இலங்கைக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வரும் சக்திகள், இறுதியுத்த ‘உரிமை மீறல்கள்’ குறித்தும், ‘முள்ளிவாய்க்கால் படுகொலைகள்’ குறித்தும் திட்டமிட்ட முறையில் உலகளாவிய பிரச்சாரங்களைத் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றன. அவர்கள் விடுதலைப் புலிகள் மூலம் தென்னாசியப் பிராந்தியத்தில் உருவாக்குவதற்குப் போட்டிருந்த திட்டங்களை, இலங்கை அரசு 2009 மே மாதத்துடன் தவிடு பொடியாக்கிவிட்டதால் ஏற்பட்டுள்ள சினமும், வஞ்சம் தீர்ப்பும் இந்தப் பிரச்சாரங்களில் தெரிகிறது.
உண்மையில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், அதில் சம்பந்தப்பட்ட இருதரப்புகளான அரசும் புலிகளும் கணிசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதை எவரும் மறுக்க முடியாது. அரச படைகளின் உரிமை மீறல்கள் சில, அரசாங்கம் நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு மூலம் வெளி வந்திருக்கிறது. ஆனால் அதற்குத் தகுந்த பரிகாரம் இன்னமும் காணப்படவில்லை என்பது இன்னொரு விடயம்.
அதேநேரத்தில் புலிகள் இந்த யுத்தத்தில் செய்த மனித உரிமை மீறல்கள், அதுவும் தனது சொந்த மக்கள் மீதே நிகழ்த்திய கொடுமைகள், உரிய முறையில் வெளிக்கொணரப்படவில்லை. அதுமாத்திரமல்லாமல், அவை திட்டமிட்ட முறையில் பல்வேறு தரப்புகளாலும் மூடி மறைக்கப்பட்டும் வருகின்றன.
இறுதியுத்த நேரத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தருஸ்மன் என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். அக்குழு வழங்கிய இறுதி அறிக்கையில் அரச படைகள் மீது 6 குற்றச்சாட்டுகளையும், புலிகள் மீது 7 குற்றச்சாட்டுகளையும் சுமத்தியது. புலிகள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் ஒன்று சிறுவர்களைப் பலவந்தமாகத் தமது படையணிகளில் இணைத்துக் கொண்டார்கள் என்பதாகும்.
ஆனால் இப்பொழுது மேற்கு நாடுகளும் சரி, அவர்களுக்குக் காலம்காலமாக துதிபாடி வரும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் சரி, இறுதி யுத்தத்தில் இலங்கை அரசுக்கு சகல வழிகளிலும் உதவிய இந்தியாவும் (பிரதானமாக தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள்) சரி, தருஸ்மன் அறிக்கையில் கூறப்பட்டவற்றைக்கூட மறந்து, ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசை மட்டும் குற்றம்சாட்டி வருவது, எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை.
ஒரு யுத்தத்தில் ஈடுபடும் எவரும் நாசகாரமான அழிவு வேலைகளில் ஈடுபடுவது எல்லாக் காலங்களிலும், எல்லா நாடுகளிலும் நடந்து வந்திருக்கிறது என்பதற்காக, அது சகஜம்தான் எனக்கூறி, அதைத் தட்டிக்கழித்துவிட முடியாது. அந்த வகையில் இலங்கை அரச படைகள் இழைத்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவது அவசியமானது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.
ஆனால் அதேநேரத்தில் யுத்தத்தில் ஈடுபட்ட மறுதரப்பான புலிகளின் மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பானவர்களும் தண்டிக்கப்படுவது அவசியமானது. ஆனால் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி உரத்துக் கதைப்பவர்கள், புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள். ஏன் இந்த ஓரவஞ்சகமான நிலை? அதற்கான பின்னணிக் காரணம் என்ன? புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் உரிய முறையில் ஆவணப்படுத்தப்படாமல் இருப்பது ஒருபக்கம் இருக்க, புலிகளது அட்டூழியங்களை நேரில் கண்டவர்கள்கூட, அவற்றைப் பகிரங்கப்படுத்தினால் தம்மை “துரோகிகள்” என புலிசார்பு ஊடகங்கள் முத்திரை குத்தி விடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருப்பதையும்கூட காணமுடிகிறது.
ஆனால் உண்மையில் புலிகளின் அட்டூழியங்கள் குறித்து தெரிந்தவர்கள் அவற்றை அச்சம் ஏதுமின்றி வெளிப்படுத்த முன்வருவது மிகவும் அவசியமானது. அப்பொழுதுதான் இறுதி யுத்தத்தில் இரு தரப்பும் இழைத்த உரிமை மீறல்கள் பற்றிய விசாரணையை பக்கச் சார்பின்றி முழுமைப்படுத்த முடியும். அந்த வகையில், பல வழிகளிலும் புலிகளால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்த எனது குடும்பத்தின் பல்வேறு சோகக் கதைகளில் ஒரு விடயத்தை மட்டும், இந்த வாரத் தொடரில் குறிப்பிடலாம் என விரும்புகிறேன்.
இந்த சம்பவம் நடந்தது 1993ஆம் ஆண்டு. அவ்வாண்டு புலிகளின் ‘மாவீரர் தின’த்தையொட்டி, புலிகளது போராளிகள் புதைக்கப்பட்ட மயானங்களைத் துப்புரவு செய்வதற்காக வீட்டுக்கொருவரைத் தரும்படி, எனது சொந்தக் கிராமமான இயக்கச்சிப் பகுதியிலுள்ள முகாவில் கிராம மக்களைப் புலிகள் வேண்டியிருக்கிறார்கள். எமது கிராம மக்கள் பெரும்பாலும் பாமரத்தனமான, சொன்னதை வஞ்சகம் கரவு இல்லாமல் நம்புகின்ற செய்கின்ற மக்களாகையால், புலிகளின் வேண்டுகோளை விசுவாசமாக ஏற்று, பெரும்பாலும் தமது குடும்பங்களிலுள்ள பதின்ம வயதுச் சிறுவர்களையும், இளைஞர்களையும் அந்தப் பணிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அப்படிப் போனவர்களில் பல சிறுவர்கள் உரிய நேரத்தில் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர்கள் கலவரமடைந்து தமது பிள்ளைகளைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். உள்ளுர் புலிப் பொறுப்பாளர்களிடம் விசாரித்த பொழுது, “உங்கள் பிள்ளைகள் நிச்சயம் வந்துவிடுவார்கள். கவலைப்பட வேண்டாம்” எனச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நாட்கள் பலவாகியும் அவர்களது பிள்ளைகள் வீடு வந்து சேரவில்லை. ஆனால் அப்படிப்போன எமது கிராமத்து சிறுவர்களில் ஒரு சிலர் புலிகளின் பிடியிலிருந்து தப்பி ஓடி வந்துவிட்டனர். அவர்கள் சொன்ன தகவலின்படி, மயானம் துப்புரவாக்க எனச் சொல்லிப் புலிகள் கூட்டிச் சென்றவர்களை, அந்தப் பணி முடிந்ததும் பலவந்தமாகக் கட்டாய இராணுவப் பயிற்சிக்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தகவல் கிடைத்தது.
அந்தச் சிறுவர்களின் பெற்றோர்கள் கண்ணீரும் கம்பலையுமாக புலிகளின் பல காரியாலயங்களுக்கும், பொறுப்பாளர்களிடமும் நடையாய் நடந்தும் எந்தவிதமான பிரயோசனமும் ஏற்படவில்லை. தாம் அப்படி ஒருவரையும் பிடித்துச் செல்லவில்லை என்பதே புலிகளின் ஏகோபித்த பதிலாக இருந்தது. அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடமும் சென்று முறையிட்டார்கள். அவர்களும் தமது பங்கிற்கு புலிகளிடம் விசாரித்துவிட்டு, தம்மிடம் அப்படியான சிறுவர்கள் யாரும் இல்லையெனப் புலிகள் கூறியதாகத் தெரிவித்துவிட்டனர்.
புலிகளால் இவ்வாறு பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்ட எமது கிராமத்து சிறுவர்களில் எனது மனைவியின் உடன் பிறந்த அக்காவின் மகனும் (எனது பெறாமகன்) ஒருவன். புலிகள் அவனைப் பிடித்துச் செல்லும் போது அவனுக்கு 16 வயது இருக்கும். கல்விப் பொதுத் தராதரப் (சாதாரண) பரீட்சை எடுத்து முடித்திருந்தான். படிப்பில் ஓரளவு கெட்டிக்காரன். அவனை ‘தனேசா’ என வீட்டில் கூப்பிடுவார்கள். அவன் தன்னுடன் சேர்த்து 7 சகோதரர்களுடன் கூடப் பிறந்தவன். இவன் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை. தகப்பன் சில வருடங்களுக்கு முன்னர் இருதய நோய் காரணமாக இறந்துவிட்டார். தகப்பன் இன்மையாலும், தொடர் யுத்த சூழ்நிலையாலும் சீவியம் நடத்துவதற்கே அக்குடும்பம் மிகவும் சிரமப்பட்டதால், மூத்த மகன் தன் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, விவசாயம் செய்தும், கூலி வேலை செய்தும் வாழ வேண்டிய நிலையில் அந்தக் குடும்பம் இருந்தது.
தனேசா என்ற அந்தச் சிறுவனை இழந்ததால், அந்தக் குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியது. அவர்கள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அவனை ஒருமுறையாவது கண்களால் கூடக் காண முடியவில்லை. ஆனாலும் அவனது குடும்பத்தினர் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தனர். புலிகளின் நடவடிக்கைகளை அந்த நிறுவனங்களும் நன்கு அறியும் என்றாலும், அவர்களால் ஒரு கட்டத்துக்கு மேல் எதுவும் செய்ய முடியாது. அதுவும் ஏழை எளிய குடும்பத்துப் பிள்ளைகளைப் புலிகள் பிடித்துச் சென்றார்கள் என்றால், அவர்கள்பாடு நாதியற்ற நிலைதான்.
இந்த நிலையில் சில வருடங்கள் ஓடிச் சென்றுவிட்டன. இந்த நிலைமையில் திடீரென்று ஒருநாள் செஞ்சிலுவைச் சங்கம் தனேசா பற்றிய ஒரு செய்தியை அவனது குடும்பத்தினருக்கக் கொண்டு வந்தது. அந்தச் செய்தியின்படி, தனேசா புலிகளுடன்தான் இருப்பதாகவும், அவனுக்கு இப்பொழுது 18 வயதுக்கு மேலாகிவிட்டதாலும், அவன் தனது சொந்த விருப்பத்தின் பேரில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து செயல்படுவதாலும், அவனது விருப்பத்தை மீறி அவனை வீட்டுக்குத் திரும்பவும் அனுப்பி வைக்க முடியாது என்பதுதான் அந்தச் செய்தி. இது எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!
ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக தமது படையணிக்குப் பிடித்துச் சென்ற புலிகள், அவனை சில வருடங்கள் மறைத்து வைத்திருந்து, அவனுக்கு மூளைக் சலவையும், இராணுவப் பயிற்சியும் வழங்கி, அவன் இயக்கங்களில் சேரக்கூடிய வயதை அடைந்த பின்னர், மக்களுக்கு பக்கம் சாராமலும், ஒளிவு மறைவின்றியும் சேவை செய்ய வேண்டிய ஒரு நிறுவனத்தின் மூலம், இப்படியான ஒரு மோசடிக் கதையைச் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்.
பின்னர் 2000ஆம் ஆண்டில் புலிகள் எமது கிராமம் உட்பட, இயக்கச்சிப் பகுதியிலிருந்த கிராம மக்களை (ஆனையிறவு இராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கா) அங்கிருந்து பலவந்தமாக வன்னிக்கு விரட்டினர். அதிலும் ஒரு சிலர் தப்பி இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணப் பகுதிகளுக்குச் சென்றாலும், பெரும்பான்மையோர் புலிகளின் பிடியில் அகப்பட்டு கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு விசுவமடு, உடையார்கட்டு போன்ற பகுதிகளுக்குச் சென்றனர். அவர்களில் எனது இளைய (அக்கா) சகோதரியுடன் வாழ்ந்து வந்த 95 வயது நிரம்பிய எனது தகப்பனாரும் ஒருவர். சில வருடங்களாக எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்த அவரை, பெரும் சிரம்களுக்கு மத்தியில், பல நாட்கள் முயற்சி எடுத்து விசுவமடுவுக்குக் கொண்டுபோய் சேர்த்தனர்.
எனது மனைவியின் சகோதரியின் குடும்பமும் விசுவமடுவுக்கே பென்றது. அங்கு அவர்கள் சென்று வாழத் தொடங்கிய பின்னரே, புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட அவர்களது மகன் தனேசாவை பல வருடங்களின் பின் முதன்முறையாக வீடு சென்று தாயையும், சகோதரர்களையும் பார்ப்பதற்குப் புலிகள் அனுமதி வழங்கினர்.
இதன்பின்னர் அந்தக் குடும்பமும், எனது சகோதர, சகோதரிகளின் குடும்பங்களும், எமது கிராமத்தவர்களின் ஏனைய பல குடும்பங்களும் பல தடவைகள் இடம் பெயர்ந்து, கடைசியாக இறுதி யுத்தம் நடந்த 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் அகப்பட்டுக் கொண்டனர்.
இந்த இறுதி யுத்த நேரத்தில் முள்ளிவாய்க்காலில் எமது கிராம மக்களில் சிலர் எறிகணை வீச்சிலும், துப்பாக்கிச் சூடுகள் மத்தியில் சிக்கியும் மரணமடைந்தனர். எனது மூத்த சகோதரனின் மனைவி (எனது மைத்துனி) எறிகணை வீச்சில் மரணமடைந்தார். நோயாளியான எனது இளைய சகோதரியின் கணவர் மருத்துவ வசதிகள் இன்றி மரணித்தார். எனது மனைவியின் தாய் மாமனும், அவரது மனைவியும் (அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை) புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பலருடன் சேர்ந்து தப்பியோடி வருகையில் புலிகள் பின்னாலிருந்து சுட்டதில் மாமனார் இறந்துவிட்டார். மாமியாரை இராணுவம் காப்பாற்றி வவுனியாவுக்குக் கொண்டுபோய் சேர்த்தது.
இடைக்காட்டைச் சேர்ந்த கந்தசாமி என்ற எனது ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரும், அவரது மனைவியும், தமது மகள் பேரப்பிள்ளையுடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி ஓடி வந்தனர். மகள் தனது பிள்ளையுடன் ஒருவாறு தப்பி வந்துவிட்டார். ஆனால் எனது ஒன்றுவிட்ட சதோதரரும் மனைவியும் இன்றுவரை வந்து சேரவில்லை. இப்படி எத்தனையோ சோகக் கதைகள்...
முள்ளிவாய்க்காலில் மிகக் குறுகிய ஒரு பகுதிக்குள் மக்களைப் புலிகள் அடக்கி வைத்திருந்ததால், அங்கு எனது மனைவியின் குடும்பம் அடிக்கடி தனேசாவைப் பார்க்க்கூடியதாக இருந்தது. அதேவேளையில் அவன் புலிகளால் பிடித்துச் செல்லபப்பட்ட பின்பு, 16 வருடங்களாக நாம் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்திலும் சரி, பின்னர் கொழும்பில் வாழ்ந்த காலத்திலும் சரி, வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னரும் சரி, ஒருமுறை தன்னும் எம்முடன் தொடர்பு கொண்டு கதைத்தது கிடையாது.
நாம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் தனேசாவின் இரண்டாவது அண்ணனை அங்கு அழைத்து எமது பராமரிப்பில் வைத்திருந்தோம். நாம் கொழும்புக்கு இடம் பெயர்ந்த போது அங்கும் அவனை அழைத்து வந்து எம்முடன் வைத்திருந்தோம். எமது குடும்பம் வெளிநாட்டுக்கு வந்த பின்னர், அவன் வெளிநாட்டுக்கு வரும்வரை சிறிது காலம் கொழும்பில் தங்கியிருந்தான். அவனுடனும் தம்பியாரான தனேசா ஒருபோதும் கதைத்ததில்லை.
இந்த நிலையில் இறுதி யுத்தம் நடந்த நாட்களில் திடீரென ஒருநாள், தனேசா கொழும்பிலிருந்த தனது அண்ணனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்துள்ளான். அத்துடன் தனது அண்ணனிடம் வெளிநாட்டில் உள்ள எமது தொலைபேசி இலக்கத்தைப் பெற்று, அவனது சிறிய தாயாரான எனது மனைவியுடனும் கதைத்தான்.
எனது மனைவி அவனுடன் கதைக்கும் போது, அவனது தாயார் சகோதரர்களை எப்படியும் அந்த யுத்தப் பிரதேசத்திலிருந்து காப்பாற்றி அனுப்பும்படியும், முடியுமானால் அவனையும் அங்கிருந்து தப்பி ஓடும்படியும் கூறியிருக்கிறார். அவன் அதற்கு எவ்விதமான பதிலும் கூறவில்லை. அதற்கான காரணம் என்னவென்பது எனக்குத் தெரியும். தனோசா தானாகத் திடீரென எமக்குத் தொலைபேசி எடுத்திருக்க முடியாது. அதுவும் அந்த இறுதி யுத்த நேரத்தில முள்ளிவாய்க்கால் யுத்த முனையிலிருந்து தொலைபேசி எடுப்பதானால் புலிகளால் மட்டுமே முடியும்.
எனவே புலிகளே ஏதோவொரு நோக்கத்துக்காக அவனுக்கு அந்தத் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும் என நான் ஊகித்தேன். கொழும்பிலிருந்த அவனது அண்ணனுடனும், வெளிநாட்டிலிருந்த எம்முடனும் கதைப்பதற்கு என்றுமில்லாதவாறு, (அதுவும் மிகவும் நெருக்கடியான இறுதி யுத்த காலகட்டத்தில்) தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த புலிகள், எங்களுடனான அவனது உரையாடலை நிச்சயமாக செவிமடுத்துக் கொண்டிருந்திருப்பார்கள். அதனால்தான் எனது மனைவியின் வேண்டுகோளுக்கு அவனால் பதில் அளிக்க முடியவில்லை. எனவே எனது மனைவியின் வேண்டுகோளை ஏற்று தனேசா புலிகளைவிட்டுத் தப்புவதற்கு விரும்பினாலும், அது நடக்க முடியாத காரியம்.
அத்துடன் அடுத்த சில நாட்களில் அவனை புலிகள் பலியிடுவதற்குத் திட்மிட்டிருக்கையில் செய்த ஏற்பாடே இந்த உரையாடல். பொதுவாக பல நாடுகளில் தூக்குத் தண்டனைக் கைதி ஒருவரைத் தூக்கிலிடுவதற்கு முன்னர் அவரது இறுதி விருப்பம் என்ன எனக் கேட்கும் ஒரு வழமை உள்ளது. அதுபோலத்தான் இதையும் புலிகள் எமது பெறாமகன் தனேசாவின் விடயத்திலும் நடாத்தி முடித்திருக்கிறார்கள்.
அவனுக்கு புலிகளால் இழைக்கப்படவிருந்த விபரீதத்தை அறியாத நாம், அவன் பல வருடங்களின் பின்னர் கொழும்பிலிருந்த அவனது அண்ணனுடனும், எம்முடனும் கதைத்ததையிட்டு நாம் சந்தோசத்தில் இருந்தோம்.
ஆனால் அந்தச் சந்தோசம் நீடிக்கவில்லை. அவன் கதைத்த சில வாரங்களில் திடீரென ஒருநாள் கொழும்பிலிருந்த அவனது அண்ணனுடன் முள்ளிவாய்க்காலில் இருந்து புலிகளின் சார்பாக ஒருவன் தொடர்பு கொண்டு, தனேசா இலங்கைக் கடற்படைக்கு எதிராக கடற்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை ஒன்றின்போது ‘வீர மரணம்’ அடைந்துவிட்டதாகச் சர்வ சாதாரணமாகச் சொன்னதுடன், இந்தத் தகவலை வெளிநாட்டில் இருக்கும் அவனது சிறிய தாயாரின் குடும்பத்துக்கும் (எமக்கும்) அறிவிக்கும்படி சொல்லியிருக்கிறான். தனேசாவின் கதையை புலிகள் சர்வ சாதாரணமாக இவ்வாறு முடித்து வைத்துவிட்டனர்.
அவனை வெற்றிபெற முடியாத ஒரு முயற்சியில் பலியாக்கப் போகிறோம் என்று தெரிந்து கொண்டே, அவனது சகோதரனுடனும், எம்முடனும் திட்டமிட்டு கதைக்க வைத்துவிட்டு, இரண்டொரு கிழமைகளில் அவனது கதையை முடித்திருக்கிறார்கள். இதை ஒரு தற்செயலான சம்பவம் என யாராவது சொல்ல முடியுமா? இப்படி எத்தனை போராளிகளின் உயிர்களைப் பலியிட்டிருப்பார்கள்.
இந்தச் சிறுவர்களை வாழ வேண்டிய வயதில் வாழ விடாது பறிக்கும் உரிமையை இந்த அயோக்கியர்களுக்கு வழங்கியது யார்? எத்தனை எத்தனை இந்த முகம் தெரியாத சிறுவர்கள் யுத்தத்தில் பலியாக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரனின் மரணத்தை உலகம் முழுவதுமுள்ள அரசியல் வியாபாரிகள் சந்தைப் பொருளாக்கி இலாபம் சம்பாதிக்கிறார்கள். யாரோ ஒரு இலங்கை இராணுவ வீரன் பாலச்சந்திரனின் புகைப்படங்களை எடுத்துச் சர்வதேச மாபியா வியாபாரிகளுக்கு விற்றுப் பெரும்தொகை பணம் சம்பாதித்ததால், பாலச்சந்திரன் விளம்பரப் பொருளாகி இருக்கிறான். ஆனால் புலிகளால் போரில் பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஏழைச் சிறுவர்களின் படங்களை யாரும் எடுப்பதற்கு புலிகள் அனுமதிக்காததால், அவர்கள் முகமற்ற பிண்டங்களாய், நாதியற்ற மனிதர்களாகய் இந்த மண்ணில் புதையுண்டுபோய் கிடக்கிறார்கள்.
இப்படித் தமது போராளிகளையே புலிகள் தெரிந்து கொண்டு பலியிட்டது மட்டுமல்ல, போரில் காயமுற்றிருந்த தமது போராளிகளைக்கூட ஈவிரக்கமற்று, பஸ்களில்; ஏற்றிச் சென்று அவற்றிற்கு குண்டு வைத்து, அவர்கள் அத்தனை பேரையும் கொன்றொழித்திருக்கிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பியோடி இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடும், எறிகணை வீச்சும் நடாத்திப் பலரைக் கொலை செய்திருக்கிறார்கள்.
இவையெல்லாம் போர்க் குற்றங்கள் அல்லாமல், வெறும் சினிமாக் காட்சிகளா?
இன்று இலங்கை அரசாங்கம் செய்த இறுதிப் போர்க் குற்றங்கள் சம்பந்தமாக கூக்குரல் இடும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், மேற்கு நாடுகளும், தமிழ்நாட்டு அரசியல் பிழைப்புவாதிகளும், புலிகளின் இந்த மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் பற்றி என்ன கூறப் போகிறார்கள்? எம்மவனுக்கு ஒரு நீதி, மற்றவனுக்கு இன்னொரு நீதி என விட்டுவிடப் போகிறார்களா?
‘சர்வதேச சமூகம்’ என்று சொல்லிக் கொண்டு, இன்று உலகின் முன்னால் வேசம் போடுபவர்கள் இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இறுத்தே ஆக வேண்டும். அதுவரை தனேசா போன்ற அப்பாவிப் போராளிகளினதும், புலிகளால் இந்த போர் முழுவதிலும் - குறிப்பாக இறுதி யுத்த நேரத்தில் கொல்லப்பட்டவர்களினதும் - ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக!
Aucun commentaire:
Enregistrer un commentaire