இவர் பிறப்பால் ஒரு சிங்களவர். ஆனால், அந்த இனவாதத்துக்கு எதிராய், சரியாய் குரல் கொடுப்பவர். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கேள்வி: ராஜபக்ச சொல்வதைப்போல இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் ஒற்றுமையாக வாழமுடியுமா?
பதில்: வாய்ப்பே இல்லை. சிங்கள அரசு காலம் காலமாகத் தமிழர்களை ஏமாற்றி வருகிறது. இறுதி யுத்தத்தில் மட்டும் 40,000 பேரைக் கொன்று குவித்துவிட்டு, நல்லிணக்கம் உருவாகவேண்டும் என எப்படி எதிர்பார்க்கலாம்?
நான் ஒரு மார்க்சிஸ்ட். உலகின் எந்த நாட்டில் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் நடந்தாலும், நான் அதை ஆதரிப்பேன். சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிக்கிறேன்.
இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகள், தமிழர்கள் காலம் காலமாக வாழும் பகுதி. அதைத் தனி நாடாக்க வேண்டும் என அவர்கள் விரும்பினால், அதை ஆதரிக்கவேண்டும். அது அவர்களின் உரிமை. அதை ஆதரிக்க வேண்டியது என் கடமை.
கேள்வி: இப்படிப் பேசுவதால்தான் இலங்கையைவிட்டு நீங்கள் வெளியேறினீர்களா?
பதில்: 2009 ஜனவரி, இலங்கைப் பத்திரிகையாளர்களுக்கு கொடுமையான மாதம். அதை 'பிளாக் ஜனவரி’ என்றுகூட குறிப்பிடுவோம். 'சண்டே டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, மகிந்த அரசாங்கத்தால் கொல்லப்பட்டதும் அந்த மாதத்தில்தான்.
எனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே நான் அந்த சமயத்தில் இலங்கையைவிட்டு வெளியேறினேன். தென் இலங்கை சிங்களப் பத்திரிகையாளர்களான நாங்கள், ஒரு குழுவாக தமிழர் உரிமை, தமிழர் மீதான அடக்குமுறைக்கு எதிராகப் போராடினோம்.
எமக்கு மகிந்த அரசால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. வேறு வழி தெரியாமலேயே பலரும் அப்போது இலங்கையில் இருந்து வெளியேறினோம்.
கேள்வி: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட படம், பலத்த அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறதே?
பதில்: ராஜபக்ச அரசின் உண்மை முகத்தை சர்வதேசம் இப்போதுதான் மெதுவாக அறிந்து கொள்கிறது. அந்தப் பையனைப் பாருங்கள். அள்ளிக் கொஞ்சலாம்போல இருக்கிறது. அவன் முகத்தைப் பாருங்கள். சாப்பிட்டபடி, வேறு எதையோ சிந்திக்கிறான்.
பாலச்சந்திரன் கொலை, சர்வதேசத்தை உசுப்பி இருக்கிறது. சர்வதேசத்தை உசுப்ப சிறு குழந்தைகளின் மரணங்கள் தேவை எனும் ஒரு கொடிய உலகில் நாம் வாழ்கிறோம். உலகத்தின் மனசாட்சி முன்னால் இலங்கை தலைகுனிந்து நிற்கிறது.
கேள்வி: இலங்கைத் தமிழர்களின் வலியை நீங்கள் உணர்வது மாதிரி மற்ற சிங்களர்கள் உணர்கிறார்களா?
பதில்: இலங்கை அரசாங்கம் மக்களுக்கானது அல்ல. அது மகிந்த குடும்பத்துக்கானது. குடும்ப ஆட்சியை நிலைநாட்ட மகிந்த அரசு தமிழர்களைக் கொல்லும் என்பதை அறிந்து, உணர்ந்து இறுதிப் போர் தொடங்கியதில் இருந்தே எனது பேனாவால் தமிழர்களுக்காகப் போராடினேன்.
நாங்கள் அப்போது கையறு நிலையில் இருந்தோம். எம்மால் எதுவுமே செய்ய முடியவில்லை. சிங்கள பொதுஜனத்துக்கு தமிழ் மக்கள் மீதான வெறுப்பை சிங்கள அரசாங்கங்கள் காலம் காலமாக ஊட்டி வருகின்றன.
சிங்கள மக்கள் தமிழர்களின் வலியை உணர்ந்தால், அது சிங்கள அரசாங்கத்துக்கு பெரிய தோல்வி. ஆகவே, 'தமிழர்கள் உங்களின் எதிரிகள்’ எனும் கருத்தியலை அந்த அரசாங்கம் சிங்கள மக்களிடையே விதைத்து வருகிறது.
இலங்கையில் உள்ள தமிழர்கள் என்னுடைய சகோதரர்கள்’ என்று ராஜபக்ச சொல்கிறார். 40,000 சகோதரர்களைக் கொல்ல அவருக்கு எப்படி மனம் வந்தது? தமிழர்களுக்கு வேண்டியது அலங்கார வார்த்தைகள் இல்லை. நிஜமான அன்பு. அது, ராஜபக்சவிடம் எந்தக் காலத்திலும் கிடைக்காது.
கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு சர்வதேசம் நீதி பெற்றுத்தரும் என நம்புகிறீர்களா?
பதில்: எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. இப்போது போர்க்குற்றம் பேசும் சர்வதேசம் போர் நடந்த தருணத்தில் எங்கே போனது?
அமெரிக்கா... இலங்கையை எதிர்த்தால், அதில் அமெரிக்க நலன் இருக்கிறது.
இப்போது போர்க்குற்றம் பேசும் நாடுகள் எல்லாம் தமது நலனுக்காகவே அதைப் பேசுகின்றன. அவர்களிடம் உண்மையான அக்கறை இல்லை.
அவர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் நாடகம் ஆடினார்கள். ஆடுகிறார்கள். இனியும் ஆடுவார்கள்.
ஜூனியர் விகடன்
Aucun commentaire:
Enregistrer un commentaire