vendredi 29 mars 2013

ஸ்ரீலங்கா தமிழர்களுக்கும் மற்றும்; சிங்களவர்களுக்கும் பிரச்சினையை ஏற்படுத்துமா?மேற்கொள்ளப்படும் கூச்சல்கள்;சோ


choதமிழ் அரசியல் வார இதழான துக்ளக்கின் ஆசிரியரான சோ ராமசாமி,அவர்கள் தமிழ் நாட்டில் மிகவும் புகழ் வாய்ந்த அரசியல் ஆய்வாளராவார். ஷோபா வாரியாருக்கு அவர் வழங்கியுள்ள இந்த பிரத்தியேக நேர்காணலில் அவர் ஸ்ரீலங்காத் தமிழர்கள் விடயம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் வெளியேறியது, மற்றும் அடுத்து வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான அவரது எண்ணங்கள் என்பனவற்றை வெளிப்படுத்துகிறார்.
  • திராவிட முன்னேற்ற கழகம்(திமுக) ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து(யு.பி.ஏ) வெளியேறப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தபோது, அவர்கள் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றுவதாகத்தான் பலரும் எண்ணினார்கள். ஆனால் இறுதியாக அவர்கள் தங்கள் ஆதரவை விலக்கி விட்டார்கள். இந்தமுறை அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேறுவார்கள் என நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
இந்த முடிவையிட்டு கருணாநிதி மகிழ்ச்சி அடைகிறார் என்பதில்  எனக்கு இன்னமும் நிச்சயம் இல்லை,ஏனெனில் தேர்தல்களைப் பொறுத்தமட்டில், ஒரு சத விகிதம் அல்லது ஒன்றரை சத விகிதம் வாக்குகளைப் பெறக்கூடிய சிறிய கட்சிகளைக்கூட அவர் தன்னுடன் சேர்த்துக் கொள்வார். தற்போதைய சூழ்நிலையில் - அதாவது திமுக வுக்கு எதிரான வழக்குகள் போன்றவற்றில் - இன்னமும் அவருக்கு உதவி செய்யக்கூடிய ஒரு கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் திமுகவுக்கு உதவி செய்கிறதோ இல்லையோ, ஏனைய கட்சிகள் அதை செய்யப்போவதில்லை.
மற்றும் அவரால் பாரதிய ஜனதா கட்சியிடம் போகமுடியாது, ஏனெனில் அவரது முந்தைய நிலைப்பாடு மற்றும் முஸ்லிம் வாக்குகளை கவர்ந்திழுக்கும் அவரது நம்பிக்கை என்பன அதற்கு தடையாக உள்ளன. அவர் அதை கொண்டிருக்கிறாரோ இல்லையோ என்பது வேறு விடயம்.
எனவே சிலகாலங்களுக்குப் பின்னர் அவரை சமாதானப்படுத்துவதற்காக ,அவரை முகஸ்துதி செய்யும்படியாக, ஸ்ரீலங்கா பற்றிய சில விடயங்களை கூறி அவரை வசப்படுத்த சில சூத்திரங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளலாம். எல்லாவற்றையும் விட தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களது வாக்குகளை கவரும் சக்தி தனக்குத்தான் உள்ளதாக அவர் தன்னைப்பற்றி வெளிப்படுத்தி வருகிறார்.
இப்போது அவர் பீற்றிக் கொள்ளும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான டெசோவுக்கு சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கௌரவமான சவ அடக்கம் செய்யப்பட்டது. அதன் சமாதியில் இருந்து அதை அவர் தோண்டி எடுத்ததுடன், டெசோவின் எலும்புக்கூடு இப்போது ஊடகங்களில் நாட்டியமாடி வருகிறது. மக்கள் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஸ்ரீலங்கா பற்றி அவர் வெளிக்காட்டும் தோரணைகளால் யாருமே ஈர்க்கப்படுவதில்லை. அவர் அதிகாரத்தில் இருந்தபோது அந்த மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும் அவர் எதுவுமே செய்யவில்லை. நான் அதை யுத்தம் என்று சொல்ல மாட்டேன், அது கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஒரு இராணுவ நடவடிக்கை. இப்போது அவர் அதைப்பற்றிய ஒரு பிரேதப் பரிசோதனை அறிக்கையை கோருகிறார்.
  • ஸ்ரீலங்காவில் யுத்தம் 2009 ல் முடிவடைந்துவிட்டது. தமிழ் நாட்டில் இந்த விடயம் ஏன் திடீரென உயிர் பெற்று எழுந்தது?
