mercredi 13 mars 2013

ஜனாதிபதிக்கு வரவேற்பு; இருதரப்பு பேச்சுக்கள் ஆரம்பம் சக்கரவர்த்தியையும் சந்திக்க ஏற்பாடு


M.R in JapanM.R in Japan--1
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை டோக்கியோ ஹனேடா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.வெளிவிவகாரம் தொடர்பான ஜப்பான் பாராளுமன்றத்தின் துணை அமைச்சர் மினோரு கியுச்சி (Nobuhito Hobo) ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் வசந்த கரன்னாகொட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹித்தோ ஹொபோ (Nobuhito Hobo) ஆகியோர் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கைத் தூதுக் குழுவை வரவேற்றனர்.
இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (Prime Minister Shinzo Abe) அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இவ்விஜயத்தின் போது ஜப்பான் சக்கரவர்த்தியையும் மகாராணியையும் சந்திப்பார். ஜனாதிபதி அவர்களுக்கும் ஜனாதிபதியின் பாரியாருக்கும் சக்கரவர்த்தியின் மாளிகையில் பகல் போசன விருந்துபசாரமொன்றையும் அளிப்பார்கள்.
காலை விருந்துபசார சந்திப்பின்போது ஜப்பானின் வர்த்தக கைத்தொழில் துறைகளின் தலைவர்களை சந்திக்கவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கை வர்த்தக ஒன்றியத்தின் ஆரம்ப விழாவிலும் கலந்துகொள்வார்.ஜப்பான் அமைச்சர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி ஈடுபடுவார். அதனை அடுத்து ஜப்பான் பாராளுமன்ற சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வார். அத்துடன் தூதர் யசுஷி அகாஷியையும் சந்திப்பார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா, பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வை உறுப்பினருமான சஜின் த வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருடன் வர்த்தக பிரதிநிதிகள் சிலரும் ஜனாதிபதியின் ஜப்பானுக்கான இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துகொள்கின்றனர்.
ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பல் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்துகொண்டனர்

Aucun commentaire:

Enregistrer un commentaire