அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பெலியோமாவேகா வலியுறுத்து :
இலங்கைக்கெதிராக அமெரிக்காவின் அனுசரணையுடன் ஜெனீவா, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவைக்கு முன்மொழியவிருக்கும் கண்டனப் பிரேரணையை அமெரிக்கா வாபஸ்பெற வேண்டும் என்று அமெரிக்க வெளிவிவகார உப குழுவின் அங்கத்தவரான காங்கிரஸ் சபையின் உறுப்பினர் எப். எச். பெலியோ மாவேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைப்பதற்கு இந்த பிரேரணையை அமெரிக்கா பயன்படுத்தலாகாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தோனேஷியா போன்ற நாடுகளின் மனித உரிமைகள் துஷ்பிரயோகம் செய்வதை பொருட்படுத்தாமல் இலங்கை போன்ற ஒரு நாட்டின் மீது இவ்விதம் கடுமையாக நடந்துகொள்வது தவறு என்றும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் உறுப்பினர் மேலும் கண்டனம் தெரிவித்தார்.
‘ஆசியாவை மீண்டும் சமநிலைப்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளில் காங்கிரஸ் சபையின் உப குழுக் கூட்டத்தில் உரையாற்றிய எப். எச். பெலியோமாவேகா இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தம் நடைபெற்றதை அவதானிக்காமல் யுத்தத்தின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளை குறிவைத்து இந்தப் பிரேரணை அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்படவிருப்பது தவறு என்றும் கூறினார். புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அப்பாவி ஆண், பெண் மற்றும் பிள்ளைகளை இலங்கையில் படுகொலை செய்தனர். அவர்கள் 378 தற்கொலைக் குண்டுதாரிகளின் தாக்குதல்களையும் இலங்கையில் மேற்கொண்டனர். புலிகளைப் போல் உலகில் எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் கொடிய முறையில் மிலேச்சத்தனமாக நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் யுத்தம் முடிவடைந்த குறுகிய காலத்திற்குள் அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்திப் பணிகளை பாராட்டும் அவுஸ்திரேலியாவுடன் இணைந்து அமெரிக்காவும் பாராட்ட வேண்டும். அவுஸ்திரேலியாவின் பிரதி எதிர்கட்சித் தலைவி ஜூலி பிஷப்ஸ் தலைமை தாங்கிய பாராளுமன்றக் குழு, சமீபத்தில் இலங்கையை பாராட்டியதென்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்படும் இந்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட ஒரு அபிவிருத்திப் பணியையாவது குறிப்பிடத் தவறி இருப்பது நல்லதல்ல என்றும் உலகிலுள்ள மனித உரிமை என்ற உணர்வு பூர்வமான விடயத்தைக் கையாளும் போது அமெரிக்க அரசாங்கம் நடுநிலையாக நடந்துகொள்ள வில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் என்றும் அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர் எப்.எச். பெலியோ மாவேகா தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; இலங்கை ஒரு கேந்திர நிலையில் அமைந்துள்ள ஒரு நாடு. எனவே அமெரிக்கா இவ்விதம் நடந்துகொள்வதன் மூலம் அமெரிக்கா இலங்கையின் ஆதரவை இழந்து விட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறினார்.
கடந்த வாரம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து 2 மணித்தியாலம் கலந்துரையாடினார். அந்த கலந்துரையாடலில் வடபகுதி ஆளுனரும் தனது பங்களிப்பை வழங்கினார். 2009ம் ஆண்டிற்குப் பின்னர் யுத்தம் முடிவடைந்ததை அடுத்து இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகளை தாம் நேரில் சென்று பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்ததாகவும் தனது நாட்டிலேயே பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்துக்கட்டிய பெருமை இலங்கை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். செனற் சபை அங்கத்தவர் எப்.எச். பெலியோ மாவேகா தமது உரையில் மேலும் கூறியதாவது;
எல்.ரி.ரி.ஈ. இயக்கம் இலங்கை உட்பட 32 நாடுகளில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் உலகிலுள்ள கொடிய பயங்கரவாத இயக்கம் என்று எல்.ரி.ரி.ஈ. யை அழைக்கின்றன.
30 ஆண்டுகால யுத்தத்தில் வெற்றி வாகை சூடிய பின்னர் அரசாங்கம் நாட்டை மீள்கட்டியெழுப்பும் பணியின் மூலம் நிரந்தர சமாதானத்தையும் சகல பிரஜைகளுக்கும் சமத்துவ அந்தஸ்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை செய்து வருகின்றது.
இலங்கை மேற்கு வேஜினியாவைப் போன்று 6000 சதுர மைல்களைக் கொண்ட ஒரு நாடு. அங்கு 30 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஆயினும் இலங்கையில் 2 கோடி 10 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.
இலங்கையில் 27 அல்லது 29 வருடங்க ளுக்கு சிவில் யுத்தம் இடம்பெற்றிருக்கிறது. தமிழ் மக்கள் கூடுதலான சுயநிர்ணய உரிமையைக் கேட்கவில்லை. இலங்கையில் உள்ள சகல தமிழர்களும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத இயக்கத்தில் இடம்பெற வில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்காவிலும் சிவில் யுத்தம் இடம்பெற்றுள்ளது. இந்த 4 வருட யுத்தத்தில் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த 6 இலட்சம் உறுப்பினர்கள் மரணித்தார்கள். தென் பகுதியில் உள்ள மாநிலங்கள் இந்த யுத்தத்தின் போது சுயநிர்ணய உரிமையைக் கேட்கவில்லை. அவர்கள் எமது தாய் நாட்டில் இருந்து பிரிந்து செல்லவே விரும்பினார்கள்.
அதுபோன்று தமிழ்ப் புலிகளும் அரசாங்கத்துடனான யுத்தத்தில் பிரிந்துசெல்லவே முயற்சித்தார்கள். ஆனால் திடீரென்று நாம் இலங்கையை எதிர்க்க விரும்புகிறோம். அமெரிக்க அரசாங்கம் 10 ஆண்டு காலம் வியட்நாம் யுத்தத்தை நடத்தியது. அங்கு பல்லாயிரக்கணக்கான பெண்களும், பிள்ளைகளும் அப்பாவி சிவிலியன்களும் ஆபத்தில் தள்ளப்பட்டனர்.
லாவோஸிலும், கம்போடியாவிலும் 60 இலட்சம் குண்டுகளை பொழிந்தோம். ஆயினும், இந்த நாடுகள் எங்களுக்கு எதிராக யுத்தம் தொடரவில்லை. நாம் மனித உரிமை விடயத்தில் எந்தவொரு நாட்டையும் விட இலங்கை போன்ற சிறிய நாட்டின் மீது விரல் காட்டி குற்றம் சுமத்துகிறோம்.
இலங்கையை தண்டிப்பதற்கு முன்னர் அமெரிக்கா செய்யும் பிழைகளை நாம் திருத்திக்கொள்ள வேண்டும். இலங்கை ஜனாதிபதி, தற்போது வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். நல்லிணக்கப்பாட்டு செயற்பாட்டில் வட பகுதிக்கு கூடுதலான வளங்களையும் அவர் அனுப்பிய வண்ணம் இருக்கிறார்
Aucun commentaire:
Enregistrer un commentaire