vendredi 12 octobre 2012

மக்களின் போராட்டத்தில் நிலங்களைப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ளனர்.


மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மலையாளபுரம், கிருஷ்ணபுரம் விவசாய நிலங்களைப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி மாலையாளபுரம், கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் சுமார் 300 ஏக்கர் வரையான வயல் நிலங்களை படையினர் சிவில் பாதுகாப்புக் குழுவின் பண்ணைப் பயிர்ச் செய்கைக்கெனப் பறித்தெடுத்துக் கொண்டனர்.
இதனை அடுத்து நேற்று வியாழக்கிழமை அங்கு திரண்ட மக்கள் கடும் எதிர்ப்பைக்காட்டியதால் குறித்த பகுதிகளைப் படையினர் கைவிட்டுத் திரும்பியுள்ளனர்.1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைக்குரிய விவசாயச் செய்கையை மேற்மேற்கொள்ளும்பொருட்டு பழைய ஐயன்குளத்தின் கீழ் உள்ள மலையாளபுரம், கிருஷ்ணபுரம் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவதற்கு அங்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை குறித்த பகுதியில் காலபோகச் செய்கைக்கான ஆயத்த வேலைகளைச் செய்துகொண்டிருந்த விவசாயிகளை, தமக்கு குறித்த காணி ஒதுக்கப்பட்டதாகக் கூறி அங்கிருந்து விரட்டியடித்தனர் படையினர்.
இதனையடுத்துக் குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதையடுத்து குறித்த நிலங்களை விட்டுப் படையினர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பகுதியில் கடந்த 1988 ஆம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாகப் பயிர்செய்கை மேற்கொண்டு வந்ததுடன், 2004 ஆம் ஆண்டு குறித்த குளம் புனரமைப்பு செய்யப்பட்டு பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.தற்போது சுமார் 544 குடும்பங்கள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் இவர்களுக்கு விவசாய உள்ளீடுகள், உரமானியம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Aucun commentaire:

Enregistrer un commentaire