mardi 9 octobre 2012

9 மாதங்களில் 19 கொலை, 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்

யாழ்.குடாநாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 19 கொலைச் சம்பவங்களும் 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விசேட உரையாற்றும் போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்.குடாநாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பாரிய குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் 21 கொலைச் சம்பவங்கள் யாழில் நடைபெற்றுள்ளது. இம்முறை அது குறைவடைந்து 19 ஆக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு யாழில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகரித்துச் சென்றுள்ளது. 2012 இந்த வருடத்தில் 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் காதல் விவகாரம் தொடர்பாக 21 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உறவினர்களினால் 3பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், 8பேர் யாழ்.மாவட்டத்தைச் சேராத வெளிமாவட்டத்தவர்களினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்தப்பட்டுள்ளனர். இந்த பாலியல் வல்லுறவுச் சம்பவங்களிவ் 27பேர் சிறுமியர்கள் எனவும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான குற்றச் சம்பவங்களைத் தவிர வாள்வெட்டுச் சம்பவங்கள், வீடு உடைத்துக் கொள்ளைச் சம்பவங்கள் என பல குற்றச் செயல்கள் பதிவு செய்யப்ட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire