தமிழகத்தில் தமிழீழம் கோரி மாணவர்கள் பேரெழுச்சியாக தொடர் போராட்டங்களை நடத்தி வருவதைத் தொடர்ந்து இலங்கையுடன் இந்தியா அடுத்த வாரம் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு திடீரென ரத்து செய்திருக்கிறது.
இந்தியா - இலங்கைக்கிடையே இடையே எதிர்வரும் 23-ந் தேதி பாதுகாப்புத் துறை செயலாளர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் மிகப் பெரும் கொந்தளிப்பான சூழ்நிலையாக மாணவர்கள் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இலங்கையுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுகவின் விலகல் எச்சரிக்கை: நாளை காங்கிரஸ் எம்.பிக்களுடன் சோனியா முக்கிய ஆலோசனை
மத்திய அரசில் இருந்து விலகுவோம் என திமுக எச்சரித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் எம்பிக்களுடன் அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், போர்க் குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.
திருத்தங்களுக்கு பின் அந்த தீர்மானத்தின் மீது எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் தீர்மானத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்து அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வற்புறுத்தி உள்ளார்.
அதாவது இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க் குற்றம் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்துமாறும், போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க சுயேச்சையான பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கும் வகையிலும் திருத்தம் செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மத்திய அரசை வற்புறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அவர் விடுத்த கோரிக்கைகளை அவர்கள் காற்றில் பறக்க விட்டனர்.
இதையடுத்து அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா மேற்கண்ட திருத்தங்களை கொண்டு வராவிட்டால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்காது என்றும் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால், சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமை நெருக்கடியில் உள்ளது. இலங்கை விவகாரத்தை வைத்து கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால், காங்கிரஸ் தமிழர்களுக்கு விரோதமானது என்ற முத்திரை விழ வாய்ப்புள்ளது.
காங்கிரசுடன் டி.ராஜேந்தர் கூட கூட்டணி வைக்க முன் வர மாட்டார் என்ற நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையான சவால்களை அந்தக் கட்சி வாங்க முடியும்.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற பொதுக் குழுவை (எம்.பிக்கள் கூட்டம்) கூட்டியுள்ளார். அதில் கருணாநிதி விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எம்.பிக்களின் கருத்துகளை அவர் கேட்டறிய உள்ளார்.
இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை என பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: கருணாநிதி
இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தாம் வலியுறுத்தியதாகவும் இதை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஆண்டனி மற்றும் குலாம்நபி ஆசாத் ஆகியோர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்புக்குப் பினன்ர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தினேன். அவர்களும் அதை ஒப்புக் கொண்டு உறுதி அளித்திருக்கின்றனர். இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். இதற்கு ஆவண செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது. இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை தேவை. இந்த விசாரணையை குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாட்டையும் மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்தேன் எகத் தெரிவித்தார்
கருணாநிதியுடன் 3 மத்திய அமைச்சர்கள் சந்திப்பு: முடிவெடுக்கப்படவில்லை -ஆசாத்
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன் 3 மத்திய அமைச்சர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளிப்படையாக இரு தரப்பும் தெரிவிக்கவில்லை.
ஜெனிவா தீர்மானத்தில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்றும் இதற்கு சர்வதேச விசாரணை தேவை என்றும் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு.
இந்த திருத்தத்தை மேற்கொள்ளாவிட்டால் மத்திய அரசில் இருந்து மட்டுமல்ல.. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறும் என்று கருணாநிதி எச்சரித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கருணாநிதியுடன் ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஏ.கே.ஆண்டனி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சென்னை சென்றனர்.
விமான நிலையத்தில் அவர்களுக்கு மதிமுகவினர் கரறுப்புக் கொடி காட்ட முயற்சித்தனர். போலீசார் கரறுப்பு கொடி காட்ட முயன்றவர்களை கைது செய்தனர்.
பின்னர் மூன்று மத்திய அமைச்சர்களும் கருணாநிதியை அவரது சிஐடி காலனி வீட்டில் மாலை 5.40 மணிக்கு சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கருணாநிதியுடனான பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தெரிவித்து இறுதி முடிவெடுப்போம் எனக் கூறியுள்ளார்.
8ஆவது நாளாக தொடரும் மாணவர் போராட்டம்.
தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் எழுச்சியோடு நீடிக்கிறது தமிழீழத்துக்கான மாணவர்கள் போராட்டம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்தது. ஆனால் அரசின் விடுமுறை அறிவிப்பையும் மீறி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவையில் சட்டக் கல்லூரி, பாரதியார் பல்கலைக் கழக மாணவர்கள் 8-வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்கள் காயக்கட்டுகளைப் போட்டபடி ஈழத்து அவலத்தை சித்தரிக்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுவை பல்கலைக் கழக வளாகத்தில் 40 மாணவர்கள் 5-வது நாளாக சாகும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி, சென்னை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவபொம்மையை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.
ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி பொறியியல் கல்லூரி
திருவாரூர் கலைக்கல்லூரி
புதுக்கோட்டை விராலிமலை கல்லூரி
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்
திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி,
திருவள்ளூர் தனியார் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களும் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காஞ்சிபுரத்தில் 5 கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பெரம்பலூர் தனியார் கல்லூரி மாணவர்கள் 800 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஐடிஐ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
சேலம் பெரியார் பல்கலைக் கழக மாணவர்கள் 20 பேர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் அனைத்து கல்லூரி மாணவர்களும் இணைந்து திருமலை நாயக்கர் கலை கல்லூரியில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை பேரணி நடத்தினர்.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 10 பேர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக அங்கிருந்து நடைபயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.
கோவில்பட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்த 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
திருச்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் திருச்சி- மதுரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இலங்கை பிரச்சனை: நாளை சினிமா இயக்குநர்கள் உண்ணாவிரதம்
தனித் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு மற்றும் போர்க்குற்றவாளி ராஜபக்சவுக்கு தண்டனை கோரி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நாளை சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது.
இதில் பங்கேற்க அனைத்து திரைப்பட அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கூட்டம் அமீர் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
இதில் இலங்கை அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:
இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு உடனே நடை முறைப்படுத்த வேண்டும்.
போர்க்குற்றவாளி ராஜபக்ஷவை சுதந்திரமான பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
ஈழத்தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
வாக்கெடுப்பு நடத்த ஏதுவாக இலங்கையில் தமிழர் பகுதிகளில் திணிக்கப்பட்டிருக்கும் சிங்கள குடியேற்றத்தை உடனே வெளியேற்ற இலங்கையை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்.
இனப்படுகொலை செய்த இலங்கையுடனான உறவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் 19.3.2013 செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் 6 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணா நிலைப் போராட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறது.
இந்த அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கில்டு, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கம் மற்றும் சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் 19.3.2013 அன்று ஒருநாள் படப்பிடிப்பு மற்றும் தங்களது பணிகளை தவிர்த்துவிட்டு, போராட்டத்தில் பங்கெடுத்து முழுமையான ஒத்துழைப்பை அளிக்குமாறு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது - oneindia
Aucun commentaire:
Enregistrer un commentaire