எங்கெல்லாம் தமிழர்கள் வாழுகிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களின் பாதுகாவலன் எப்பொழுதும் தான்தான் என கருணாநிதி நினைத்து வந்தார். இப்போது அந்த மேடை அவரிடமிருந்து ஜெ.ஜெயலலிதாவினால் திருடப்பட்டு விட்டது, அவர் இப்பொழுது தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்போது ஜெயலலிதாதான் தேவையான அனைத்துப் போராட்டங்களையும் நடத்துகிறார், தமிழர்களை பொறுத்தவரை, அவர் ஒரு இரும்புப் பெண்மணியாகவே காட்சியளிக்கிறார். கருணாநிதிக்கு இப்போது ஜெயலலிதாவுடன் போட்டி போட்டு தனது பெருமையை திரும்ப பெறவேண்டியுள்ளது.
  • தமிழ் நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கு மின் தட்டுப்பாடு தண்ணீர் தட்டுப்பாடு போன்ற ஏராளமான வேறு சொந்தப் பிரச்சினைகள் உள்ளபோது, ஸ்ரீலங்காவில் நடப்பதை பற்றி அவர்கள் உண்மையிலேயே கவலைப்படுவார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?cho-3
இதைத்தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன் ஸ்ரீலங்காத் தமிழர்கள் பிரச்சினை தமிழ்நாட்டில் ஒரு தேர்தல் பிரச்சினையாக இருந்ததே இல்லை. இந்த விடயத்துக்காக அவர்கள் ஒருபோதும் வாக்களித்ததில்லை.அங்கு நிலவும் பிரச்சினைகளுக்காக இங்குள்ள மக்கள் அதிகம் வருத்தப் படுபவர்களாக இருந்தால், பின்னர் வைகோ ஏன் வெறும் 2 சதவிகித வாக்குகளை மட்டும் பெற்றார்? இந்த விடயத்தை பற்றிப் பேசும் வேறு சில சிறிய கட்சிகளால் சொந்தமாக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாமல் போனது ஏன்? உண்மையில் தமிழர்கள் அவர்களைப்பற்றி அக்கறை கொண்டுள்ளார்கள். ஸ்ரீலங்காத் தமிழர்கள், கௌரவம், கண்ணியம், சமாதானம் மற்றும் சிங்களவர்களைப்போல சம உரிமையுடன் வாழவேண்டும் என்று இங்குள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள்.
  • வரையறுக்கப்பட்ட சில சிறிய குழுக்கள்தான் இந்த இரைச்சலை ஏற்படுத்துகின்றன, மற்றும் ஊடகங்கள் அதை பரபரப்பான செய்திகளாக பரிமாறுகின்றன. இங்கு ஒரு பெரிய எழுச்சி உள்ளதாகக் காட்டப்படுகிறது. மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
எத்தனை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்? ஒரு கல்லூரியில் 3,000 மாணவர்கள் இருந்தால் அவர்களில் 150 பேர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். மற்றவர்கள் வீட்டுக்குப் போய் விடுமுறையை அனுபவிக்கிறார்கள். முழு மாணவர் சமுதாயமே இதைப்பற்றி கவலைப்படுகிறது என்று இல்லை.
இளம் தொழில் நிபுணர்களும் மாணவர்களுடன் இந்த ஆhப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றனவே…… எத்தனைபேர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? வெகு சிலர் மட்டுமே அதைச் செய்கிறார்கள்.

  • எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் பேச்சாளர் வேலாயுதம் தயாநிதி ஒரு நேர்காணலில் தமிழ் நாட்டில் உள்ள அரசியற் கட்சிகள் தங்கள் அரசியல் இலாபத்துக்காக ஸ்ரீலங்கா தமிழர்களின் பெயரைப் பயன்படுத்துவதாக ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் எண்ணுவதாகச் சொல்லியுள்ளாரே. நீங்களும் அப்படி எண்ணுகிறீர்களா?cho-4
ஆம். ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு அது மிக நன்றாகத் தெரியும். புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புகூட ஸ்ரீலங்கா ஜனாதிபதியை யுத்தக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென்றோ, மற்றும் இனப் படுகொலை என்கிற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்றோ பெரிதாக சத்தம் எதுவும் எழுப்பவில்லை. ஆனால் தமிழ் நாட்டிலுள்ள சில சிறு குழுக்கள் அதைச் செய்கின்றன. சிலவேளை வெளிநாட்டிலுள்ள சில இயக்கங்கள் அவர்களுக்கு நிதி அளித்திருக்கலாம், எனக்கு அது பற்றித் தெரியாது.
கொழும்புத் தமிழர்கள்,, இந்திய வம்சாவளித் தமிழர்கள் பற்றி என்ன சொல்வது? தோட்டப் பகுதி தமிழர்கள் பற்றி என்ன சொல்வது? அவர்களும் தமிழர்கள் தானே, இங்கேயுள்ள எங்களைப் போன்ற தமிழர்கள்தான் அவர்களும். அவர்கள் கொழும்பிலோ, தோட்டப் பகுதிகளிலோ அல்லது கிழக்கிலோ ஆர்ப்பாட்டம் எதனையும் நடத்தவில்லை.
இப்போது அவர்களுக்கு வேண்டியதெல்லாம் புனர்வாழ்வு. தோட்டப்பகுதி தமிழர்களையோ அல்லது கொழும்புத் தமிழர்களையோ அல்லது கிழக்குத் தமிழர்களையோ விட்டு விடுங்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இடம்பெயர்ந்த தமிழர்கள்தான் புனர்வாழ்வு மற்றும் இந்தியாவில் நாங்கள் கொண்டுள்ளதை போன்ற ஒரு வகை சுயாட்சியை விரும்புகிறார்கள்.
  • இங்கு மேற்கொள்ளப்படும் கூச்சல்கள், ஸ்ரீலங்கா தமிழர்களுக்கும் மற்றும்; சிங்களவர்களுக்கும் அங்கு பிரச்சினையை ஏற்படுத்துமா?
நிச்சயமாக, அது சிங்களவர்களுக்கும் மற்றும் தமிழ் பொதுமக்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தும். இது எந்த வழியிலும் அவர்களுக்கு உதவப் போவதில்லை. உண்மையில் நான் சொல்வது என்னவென்றால் தமிழர்களின் வெற்றி வீரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் எல்.ரீ.ரீ.ஈயின் முழு அழிவுக்கும் காரணகர்த்தாக்கள், ஏனெனில் இந்தியா தலையிட்டு ஸ்ரீலங்கா நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் என்று இவர்கள்தான் எல்.ரீ.ரீ.ஈ யினை நம்ப வைத்தார்கள்.
  • ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஒரு பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக விரும்புகிறது. அப்சல் குரு தூக்கிலிடப்படுவதற்கு எதிராக பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியபோது,அது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை மற்றும் பாகிஸ்தான் அதில் தலையிடுவதற்கு உரிமையில்லை என்று இந்தியா அதைக் கண்டித்தது, மற்றொரு நாட்டுக்கு எதிராக இந்தியா அதனை செய்ய முடியுமா?
ஆம், பாகிஸ்தான் செய்ததை இந்தியா ஆட்சேபித்து அது உங்கள் வேலை இல்லை என்று சொன்னது. அதே வழியில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக இந்தியப் பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதும் இந்தியாவின் வேலை இல்லை. அது ஒரு தீய நடைமுறைக்கு வழி வகுக்கும், அது காஷ்மீர் விடயத்தில் எங்களைப் பாதிக்கும்.காஷ்மீர் விடயத்தில் தங்களுக்கு எதிரான புகார்களுக்கு இந்தியா பொறுப்புக்கூற வேண்டும் என்ற வகையான ஒரு கோரிக்கையை பாகிஸ்தான் எழுப்பலாம்,அது உண்மையோ இல்லையோ அது வேறு விடயம், ஆனால் கூச்சல் போடுவதற்கு அதில் அடித்தளம் உள்ளது,மற்றும் பாகிஸ்தான் நிச்சயம் கூச்சல் போடும்.
  • காங்கிரஸ், திமுகவை திருப்திப் படுத்துவதற்காக ஸ்ரீலங்காவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதைப்பற்றி எதிர்க் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியதே…..
காங்கிரஸ் அதை உண்மையிலேயே விரும்பியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவருவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் மற்றவர்களுடன் கலந்தாலோசிப்பதை பற்றி அவர்கள் பேசினார்கள்.cho-5
ஸ்ரீலங்கா எதிர்நோக்கிய பிரச்சினைகள் யாவும் ,இந்திரா காந்தியின் ஆட்சியின்போது, எல்.ரீ.ரீ.ஈக்கும் மற்றும் ஏனைய தமிழ் போராளிக் குழுக்களுக்கும் இந்தியா பயிற்சி அளித்ததினாலேயே மோசமடைந்தது.அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஆயுதங்களும் மற்றும் நிதியுதவியும் இந்தியாவால் வழங்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக ராஜிவ் காந்தி விடயங்களை வித்தியாசமாகவும் மற்றும் புத்திசாலித்தனமாகவும் பார்த்தார், அதன் காரணமாக ஸ்ரீலங்காவுடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொண்டார். எல்.ரீ.ரீ.ஈயும் மற்றும் யாழ்ப்பாணத் தமிழர்களும் ஒத்துழைப்பு நல்கியிருந்தால்,இப்போது அவர்கள் நிலமை மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். அந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒருவகையான சுயாட்சி முறை இருந்தது ஒரு கூட்டாட்சி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியும் இருந்தது, சிங்களவர்களுக்கு சமமாக தமிழர்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதற்கான ஒரு முயற்சியும் அதில் இருந்தது. அவை அனைத்தும் வி.பிரபாகரனால் அழிக்கப்பட்டன,மற்றும் இங்குள்ள மக்களும் அவருக்கு ஆதரவு வழங்கினார்கள்.
அங்குள்ள தமிழர்கள் விடயத்தில் நாங்கள் கெடுதலையே செய்துள்ளோம். இப்போதும் கெடுதல் செய்வதை தொடர்ந்து வருகிறோம்.
  • ஐநா தீர்மானத்தின்போது இந்தியா ஸ்ரீலங்காவுக்கு எதிராக வாக்களித்தது, சீனாவை ஸ்ரீலங்காவுக்கு நெருக்கமாக கொண்டுவந்துள்ளாகக் கூறப்படுகிறதே. இந்தப் பிரதேசத்தில் எந்த வகையான தாக்கத்தை அது ஏற்படுத்தும்?
இப்போது சீனா தங்கள் ஒப்பந்தங்களை ஸ்ரீலங்காவில் விரைவாகச் செயற்படுத்த ஆரம்பிக்கும். அவர்கள் அதிக பணத்தை அங்கு செலவிட தயாராக உள்ளார்கள்,ஏனெனில் அவர்கள் தங்கள் செல்வாக்கின் வீச்சை பரவலாக்க விரும்புகிறார்கள்.
  • அப்படியான ஒரு நிலைக்கு இந்தியா பொறுப்பில்லையா?
மத்திய அரசாங்கத்தை பொறுத்தவரை,தமிழ்நாட்டில் இருந்து எழும் கடுமையான குரல்களோடு ஒத்துப் போகவேண்டும் என்கிற தார்மீக கடப்பாடு அதற்கு இல்லை,ஏனெனில் அது ஒரு சிறு பகுதியினரின் குரல்கள். அது இங்குள்ள முழு தமிழ் மக்களினதும் கருத்து அல்ல.
  • கூட்டணி அரசியல்தான் இந்த நிலமைக்கு பொறுப்பா?
நான் அப்படி நினைக்கவில்லை. மத்திய அரசு எப்போதுமே அப்படித்தான் நடந்து வருகிறது. ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தமிழ் நாட்டிலுள்ள சிறிய கட்சிகளிடம் எங்கே, மற்றும் எப்போது அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வதற்குரிய தார்மீகத் துணிவு அதற்கு குறைவாக உள்ளது. இந்தக் கட்சிகள் யாவும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டால் தோற்கடிக்கப் பட்டுவிடும்,அநேகமாக கட்டுப்பணத்தையே இழந்துவிடும். மத்திய அரசு அவர்கள் முன்னால் எழுந்து நிற்க முடியும்.
  • இந்தியாவுக்கு இப்போது அதன் அயலவர்களுடன் ஒரு நல்ல உறவு இல்லை, மற்றும் அதன் அயல் வட்டத்தில் ஒரு ஒற்றை நட்பு நாடு கூட இல்லை. நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏதாவது தவறு உள்ளதா?
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் என்பன இந்தியாவுடன் நட்பாக இல்லாமலிருப்பது இந்தியாவின் தவறு என்று நான் நினைக்கவில்லை. ஸ்ரீலங்காவை பொறுத்தமட்டில் இந்தியா தவறிழைத்துள்ளது. இந்தியா ஸ்ரீலங்காவுக்கு இன்னும் அதிக உதவிகளைச் செய்திருக்க வேண்டும்.
  • இப்போது யு.பி.ஏ அரசாங்கத்திலிருந்து திமுக வெளியேறிவிட்டது, உடனடியாக பொதுத்தேர்தல் வரும் என்று நீங்கள் கணிப்பிடுகிறீர்களா?
எண்ணிக்கைளை பொறுத்தமட்டில் அரசாங்கம் எப்படியாவது சமாளித்துவிடும் என்றுதான் நான் எண்ணுகிறேன். உடனடியாக ஒரு தேர்தல் வராது.
  • அடுத்த மக்களவை தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
நான் நினைக்கிறேன், காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரண்டுமே விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை கவர்ந்திழுக்க முயற்சிக்கும். அவர் காங்கிரசின் பக்கம் கூட போகலாம், அப்படி நடந்தால், இங்கு மும்முனை போட்டி ஏற்படும், அது ஜெயலலிதாவுக்கு உதவியாக இருக்கும். அங்கு ஒரு காங்கிரஸ் முன்னணி,ஒரு திமுக முன்னணி,மற்றும் ஒரு அஇஅதிமுக முன்னணி என்பன இருந்தால்,  அதில் அஇஅதிமுக வெற்றி பெறும்.அல்லது சில முகஸ்துதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு திமுக காங்கிரசின் பின்னால் செல்லவும் கூடும்.
  • ராகுல் காந்தி தனக்கு இந்த ஓட்டங்களில் ஆர்வமில்லை என்று சொல்லுகிற போதும் 2014ல் நடக்கவிருக்கும் போட்டி  மோடிக்கும் மற்றும் ராகுலுக்கும் எதிரானதாகத்தான் இருக்கும் என்று முழு ஊடகங்களுமே பேசுகின்றனவே. அது நடக்கும் என உங்களுக்கு தோன்றுகிறதா?
தான் ஓட்டத்தில் இல்லை என்று ராகுல் காந்தி சொன்னாலும் அவர் அதில் தீவிரமாக இருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். அவருடைய வார்த்தைகளை வெறும் முகஸ்துதி என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். அவர் ஒரு பலமற்ற அரசாங்கத்துக்கு தலமையேற்க விரும்பாமலிருக்கலாம். அவர் ஒரு உறுதியான காங்கிரஸ் அரசைத்தான் விரும்புகிறார், அது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். அதனால்தான் நான் ஓட்டத்தில் இல்லை என்று அவர் கூறி வருகிறார். எனினும் காங்கிரசுக்கு அது மிகவும் கடினமான ஒன்றாகத்தான் இருக்கப்போகிறது.
  • அப்போ அது மோடிக்கு எதிராக காங்கிரசிலிருந்து யாராவது ஒருவர் என்றிருக்குமா?
பா.ஜ.க மோடியை முன்னிறுத்தினால் அதற்கு நல்லது. அப்போது பிரச்சினை அவரைப் பற்றியதாகவே இருக்கும், மற்றும் அவர் அதில் வெற்றியும் பெறுவார்.
  • பா.ஜ.க மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால்,இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் அதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று அநேகர் சொல்கிறார்களே?
குஜராத்திலுள்ள முஸ்லிம்கள் மோடியுடன் இருக்கிறார்கள் என்றால், அது இந்தியா முழுவதிலும் நடக்கலாம். அதை ஒரு பக்கமாக ஒதுக்கி விடுங்கள், மோடியின் கீழ் பா.ஜ.க நன்றாக செயலபட முடியும்,ஏனெனில் குஜராத்தில் அவரது செயற்பாடு நன்றாக உள்ளது. நாட்டை வழி நடத்துவதற்கு ஒரு நேர்மையான அரசியல்வாதியை மக்கள் தேடுகிறார்கள், அதற்கு அவர் மிக நன்றாகப் பொருந்துகிறார்.
  • ஒரு மூன்றாவது அணி ஆட்சிக்கு வரும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
மூன்றாவது அணியில் யார் இருக்கிறார்கள்? முலாயம் சிங் யாதவை தவிர வேறு யார் இருக்கிறார்கள்? மாயவதி நிச்சயம் அவருடன் சேரமாட்டார். மம்மதா பானர்ஜி கம்யுனிஸ்ட்டுகளுடன் சேர மாட்டார். அது கடினமான ஒன்றாகத்தான் இருக்கப் போகிறது. மூன்றாவது அணி என்பது எப்போதுமே முரணான ஒன்றாகத்தான் இருக்கும்.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இரண்டும் சேர்ந்து 276 இடங்களை விட அதிகம் கைப்பற்றும். எனவே அத்தகைய ஒரு ஏற்பாடு காங்கிரசின் ஆதரவுடனோ அல்லது பா.ஜ.கவின் ஆதரவுடன்தான் ஏற்பட முடியும். அப்படி இல்லாமல் வேறு ஒரு முன்னணியும் ஏற்படப் போவதில்லை. இல்லாவிட்டால் அரசாங்கமே கிடையாது. பா.ஜ.க அல்லது காங்கிரஸ் அரசாங்கத்தில் பங்குபற்றி அல்லது வெளியிலிருந்து ஆதரவு வழங்கினால், எப்படி அதை மூன்றாவது அணி என்று அழைக்க முடியும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire