mardi 16 octobre 2012

தனிநாடாக வேண்டுமா ? வாக்கெடுப்பிற்கு தயாராகும் மக்கள்


ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள்.  இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரைறைசெய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் அலெக்ஷ் சால்மண்டும் ​நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 15 ) கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு ஸ்காட்லாந்து தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு மகத்தான வெற்றிபெற்ற எஸ்என்பி என்ற ஸ்காட்லாந்தின் தேசியக் கட்சி சுதந்திரப் பிரகடனம் கோருவதற்கான ஆணையையும் மக்களிடம் பெற்றது.
அரசியலமைப்பு சார்ந்த விடயங்களை கையாளும் அதிகாரமுள்ள ஐக்கிய இராச்சிய அரசு, அதற்காக சட்டப்படி மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கான மட்டுப்பாடுகளுடன் கூடிய அதிகாரத்தை ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்துக்கு அளிக்கிறது.
இந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் ஆணை எப்படி இருந்தாலும் ஸ்காட்லாந்து-மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் இரண்டு அரசுகளும் ஆக்கபூர்வமாக இணைந்து செயலாற்ற வேண்டும் என்று இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பராவில் நேற்று கைச்சாத்தான உடன்படிக்கையின் படி, ‘ஆமா- இல்லையா?’ என்ற ஒற்றைக் கேள்வியை மக்களிடம் கேட்பதற்கான வாக்கெடுப்பை 2014-இன் இறுதியில் நடத்தும் அதிகாரம் ஸ்காட்லாந்துக்கு கிடைக்கிறது.
அதற்கான பிரச்சார விதிமுறைகள், தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு பொறிமுறைகள் என முக்கிய அம்சங்கள் இந்த 6-பக்க புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1707-இல் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இரண்டு இராச்சியங்களும் ‘ஐக்கிய இராச்சியமாக’ மாறி 300 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்இ இன்று இந்த புதிய சுதந்திர முயற்சி நடக்கிறது.
1920-களில் அயர்லாந்து சுதந்திரமடைந்ததன் பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் இன்னொரு பிரிவினை நடக்குமா என்பது இன்னும் 2 ஆண்டுகளில் தெரிந்துவிடும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire