவர் ஒரு அமைச்சராகவோ அல்லது ஒரு கட்சிப் பதவியை வகிப்பவராகவோ இல்லாமலிருக்கலாம், ஆனால் ஸ்ரீ.ல.சு.க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்; ஐ.தே.க பிரதமர் ரணில் விக்கிரசிங்க நடத்தும் தேசிய ஐக்கியத்துக்கான அரசாங்கத்தை ஒன்றாக ஒட்ட வைத்திருக்கும் பசையாக இருப்பவர் அவர்தான்.
டெல்லியில் நடைபெறும் ‘றைசினா பேச்சு வார்த்தையில்’ கலந்துகொண்டிருந்த குமாரதுங்க, ‘பெஸ்ட் போஸ்ட்டுடன்’ பேசுவதற்காக தனது நேரமில்லாத துரித வேலைகளுக்கு இடையிலும் சில நிமிடங்களை ஒதுக்கித் தந்தார். கொல்லப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன், தான் ஜனாதியாக இருந்தவேளையில் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல் பொதியினை ஏற்றுக் கொள்ளாமல் போனதுக்காக வருத்தப்பட்டதை குமாரதுங்க முதல் தடவையாக வெளிப்படுத்தினார். இந்த தகவல் லண்டனுக்கு வெளியே வேலை செய்துகொண்டு அடிக்கடி தனது சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கு வந்து போகும் ஒரு புலம்பெயர்ந்த தமிழ் தொழில் நிபுணரால் அவருக்குச் சொல்லப்பட்டது.
இந்த மனிதரிடம் பிரபாகரன் “அதை ஏற்றுக்கொள்ளாததற்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று சொன்னதாக குமாரதுங்க தெரிவித்தார். எந்த ஒரு சிங்களத் தலைவரும் தமிழர்களுக்கு வழங்க முடியாத ஒரு வாய்ப்பாக குமாரதுங்காவின் தெரிவு இருந்தது. அந்த நேரத்தில் அவர் செய்ததை அரசாங்கம் இன்று வழங்கமுடியாத ஒரு நிலையில் இருப்பதை அவர் ஏற்றுக்கொண்டார். அதேபோல ராஜபக்ஸ ஆட்சியில் தனது பலத்தை அதிகரித்துக்கொண்ட சிங்கள பேரினவாதம் தமிழர்கள் கேட்பதை அந்த அளவுக்கு வழங்க முன்வராது என்பதை தமிழர்களும் அறிவார்கள்.
ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(அவரது தந்தையாரால் ஸ்தாபிக்கப்பட்டது) ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தூக்கியெறிவதில் பிரதான இயக்கியாகச் செயல்பட்டவர் சந்திரிகா. அவரது பின்துணை இல்லையென்றால், ராஜபக்ஸவின் அமைச்சரவையில் ஒரு முக்கியத்துவம் குறைந்த அமைச்சராக பணியாற்றிய சிறிசேனவை பெரும்பான்மையான ஸ்ரீ.ல.சு.க வினர் ஒருபோதும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அவரது குரல் வெறுமே ஒரு முன்னாள் ஜனாதிபதியின் குரலாக மட்டும் இல்லாமல் இரண்டு முன்னாள் பிரதமர்களின் மகளின் குரல் என்கிற அந்தஸ்தையும் கொண்டிருந்ததால், அவரது வாதத்தின் பலத்தை அதிகரித்து இறுதியில் ராஜபக்ஸவின் தோல்விக்கு வழியமைத்தது.
முன்னாள் ஜனாதிபதி ஏன் அவரை வெறுக்கிறார், “ அவரைப்போல நான் ஒரு கொலைகாரியாகவோ அல்லது கொள்ளைக்காரியாகவோ இல்லை” அதனால்தான் என சந்திரிகா சொன்னார்.
இப்போது அவர் ஒரு அரசியல் பதவியை ஏற்க விரும்பினால், அதற்காக ஜனாதிபதி அரசியலமைப்பையே மாற்றம் செய்வதற்கு முன்வந்தார், ஆனால் சந்திரிகா அதை நிராகரித்து விட்டார். அவர் தனது அறக்கட்டளை மற்றும் ஜனாதியதியின் கீழ் இயங்கிவரும் ஒரு பகுதி தன்னாட்சி அமைப்பான தேசிய ஒற்றுமை மற்றும் புனரமைப்பின் தலைவர் என்கிற வேலைகளைச் செய்வதில் அதிகம் மகிழ்ச்சி அடைகிறார்.
  • கேள்வி: ஸ்ரீலங்காவில் ஒரு புதிய அரசியலமைப்பை பற்றிய பேச்சு அடிபடுகிறது. இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன? நாட்டுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவையா அல்லது தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்குவதற்காக தற்போது உள்ளதில் சில மாற்றங்களை செய்வதா? ஒரு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கு வருடக்கணக்கில் காலம் தேவைப்படும் நேபாளத்தில் என்ன நடந்தது என்று நினைத்துப்பாருங்கள்?
சந்திரிகா குமாரதுங்க: நாங்கள் ஒரு புதிய அரசியலமைப்பையே கொண்டிருப்போம். ஆனால் அதற்காக நாங்கள் முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதில்லை, ஏனென்றால் ஏற்கனவே உள்ளனவற்றை நாங்கள் அதனுடன் ஒருங்கிணைப்போம். அதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன அது பாராளுமன்றத்தால் அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும் அதற்காக பரவலான ஆலோசனைகள் நடைபெறுகின்றன.
  • கேள்வி: பொலிஸ் மற்றும் காணிக்கட்டுப்பாடு என்பன மாகாண சபைகளால் நிருவகிக்கப்படும் விடயம் இன்னும் தடைக் கற்களாகத்தான் உள்ளனவா? முன்னர் 13வது திருத்தத்தை நிறைவேற்றியும் இந்த இரண்டு விடயங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.  சிக்கலான இந்த இரண்டு விடயங்களுக்கு அப்பால் ஸ்ரீலங்கா நகர்ந்து விட்டதா? இந்தியாவில் இருக்கும் நாங்கள் 13வது திருத்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
சந்திரிகா குமாரதுங்க: அதில் இந்தியா செய்வதற்கு ஒன்றும் இல்லை. நாங்கள்தான் அதைச் செய்ய வேண்டும். எங்கள் மக்களுக்கு அது வேண்டும். தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அதை விரும்புகிறார்கள் நிச்சயமாக இந்தியா மற்றும் மேற்கு போன்ற சர்வதேச சமூகத்தில் உள்ள எங்கள் நண்பர்கள், நாட்டில் நிலையான சமாதானத்தை கொண்டு வருவதற்கு இது ஒரு பிரதான வழி என நம்புவதால் எங்களை ஊக்கப்படுத்துகிறார்கள். 13வது திருத்தத்தில் உள்ள பல அம்சங்கள் ஏற்கனவே அங்கு உள்ளன. ஆனால் இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. ஆம் பொலிஸ் மற்றும் காணிக் கட்டுப்பாடு என்பன பிரதான பிரச்சினைகளாகவே மீந்துள்ளன.
  • கேள்வி: காணி மற்றும் பொலிஸ் சம்பந்தமான இந்த தந்திரமான செயற்பாட்டிலிருந்து இறுதியாக ஸ்ரீலங்கா எப்படி வெளியேறும்?
சந்திரிகா குமாரதுங்க: குறிப்பாக இதுபற்றி இப்போது என்னால் பேச முடியாது. அது இன்னமும் நடந்துகொண்டிருக்கும் ஒரு வேலை.
  • கேள்வி: நீங்கள் எல்.ரீ.ரீ.ஈக்கு வழங்கிய அரசியல் பொதியின் அளவுக்கு பதிய அரசியலமைப்பு வழங்குமா? ஒரு ஜனாதிபதி என்கிற வகையில் தமிழர்களுக்கு சிறந்த ஒரு ஒப்பந்தத்தை வழங்கினீர்கள். ஆனால் பிரபாகரன் அதை நிராகரித்தார், மாறாக திருகோணமலை துறைமுகத்தின் மீது ஒரு தாக்குதலும் இடம்பெற்றது மற்றும் அதன்பின் எல்லாம் யுத்த மயமாகிவிட்டது.
சந்திரிகா குமாரதுங்க: ஆம் திருகோணமலை தாக்குதல் 2006ல் இடம்பெற்றது. நாங்கள் வழங்கிய அரசியல் பொதியை பற்றி நீங்கள் குறிப்பிடுவதால் இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும். நான் அதிகாரத்தை விட்டு வெளியேறியிருந்தேன் மற்றும் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜபக்ஸ தனக்காக தேர்தலில் ஆதரவை பெறுவதற்காக பிரபாகரனை முட்டாளாக்கினார். அவர் இரக்கமின்றி புலிகளின் பின்னே சென்றார் மற்றும் அதன்பின் பிரபாகரனை முடித்தார். எல்.ரீ.ரீ.ஈ உடன் தொடர்பிலிருந்த, எனக்குத் தெரிந்த புலம்பெயர் பகுதியில் உள்ள சில அங்கத்தவர்கள், நபர்கள், மற்றும் தொழில் நிபுணர்கள் போன்றவர்கள் ஒருமுறை என்னிடம் பேசியபோது, பிரபாகரனுடனான ஒரு சந்திப்பின்போது, பேச்சுக்களின் முடிவில் அவர்கள் பிரபாகரனிடம் எனது அரசியல் பொதியை பற்றிக் கேட்டதாகச் சொன்னார்கள். அதற்கு அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் போனதுக்காக வருந்துவதாகச் சொன்னாராம்.
  • கேள்வி: வட மாகாணத்தில் உள்ள சாதாரண தமிழர்கள், யுத்தக் குற்றச்சாட்டுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டுவருவதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா? இது பிரதானமாக புலம்பெயர் தமிழர்களால் வழி நடத்தப் படுகிறதா? அந்த மாகாணத்தில் உள்ள சாதாரண தமிழர்களின் மனநிலை என்ன?
சந்திரிகா குமாரதுங்க: வட மாகாணத்தில் உள்ள சராசரி தமிழர்களின் கவனம் யாவும் அவர்களின் காணாமற்போன பிரியப்பட்டவர்களைத் தேடுவது, நாடு திரும்புவதை மேற்கொள்வது, தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வது, மற்றும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நிலங்களை மீளப்பெறுவது என்பதிலேயே உள்ளது. கோத்தபாய ராஜபக்ஸவின் கீழிருந்த இராணுவத்துக்கு காணிகளைக் கைப்பற்றுவதற்கும் மற்றும் வியாபாரங்களை மேற்கொள்வதற்கும் மறைமுகமான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இராணுவம் சிறிய கடைகளுடன் கூடிய விடுதிகள், பெரிய பண்ணைகள் என்பனவற்றை நடத்தி வந்ததுடன் வெற்றிகரமான வணிக வியாபாரங்களையும் மேற்கொண்டு வந்தது. தற்போதைய அரசாங்கம் மக்கள் மெதுவாக தங்கள் காணிகளை மீளப்பெறுவதற்கு உதவி வருகிறது. வறிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், அவர்களுக்கு அபிவிருத்தி வேண்டும். இந்த வருடம் வடக்கு மற்றும் கிழக்கில் மீள்கட்டமைப்புகளுக்கான வேலை சரியானதும் நேர்மையானதுமான வழியில் ஆரம்பமாக உள்ளது: நீர்ப்பாசனம்,வீதிகள்,மருத்துவமனைகள்,பாடசாலைகள் மற்றும் உள்நாட்டு யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் போன்றவற்றிற்கான மீள்கட்டமைப்பு வேலைகள் ஆரம்பமாக உள்ளன. கல்வியறிவுள்ள தமிழர்கள் யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் இந்த நகர்வுக்கு தமிழ் புலம்பெயர் அமைப்புகள் எண்ணை வார்த்து எரியூட்டுகின்றன, அது அவர்களின் இருப்புக்கு அவசியமாக உள்ளது. முன்னர் அது யுத்தம் மற்றும் அநீதி என்பதாக இருந்தது, இப்போது அவர்களுக்கு நிதி அவசியமாக உள்ளது.
  • கேள்வி: ராஜபக்ஸவை ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிறுத்துவதற்கு முயன்றால் ஸ்ரீலங்காவில் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும்? மக்கள் அதை விரும்புகிறார்களா?
சந்திரிகா குமாரதுங்க: சிங்கள மக்களுக்கு ராஜபக்ஸவும் மற்றும் அவரது சகபாடிகளும் நாட்டின் தென்பகுதியில் மேற்கொண்ட ஊழல்கள் மற்றும் கொலைகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அந்த ஆட்சி ஊடகவியலாளர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளை கொலை செய்ததுக்கு பொறுப்பாக உள்ளது. நான் ஏற்கனவே சொன்னதைப்போல் வடக்கில் கல்வியாளர்கள் இதை விரும்புகிறார்கள்.
  • கேள்வி: உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைப் பொறுத்தவரை இப்போது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிற பெயரில் எல்லா வகையான அட்டூழியங்களையும் செய்து வருகின்றன. ஒருவேளை ஸ்ரீலங்காவின் விடயத்திற்கு வரும்போது உலகம் ஒரு வகையில் அதிகம் விதிமுறைகளை அமல்படுத்தும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
சந்திரிகா குமாரதுங்க: அமெரிக்கா, ஈராக் மற்றும் ஏனைய இடங்களில் செய்தவற்றை நாங்கள் எண்ணும்போது, ஒப்புநோக்கில் ஸ்ரீலங்கா மங்கிவிடுகிறது. ஆனால் நாங்கள் ஒரு சிறிய நாடு. எங்கள் அபிவிருத்திக்காக நாங்கள் உலகின் ஏனைய நாடுகளில்தான் தங்கியுள்ளோம். ஆனால் எனது வாழ்நாள் முழுவதும் ஒரு மனித உரிமை ஆர்வலராக பணியாற்றவள் என்கிற தனிப்பட்ட ரீதியில், அமெரிக்கர்கள் செய்கிறார்கள் அல்லது செய்தார்கள் அதனால் நாங்களும் அதையே செய்யவேண்டும் என்கிற வகையில் அதற்கு அர்த்தம் கொள்ள முடியாது. அதை ஒரு சாக்காக கருத முடியாது, மற்றும் அதை என்னால் எற்றுக்கொள்ளவும் முடியாது. பொறுப்பானவர்களை சட்டத்திற்கு முன்னால் நிறுத்தவேண்டும். நாங்கள் ஒரு உள்ளக விசாரணையை நடத்த உள்ளோம், ஒரு சர்வதேச விசாரணையை அல்ல, ஆனால் நீதித்துறையை பொறுத்த மட்டில் எல்லோரும் அல்ல ஆனால் பலர் ஊழல்வாதிகளாக உள்ளார்கள், அதைக் கண்காணிப்பதற்கு நாங்கள் சரியான நபர்களைத் தெரிவு செய்யவேண்டும். இவை அனைத்தும் அமைக்கப்பட்டு வருகிறது மற்றும் நான் அதற்கு ஆதரவு வழங்குகிறேன்.
  • கேள்வி: நீங்கள் யாழ்ப்பாணம் சென்றிருந்தீர்களா? எனக்கு நினைவிருக்கிறது எந்த ஒரு சிங்கள அரசியல்வாதியும் யாழ்ப்பாணம் செல்ல முடியாதிருந்தபோது உங்கள் கணவர் அங்கு பயணம் மேற்கொண்டார். தமிழ் மக்கள் அவர்மீது அதிகம் மதிப்பு வைத்திருந்தார்கள். உங்களுக்கு அவர்களின் பதில் என்னவாக இருந்தது?
சந்திரிகா குமாரதுங்க: ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் யுத்தத்திற்குப் பின் நான் பல சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணம் சென்றுள்ளேன். நான் இரகசியமாகவே சென்றிருந்தேன், அவர் இதை அறிந்திருந்தால் என்னை கொலைகூடச் செய்திருப்பார். ராஜபக்ஸ ஒரு பழிவாங்கும் வெறி கொண்டவர், எல்லாவற்றையும் விட  நான் அவரைப்போல ஒரு கொலைகாரியோ அல்லது கொள்ளைக்காரியோ இல்லை. தங்கள் சொந்த வீட்டுக்கு திரும்பிய மக்களுக்கு சூரிய சக்தி உபகரணங்களை வழங்குவதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். நான் பகல் பொழுதிலேயே சென்றிருந்தேன், அங்கு பெரும்பாலும் பெண்களே இருந்தார்கள், ஆண்கள் யாவரும் வேலைக்காக பல்வேறு துறைகளுக்கும் சென்றிருந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னறிவித்தல் கொடுக்காததால், எனக்கு ஒரு வரவேற்பை ஏற்பாடு செய்து எனக்கு ஒரு உணவைக்கூட தங்களால் தரமுடியவில்லையே என அந்த மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்திருந்தார்கள். என்னைக் கண்டதில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் எங்கள் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்வதற்காகவும் நான் அங்கு சென்றிருந்தேன், அப்போது அங்கு எனக்கு மகத்தான ஒரு வரவேற்பு கிடைத்தது. அங்கு ஒரு மாபெரும் கூட்டம் சேர்ந்திருந்தது.
  • கேள்வி: மக்கள் கசப்பான மனநிலையில் இருந்தார்களா?
சந்திரிகா குமாரதுங்க: கசப்பான மனநிலையில் இல்லை ஆனால் அச்சமடைந்திருந்தார்கள். ஆனால் என்னைக் கண்டு அல்ல. நிச்சயமாக என்னைப் பொறுத்தவரை நான் கசப்பானதோ அல்லது அச்சமூட்டுபவளோ இல்லை.
  • கேள்வி: ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க ஆகியவற்றின் எதிர்காலத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? இரண்டு எதிர் எதிரான கட்சிகள் ராஜபக்ஸ ஆட்சியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைந்தன, ஆனால் அதன்பின் என்ன நடக்கும்?
சந்திரிகா குமாரதுங்க: முழு ஐந்து வருட காலத்தையும் நாங்கள் பூர்த்தி செய்வோம். அடுத்த தேர்தலின்போது பார்ப்போம். இரண்டு கட்சிகளாகப் போட்டியிட்டு மற்றும் திரும்பவும் அரசாங்கத்தை அமைக்கும் சாத்தியம் உள்ளது.
  • கேள்வி: உங்கள் அரசியல் எதிர்காலம் பற்றி?
சந்திரிகா குமாரதுங்க: நான் அதிகாரப் பேராசை கொண்டவள் இல்லை. எனது நாட்டுக்காக எனது பங்கினை நான் செய்து முடித்துவிட்டேன். நானும் மற்றும் எனது குடும்பமும் ஒருபோதும் அதிகாரத்துக்காக அரசியல் செய்தவர்கள் இல்லை. நாங்கள் கொடுத்து மட்டுமே உள்ளோம் எதையும் எடுக்கவில்லை. எனது உணர்வுகள்தான் எனது அடித்தளங்கள் மற்றும் நான் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைப்பின் தலைவராகவும் ஈடுபட்டு வருகிறேன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire