திருச்சியில் வைத்தும் தாக்குதல்: பிக்கு மீது 23 பேர் கைது
ஆராய்ச்சி பணிக்காக இலங்கையில் இருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்ற புத்த பிக்குவை தாக்கிய 15 பேரை பொலிசார் கைது செய்தனர். இதனையடுத்து குறித்த பிக்கு மீது திருச்சியில் வைத்தும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
டெல்லியில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சி மையத்தில் பயின்று வரும் சீனா, தாய்லாந்து, பர்மா, இலங்கை மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த 19 மாணவர்கள், தொல்லியல் துறை ஆய்வு பணிக்காக தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று வந்தனர். இவர்களில் இலங்கையை சேர்ந்த புத்த பிக்கு கனலேகாவும் ஒருவர். இவர்கள் நேற்று காலை பெரிய கோயிலில் சிற்ப கலைகள் குறித்து ஆய்வு பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சி, தமிழ்தேச பொதுவுடமை கட்சி, மதிமுகவினர் உட்பட 15 பேர் வந்து புத்தபிட்சுவை கோயிலை விட்டு வெளியேற்றக் கோரி கோஷமிட்டனர். அப்போது ஆய்வு மாணவர்கள் அனைவரும் வெளியில் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் புத்த பிட்சுவை ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் பயந்துபோன பிக்கு கனலேகா அங்கிருந்து ஓடினார். அவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் விரட்டி விரட்டி அடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து புத்த பிக்கு உள்ளிட்ட 19 பேரும் தொல்லியல்துறை அலுவலகத்திற்குள் தஞ்சமடைந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் புத்த பிக்குவை தாக்கிய 15 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை பாதுகாப்பாக 2 வேன்களில் ஏற்றி திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சியிலும் தாக்குதல்
இதற்கிடையில் 2 வேன்களும் திருச்சி அரியமங்கலம் பகுதியில் வந்த போது மதிமுகவினர் வேன்களை வழிமறித்து தாக்கினர். வேன்களை பின்தொடர்ந்து வந்த அவர்கள், பொன்மலை ஜி கார்னர் அருகே மீண்டும் தாக்கினர். இதில் 2 வேன்களின் கண்ணாடிகள் நொறுங்கின.
அங்கு வந்த பொன்மலை பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தார். வேன்களை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தால் ஆராய்ச்சி பணியை பாதியிலேயே முடித்துக்கொண்டு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire