கடந்த 24-02-2013 அன்று உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்.எப்.) சார்பாக வழங்கப்பட்ட அறிக்கையின் தமிழாக்கம்.
'உலக நாடுகளின் தலைவர்களுக்கு,' தமிழ் இனத்துக்குத் தனிநாடுதான் பாதுகாப்பானது!
ஈழத் தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக பெரும் அழிவைச் சந்தித்து வருகின்றனர். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆயுதங்களால் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டு வந்தனர். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மொழி, கலை, பண்பாடு, மதம் மற்றும் பூர்விகப் பகுதிகள் என்று அனைத்து வழிகளிலும் இரகசியமாக சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
2009ல் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக ராணுவத்தினரால் அழிக்கப்பட்டதை அனைத்து நாடுகளும் பார்த்துக் கொண்டிருந்தன. காரணம் 'புலிகளின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்' என்பது பல நாடுகளின் விருப்பமாக இருந்தது. ஆனால் சிறிலங்கா அரசின் நோக்கம் அதுவல்ல! தமிழர்களை அழிக்க வேண்டும், அவர்களது பூர்விகப் பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள இனத்தை அப்பகுதிகளில் குடியமர்த்தி தமிழ் இனத்தின் அடையாளத்தையே இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே சிறிலங்கா அரசின் நோக்கமாக இருந்து வந்தது.
சிறிலங்காவில் நடைபெற்றது பொருளாதார ஏற்றத்தாழ்வு மோதல்கள் அல்ல! இரண்டு இனங்களுக்கிடையிலான மோதல்கள்தான் கடந்த காலங்களில் நடைபெற்றன. இந்த மோதல்களின் இறுதியில் சிங்கள இனத்தவர் வெற்றிப்பெற்றதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால், தமிழ் இனத்தவரில் இரண்டு லட்சம் பேர் வரை உயிரிழக்கக் காரணமாக இருந்தது முந்தைய 'பிரிட்டிஸ் ஆட்சியாளர்' தான் என்பதைக் காணலாம்.
ஐரோப்பியர் இலங்கையைக் கைப்பற்றும் போது சிங்கள இனத்தவர் நாடும் தமிழினத்தவர் நாடும் தனித் தனியான நாடுகளாகத்தான் இருந்தன. பிரிட்டிஸ்காரருக்கு முன்னர் போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் இலங்கையைக் கைப்பற்றி (1505 – 1796) ஆட்சி செய்தனர். இவர்கள் கைப்பற்றிய காலத்துக்கு முன்னர் இரண்டு நாடுகளாக இருந்தபடியால் சிங்கள இனத்தவரையும் தமிழ் இனத்தவரையும் தத்தம் பிரதேசங்களில் தனித் தனியாகவே நிர்வகித்தனர் மேற்சொன்ன இரு ஐரோப்பியரும்.
பிரிட்டிஸ்காரர் இவர்களிடமிருந்து கைப்பற்றி, இலங்கையைத் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து (1796) தங்களது நிர்வாக வசதிக்காக சிங்களவரது பகுதியான தென்பகுதியையும் தமிழர் பகுதிகளான வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரே நிர்வாகம் ஆக்கினர் (1833). இதுதான் ஒன்றுபட்ட 'சிலோன்' ஆக அழைக்கப்பட்டது.
ஆனால் இலங்கையை விட்டு பிரிட்டிஸ்காரர் வெளியேறும் போது தங்களது நிர்வாகத்தை சிங்களவரது கைகளில் ஒப்படைத்துவிட்டுச் சென்று விட்டனர். தனித் தனி நாடுகளாக இருந்த பகுதிகளை தங்களது படைபலத்தால் ஒன்றிணைத்தவர்கள், விட்டுச் செல்லும் போது சிங்களவரிடம் மட்டுமே ஆட்சி அதிகாரத்தை வழங்கிவிட்டுச் சென்றது மாபெரும் தவறாக அமைந்தது.
இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட ஆண்டான 1948ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்து விட்டனர் சிங்கள இனத்தவர். மொழி, மதம், கலை, பண்பாடு, கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம், தொழில் வளர்ச்சி என்று அனைத்துத் தரப்பிலும் திட்டமிடப்பட்டுத் தமிழ் மக்கள் நசுக்கப்பட்டனர்.
தமிழர் நாடு சிங்களவர் நாடு என்ற இரண்டு நாடுகளும் பிரிட்டிசாரால் ஒன்றிணைக்கப்பட்டதால் தமிழ் இனம் சிறுபான்மை ஆக்கப்பட்டது. பின்னர் சிறுபான்மையினர் பிரச்சினை என்று திசைமாற்றப்பட்டது தமிழ் இனத்தினரது உரிமைப் பிரச்சினைகள். சிங்கள இனத்தவரும், சிங்களப் படைகளும் இணைந்து தமிழ் இனத்துக்கு எதிராகச் செயல்பட்டு கலவரங்களை ஏற்படுத்தினர், பின்னர் அவற்றை அடக்குவதற்கு முயற்சிக்கிறோம் என்று முப்படைகளும் இணைந்து அழிக்க முற்பட்ட வேளைதான் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை நாடிச் சென்றனர். இவ்விதம் ஆயுதங்களைக் கையிலேந்திய தமிழ் இளைஞர்களின் இயக்கங்களில் 'விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக' மாறியது உண்மைதான். இதனைக் காரணமாகக் காண்பித்து தமிழ் இனத்தினுடைய உரிமைப் பிரச்சினைகள் அனைத்தும் பயங்கரவாதமாகக் காட்டப்பட்டது சிங்கள அரசினால்.
விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று தமிழ் மக்களை அழித்ததை யாரும் மறுக்க முடியாது. இவற்றில் கொடுமையானது பிரபாகரனின் 11வயது மகனைப் படுகொலை செய்தது சிங்கள இனத்தின் தமிழின அழிப்பின் வக்கிரத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது உலகுக்கு!
சிங்கள இனத்திலிருந்து வந்தவர்கள்தான் சிங்களச் சிப்பாய்கள். சிங்கள இராணுவத்தின் எண்ணங்கள் வேறு, சிங்கள இனத்தின் எண்ணங்கள் வேறு அல்ல! சிங்கள இனம் பௌத்த பிக்குகளால் வழி நடத்தப்படுகிறது. இராணுவமும் பௌத்தமயமாக்கப்பட்டுத் தான் களத்தில் இறக்கப்பட்டனர். சிங்கள இராணுவத்துக்கு போதனைகள் வழங்குபவர்கள் பௌத்த சிங்கள தேரோக்கள்தான். இலங்கைக்கு வந்த பௌத்தம் தமிழ் இனத்தையும் அவர்களது மதங்களையும் அழிக்க வேண்டும் என்று கடந்த 2000ம் ஆண்டுகளாகவே சிங்கள இனத்தின் மத்தியில் போதனைகள் செய்து வருகிறது. ஆதலால் சிங்கள இனம் தமிழ் இனத்துக்கான விரோதப் போக்கிலிருந்து எந்தக் காலத்திலும் விலகியதில்லை, விலகப் போவதுமில்லை. பௌத்தம் ஏனைய நாடுகளில் அகிம்சையைப் போதித்தாலும், சிறிலங்காவில் வன்முறையைத்தான் போதிக்கிறது.
சிங்கள இனம், அதன் ஆட்சியாளர்கள், படைகள் ஆகிய இவை மூன்றும் தமிழ் இனத்துக்கெதிரான விரோதப் போக்கினை மேற்கொள்ள பௌத்த பிக்குகள்தான் காரணகர்த்தாக்கள். இந்த மதபோதகர்களது பிடியிலிருந்து எந்தக் காலத்திலும் இந்த மூன்று பிரிவினரும் தமிழர் விரோதப் போக்கிலிருந்து விலகி வெளிவர முடியாது.
பௌத்த மதம் இலங்கைக்குள் புகுந்து 2000ம் ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த மதம் புகுந்த ஒரு சில நூற்றாண்டுகளிலேயே தமிழ் இனத்துக்கு விரோதமான மதமாக மாற்றப்பட்டது. பௌத்தத்தை வளர்ப்பதற்காக இரு இனங்களுக்கும் இடையில் பகைமை உண்டுபண்ணப்பட்டது. அந்தப் பகை கடந்த 2009ல் வெளியுலகுக்குப் பகிரங்கமாகக் காண்பிக்கப்பட்டது. தமிழர்கள் முற்றும் முழுதாக பலமிழந்தவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தவித உரிமையையும் இனிவரும் காலங்களில் சிங்கள அரசிடமிருந்து பெற முடியாது. அப்படி உரிமைகள் பெறுவதற்கு பௌத்தம் அனுமதியும் வழங்காது.
2009ல் நடத்தப்பட்ட படுகொலைகள் மனிதவரலாற்றில் இதுவரை நிகழ்த்தப்படாதது. இப்படி ஓர் இன அழிப்பை சிறிலங்கா அரசு நடத்துவதற்கான சூழ்நிலையையும் பலத்தையும் பிரிட்டன் அரசாங்கம் 1948ல் ஏற்படுத்திக் கொடுத்தது. இலங்கையின் முழு நிர்வாகமும் சிங்கள மக்களிடம் மட்டுமே கையளிக்கப்பட்டதினால்தான் தமிழர்கள் இதுபோல் அழிக்கப்பட்டனர் என்றால் அது மிகையல்ல.
ஐரோப்பியரது வருகைக்கு முன்னர் தமிழ் இனத்துடன் மோதித் தோல்விகண்டிருந்த சிங்கள இனத்துக்கு இலவசமாக மூன்று படைகளும், நிர்வாகமும் கிடைத்ததும் தமிழ் இனத்தை அழிப்பதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாகவே மேற்கொண்டது.
அவை::
01) சிங்கள மக்களை தமிழ்ப் பிரதேசங்களில் குடியமர்த்துதல்
02) தமிழர் பகுதிகளின் வழமான நிலங்களை அபகரித்தல்,
03) சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்குதல், தமிழைப் புறக்கணித்தல்,
04) தமிழர்கள் கல்வியில் முன்னேறுவதை தடுத்து நிறுத்துதல்,
05) தமிழர்களின் அரசு வேலை வாய்ப்பினை அறவே இல்லாது ஒழித்தல்,
06) நாடாளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, அரசியல் உரிமைகள் கோருவதைத் குறைத்தல்,
07) தமிழர்களின் இந்து, இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களைப் புறக்கணித்தல்,
08) தமிழர் பகுதிகளில் தொழிற்சாலைகள் நிர்மாணிப்பதைத் தடுத்தல்,
09) தமிழர் பகுதிகளில் தமிழர்களுக்கு வருவாய் தரும் தொழிலான மீன்பிடி, விவசாயத்திற்குள் சிங்கள மக்களைப் புகுத்தி பொருளாதார ரீதியாக தமிழர் வளர்ச்சிப் பெறுவதைத் தடுத்தல்,
10) மொத்தத்தில் இலங்கையைச் 'சிங்கள பௌத்த நாடு' என்று மாற்றி தமிழர்களை முற்றாக ஒடுக்குதல்.
இவை போன்று பல தரப்பிலும் தமிழர்களை அழிப்பதற்கான பணிகளை மேற்கொண்ட போதுதான் தமிழர்கள் விழிப்படைந்து இவற்றினை எதிர்க்க முற்பட்டனர். இருந்த போதிலும் சிங்கள இனத்தவர் தங்கள் ஆட்சியாளர் மூலமாக மேலே கூறப்பட்ட அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர். இவ்வளவு தீங்குகளையும் செய்து முடிப்பதற்கு சிங்கள இனத்துக்குப் பலம் வாய்க்கப்பெற்றதற்குக் காரணமாக அமைந்தது பிரிட்டிஸ்காரர் இலங்கைக்கு வழங்கிவிட்டுச் சென்ற சுதந்திரம்தான். அந்தச் சுதந்திரம் சிங்களவருக்கு மட்டும் என்றானது, அதிகாரமும் அவர்களது கைகளுக்குச் சென்றது. இதுவே தமிழினத்துக்கு வீழ்ச்சியானது.
2009 மே மாதத்துக்குப் பின்னர் எஞ்சிய தமிழ் இனம் இலங்கையில் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கிக் கொண்டுள்ளது. தமிழினப் படுகொலைக்குப் பிறகு கிடைக்கப் பெற்ற சாட்சியங்களையும், புகைப்படங்களையும் வைத்து குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க முற்படுவது வரவேற்கத்தக்கது.
இதே போன்று சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்றும் குரல்கள் எழுப்பப் படுகின்றன. இதுவும் வரவேற்கத்தக்கது. ஆனால் இதன் மூலம் ஒடுக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பும் சுதந்திரமும் கிடைக்குமா என்றால் வாய்ப்பில்லை என்றே கொள்ளலாம்.
மனித உரிமையை மீறியவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கையும் அதன்மீது தண்டனையும் வழங்கப்பட வேண்டும், ஆனால் இந்த முயற்சி வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்களைப் பாதிக்கும். ஏனெனில் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் சிங்களப் படைகளால் சூழப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறிய படையினர் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், தங்களது பகையுணர்வை மீண்டும் தங்குதடையின்றி தமிழ் மக்கள் மீது பிரயோகிப்பார்கள்.
இதே போன்று பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் சீனா போன்ற நாடுகள் சிங்கள அரசுக்கு நேரடியாகவே பொருளாதார உதவிகள் வழங்கும் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். இதனால் சிறிலங்காவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதே வேளை பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டால் பாதிக்கப்படுவது கண்டிப்பாகத் தமிழ் மக்களாகத்தான் இருப்பார்கள். கடலாலும், நிலத்தாலும், வான் பகுதியாலும் தமிழ் மக்கள் எதிரிகளால் சூழப்பட்டுள்ளனர். பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால், தமிழ் மக்களுக்கு செல்லவிருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் சிங்கள இராணுவத்தினரும், ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களும் கண்டிப்பாகத் தடுப்பார்கள்.
தமிழ் மக்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் என்றால் பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்று தமிழ் மக்களைப் பணயமாக வைப்பார்கள் சிங்கள ஆட்சியாளர். ஆதலால் இவற்றின் மூலம் பாதிக்கப்படுவதும் தமிழ் மக்கள்தான் என்பது தெளிவாகிறது.
எனவே, தமிழ் மக்களுக்கு, அவர்கள் இழந்த ஈடிணையற்ற இழப்புகளுக்கு ஈடாக ஏதாவது செய்ய நினைத்தால், அந்த மக்களைப் பாதுகாப்பாக வாழவைக்க வேண்டும்.
பாதுகாப்பென்றால், சிங்களப் படைகள் வழங்கும் பாதுகாப்பல்ல, சிங்களப் படைகள் தமிழர்களை கண்மூடித்தனமாக அழித்தவர்கள். சிங்கள அரசிடமிருந்தும், சிங்களப் படைகளிடமிருந்தும் தமிழ் மக்களைப் பாதுகாத்தால் தான் அவர்கள் மீது இரக்கம் கொண்டதற்கு அர்த்தமுடையதாகும்.
தமிழ் மக்கள் பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் அவர்கள் சிங்கள ஆட்சியாளரிடமிருந்து விடுபட்டு வாழ வேண்டும். சிங்களப் படைகள் தமிழ் இனத்தின் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டால்தான் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.
தமிழ் மக்கள் ஐரோப்பியரின் படையெடுப்புக்கு முன்னர் தனித்து அரசாட்சி செய்து வாழ்ந்தவர்கள்தான். சிங்கள இனம் படை பலம் பெற்று தமிழ் இனத்தை அழிப்பதற்கு வழி வகுத்தது ஐரோப்பியரின் ஆட்சிகள்தான். குறிப்பாக பிரிட்டன்தான் அப்படி சிங்கள இனத்தவரை பலமிக்கவர்களாக ஏற்படுத்திவிட்டுச் சென்ற நாடு என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.
எனவே, பிரிட்டன் ஈழத் தமிழர் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட வேண்டும். ஈழத் தமிழர்கள் எந்ததெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அந்த நாடுகள் ஒன்றிணைந்தாவது ஈழத் தமிழ் இனத்துக்கு ஓர் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஈழத் தமிழர் சார்பாக இந்தியா இலங்கையுடன் ஓர் ஒப்பந்தம் செய்தது. குறைந்தபட்ச உரிமைகளைக் கொண்ட அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டவை எதனையும் சிங்கள அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. ஒப்பந்தங்களாலும் ஆலோசனைகளாலும் சிங்கள அரசை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. தமிழ் இனம் தனித்து வாழ்ந்தால்தான் பாதுகாப்புடன் வாழ முடியும்.
ஐ.நா.வில் தீர்மானம் வருவதை வரவேற்கும் அதே வேளை ஐ.நா.வுக்கு வெளியில் இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் ஓர் கூட்டமைப்பை ஏற்படுத்தி ஈழத் தமிழ் இனத்துக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.
நன்றி!
ஞா.ஞானசேகரன்
தலைவர்
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
Aucun commentaire:
Enregistrer un commentaire