jeudi 14 mars 2013

வீ. ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம்;பத்திரிகை அறிக்கை


கொழும்பில் காணாமற் போனோர்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்த போராட்டத்திற்கு கலந்து கொள்ளச் சென்ற வட பகுதியைச் சேர்ந்தவர்கள் வவுனியாவில் இடைமறிக்கப்பட்ட செயலானது பாரதூரமான மனித உரிமை மீறலாகும். இதை வன்மையாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி கண்டிக்கிறது. இதுபோன்ற பல சம்பவங்கள் முன்னரும் அரச அதிகாரிகளினால் திட்டமிட்டு செயற்பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அரச அதிகாரிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இத்தகைய பாரதூரமான குற்றச் செயல்களைப் புரியும் அரச அதிகாரிகள் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கு ஓர் முக்கிய காரணம் அரசின் தலையீடே!. அண்மையில் தெல்லிப்பழைத் துர்க்கை அம்மன் கோவிலடியில் நடந்த சம்பவத்தை பல்லாயிரக்கணக்கானோர் நேரடியாக கண்டிருந்தும் அதையே முழுப்பூசினிக்காயை சோற்றில் புதைப்பதுபோல மறைக்க முயன்ற அரசு சர்வதேசத்தின் முன் தலைகுனிந்து நிற்கிறது. இத்தகைய செயல்கள் இலங்கை அரசை காலப்போக்கில் செல்லாக்காசாக்கும் என்பதை அரசு உணர்ந்து செயற்படுவது நன்று. ஜெனிவாவில் இன்று நம்நாட்டில் நடப்பவற்றை வைத்து சர்வதேச சமூகம் எம்மை எவ்வாறு எடைபோட்டு வைத்துள்ளது என்பதை அரசு உணராமல் இருப்பது வருந்தத்தக்க செயலாகும். ஐனநாயகத்தைப் பூண்டோடு அழிக்கும் முயற்சியை அரசு உடன் நிறுத்த வேண்டும். சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அரசுக்குக் கொடுக்கும் நற்சாட்சிப் பத்திரம் எதுவிதத்திலும் பிரயோசனமற்றதாகும்.
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்

Aucun commentaire:

Enregistrer un commentaire