lundi 11 mars 2013

இனப் பிரச்சினையின் தீர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.;சிவா சுப்பிரமணியம்



sivasubiramaniyamதமிழ்த் தலைவர்களின் கடுங்கோட்பாட்டுச் செயற்பாடுகளும் பிரசாரமும் சிங்கள அரசியல் வழிச் சமூகத்தில் ஆழமான சந்தேகங்களையும் அதிருப்தியையும் தோற்றுவித்திருப்பதால் சர்வஜன வாக்கெடுப்பில் சிங்கள மக்களின் ஆதரவு சந்தேகத்துக்கு இடமானதாகவே உள்ளது. மேலும், இலங்கைக்கு எதிரானதென உள்ளூரில் பரப்புரை செய்யப்படும் செயற்பாடுகளை மேற்கொண்டதால் சர்வதேச சமூகத்தின் மீது பெரும்பாலான சிங்கள மக்கள் வெறுப்புற்றவர்களாக இருக்கும் நிலையில் சர்வதேச சமூகத்தின் பரிந்துரைகளுக்கு அம்மக்களின் ஆதரவு கிடைப்பது சந்தேகமானதே.
சமகாலத் தமிழ் அரசியல் அரங்கில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சி பின்தள்ளப்பட்டு இப்பிரச்சினை தீர்க்கப்படாததன் விளைவாகத் தோன்றிய ஏனைய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்ற போதிலும் இனப் பிரச்சினையின் தீர்வு தான் தமிழ் மக்களுக்கு நீடித்த நிம்மதியைத் தர வல்லது. மற்றைய பிரச்சினைகளின் தீர்வுக்கான முயற்சி இனப் பிரச்சினையின் தீர்வு முயற்சியுடன்  இணைந்தே முன்னெடுக்கப்பட வேண்டும். எனவே, தமிழ்த் தலைமையின் மூலோபாயம் எக்காரணங் கொண்டும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியைப் பின்தள்ளுவதாக அமையக் கூடாது.

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் தாங்களே என்று உரிமை கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலோபாயம் இனப் பிரச்சினையின் தீர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் போன்றவற்றை மாத்திரம் முன்னிலைப்படுத்தும் ஜெனீவாத் தீர்மானம் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவரும்  என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்களிடம் தோற்றுவிக்கும் முயற்சியும் ஆட்சி மாற்றத்தையே  இலக்காகக் கொண்டதும் இனப்பிரச்சினையின் தீர்வுக்குத் தெளிவான தீர்வுத் திட்டமொன்றை  வெளிப்படுத்தாததுமான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான "எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' அமைப்பில் இணைந்து செயற்படுவதும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தைக் கூட்டமைப்பு இதுவரை தயாரித்து  வெளியிடாததும் இனப் பிரச்சினையின் தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் செயற்பாடுகளல்ல.

இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக இரண்டு அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உடனடியாகச்  சாத்தியமான தீர்வை, அது குறைபாடுகள் உடையதெனினும், ஏற்றுக்கொண்டு முழுமையான அரசியல் தீர்வு அடைவதற்குத் தொடர்ந்து முயற்சிப்பது ஒரு அணுகுமுறை. உடனடியாக  சாத்தியமான தீர்வு குறைபாடுகள் உடையதென்பதால் அதை நிராகரித்துச் சர்வதேச சமூகத்துக்கூடாக அரசியல் தீர்வை அடைய முயற்சிப்பது மற்றைய அணுகுமுறை. உடனடியாகச் சாத்தியமான தீர்வாக இன்று பதின்மூன்றாவது திருத்தமே உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பின்பற்றப்படும் இரண்டாவது அணுகுமுறை பற்றி முதலில் பார்ப்போம்.

சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்களிடம்  நீண்ட காலமாக வளர்த்துவரும் தமிழ்த் தலைமை சர்வதேச சமூகத்திடமிருந்து எதை எதிர்பார்க்கின்றது என்பதை இதுவரை கூறவில்லை. தனிநாடு பெற்றுத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றதா? அல்லது ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றதா? ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வையே நாடி நிற்பதாகக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் அடிக்கடி கூறுகின்ற போதிலும், இக் கூற்றின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் இரண்டு காரணிகள் உள்ளன.

எத்தகைய தீர்வைச் சர்வதேச சமூகம் பெற்றுத்தர வேண்டும் என்பதை ஒரு தீர்வுத் திட்டத்தின் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்தாதது ஒரு காரணம். சர்வதேச சமூகத்தின் தீர்வு இதோ வருகின்றது என்று நான்கு வருடங்களாகக் கூறிவருகின்ற போதிலும் இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாகச் சர்வதேச சமூகம் இதுவரை என்ன செய்திருக்கின்றது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த முயற்சிக்காதது மற்றைய காரணம். தமிழ் மக்களை நித்திய நம்பிக்கையில் வைத்திருப்பதற்காகவே சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று கூட்டமைப்பு கூறிவருகின்றதா என்ற கேள்வியும் சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தருமா என்று தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய தேவையும் இக் காரணங்களிலிருந்து எழுகின்றன.

சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தருமா என்ற சிந்தனையில் பின்வரும் நான்கு கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.  இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் சர்வதேச சமூகம் அக்கறை கொண்டுள்ளதா? அக்கறை உண்டென்றால் அதன் செயற்பாட்டு எல்லை எது? சர்வதேச சமூகத்தின் அழுத்தத்துக்கு இலங்கை அரசாங்கம் பணிந்து போகுமா? சர்வதேச சமூகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கேற்ற சூழ்நிலை இலங்கையில் உண்டா?
இனப் பிரச்சினையின் தீர்வில் சர்வதேச சமூகம் கொண்டுள்ள அக்கறை ஜெனீவாத் தீர்மானங்களின் மூலம் வெளிப்படுகின்றது என்ற நம்பிக்கையைத் தமிழ்த் தலைவர்கள் மக்களிடம் தோற்றுவித்திருக்கின்றார்கள். இதில் தமிழ் ஊடகங்களின் பங்கும் காத்திரமானது.

சென்ற வருடம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் இந்த வருடம் அமெரிக்கா முன்மொழியவுள்ள பிரேரணையும் இனப்பிரச்சினையின் அரசியல் தீர்வுடன் சம்பந்தப்படவில்லை. மனித உரிமை மீறல், போர்க் குற்றங்கள் ஆகியவற்றிலும் நல்லிணக்க  ஆணைக்குழுவின் பிரதான சிபார்சுகளிலுமே அவை அக்கறை செலுத்து கின்றன. இந்த அக்கறை இலங்கைக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பதிலும் பார்க்க மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆதிபத்திய நலன்களுக்குச் சாதகமான முறையில் இலங்கை அரசாங்கத்தை வளைத்தெடுப்பதற்கே கூடுதலான முக்கியத்துவம் அளிக்கின்றது.

ஜெனீவாத்  தீர்மானத்துடன் சம்பந்தப்பட்ட அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக அவற்றின் அக்கறையை இதுவரை செயற்பாட்டு ரீதியாக வெளிப்படுத்தவில்லை. பிரச்சினைக்குத் தாமதமின்றித் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறுவதை ஆழமான அக்கறையாகக் கருத முடியாது. அரசியல் தீர்வு தொடர்பாகத் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு அந்நாடுகள் எங்கள் இனப் பிரச்சினையில் ஈடுபாடு கொள்ளவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினையில் சர்வதேச சமூகம் காலப்போக்கில் அக்கறை கொள்ளும் நிலை உருவாகாது எனக் கூற முடியாது என்ற வாதத்தை நிராகரிப்பதற்கில்லை. அச் சந்தர்ப்பத்தில் சர்வதேச சமூகத்தின் செயற்பாட்டு எல்லை எதுவாக இருக்கும் என்பது பற்றிய புரிகை முக்கியமானது.

அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் சொந்த நலனின் அடிப்டையிலேயே வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கின்றது. தமிழ் மக்களின் நலனுக்காக இலங்கையை இழப்பதற்குச் சர்வதேச சமூகம் ஒரு போதும்  விரும்பாது. எனவே, இலங்கை அரசாங்கத்தைப் பகைக்காமலிருக்கும் வகையிலேயே சர்வதேச சமூகத்தின் இனப்பிரச்சினை தொடர்பான அணுகுமுறை இருக்கும். மறுபுறத்தில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச சமூகத்தின் அணுகுமுறையில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

சர்வதேச சமூகம் எனப் பொதுவாகக் கூறுகின்ற போதிலும் இலங்கை விவகாரம் போன்ற  விடயங்களில்  அதன் செல்வழியைத் தீர்மானிக்கும் பிரதான நாடாக அமெரிக்கா உள்ளது. இலங்கையின் இனப் பிரச்சினை  பற்றி அமெரிக்கா எடுக்கும் நிலைப்பாடு தான் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாக இருக்கும். இன்றைய நிலையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவானதும் ஒன்றையொன்று விட்டுக்கொடுக்காததுமாகும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரையில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முரணாகவோ அதை மீறிச் செல்வதாகவோ அமெரிக்காவின்  முடிவு இருக்காது. அதுவே சர்வதேச சமூகத்தின் செயற்பாட்டு எல்லை எனலாம்.

இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் நலன் இரண்டு விடயங்களினால் தீர்மானிக்கப்படுகின்றது. இனப்பிரச்சினைக்கு காணப்படும் தீர்வு இந்திய மாநிலங்கள் கூடுதலான  அதிகாரங்களைக் கோரிக் கிளர்ச்சி செய்யும் நிலையையோ வட, கிழக்கு மாநிலங்களின் பிரிவினைக்  கோரிக்கை வலுவடையும் நிலையையோ தோற்றுவிக்காதிருக்க வேண்டும் என்பது ஒரு விடயம். இந்திய உற்பத்திகளுக்கான இலங்கைச் சந்தை வாய்ப்பு பங்கமடையாதிருக்க வேண்டும் என்பது மற்றைய விடயம். இன்றைய நிலையில் இந்தியா முக்கியமானதாகக் கருதும்  இந்தத் தேசிய நலனின் அடிப்படையிலேயே இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான அதன் அணுகுமுறையைத் தீர்மானிக்கின்றது. இதனாலேயே பதின் மூன்று பிளஸ் என்பதற்கு  அப்பால் செல்லத் தயங்குகின்றது.

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்துக்கு இலங்கை அரசாங்கம் பணிந்து போகுமா என்பது ஒரு பிரதானமான கேள்வி. அண்மைக் காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்துக்கு இலங்கை பணியப் போவதில்லை என்பதற்கான உதாரணங்களாக இருக்கின்றன. சிராணி பண்டாரநாயக்காவின் பதவி நீக்கம் பிந்திய உதாரணம். தனக்குப் பல நாடுகளில் எதிர்ப்பு உள்ள போதிலும் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவில் கூறியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

சர்வதேச சமூகத்தின் எதிர்நிலை முடிவுகள் ஒரு நாட்டில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிலையிலேயே  அந்த நாடு சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்குப் பணிந்து போகும். அவ்வாறான நிலையில் இலங்கை இல்லை. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட இரண்டு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுகின்றன. மேற்கத்திய அணியைச் சாராத நாடுகளுடன் இலங்கை பொருளாதார உறவைக் கூடுதலாக வளர்த்து வருகின்றது.

இந்நாடுகள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு நிலையை மேற்கொள்வது அரசாங்கத்தின் வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதாகவே இருக்கும்.

மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்துக்குப் பணியும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை. எனினும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இலங்கை அரசாங்கம் நெகிழ்வு நிலையை மேற்கொள்வதாக ஒரு வாதத்துக்காக வைத்துக்கொண்டாலும் அரசியல் தீர்வுக்கான சர்வதேச சமூகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குச் சாதகமான சூழ்நிலை இப்போது இலங்கையில் இருக்கின்றதெனக் கூற முடியாது.

சர்வதேச சமூகத்தின் பரிந்துரைகளை சட்டமாகப் பாராளுமன்றத்தில் நிறைவேறியதும் சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீகாரம் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வர முடியும். சர்வஜன வாக்கெடுப்பில் அங்கீகாரம் பெறுவதற்குச் சிங்கள மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது.

தமிழ்த் தலைவர்களின் கடுங்கோட்பாட்டுச் செயற்பாடுகளும் பிரசாரமும் சிங்கள அரசியல் வழிச் சமூகத்தில் ஆழமான சந்தேகங்களையும் அதிருப்தியையும் தோற்றுவித்திருப்பதால் சர்வஜன வாக்கெடுப்பில் சிங்கள மக்களின் ஆதரவு சந்தேகத்துக்கு இடமானதாகவே உள்ளது. மேலும், இலங்கைக்கு எதிரானதென உள்ளூரில் பரப்புரை செய்யப்படும் செயற்பாடுகளை மேற்கொண்டதால் சர்வதேச சமூகத்தின் மீது பெரும்பாலான சிங்கள மக்கள் வெறுப்புற்றவர்களாக இருக்கும் நிலையில் சர்வதேச சமூகத்தின் பரிந்துரைகளுக்கு அம்மக்களின் ஆதரவு கிடைப்பது சந்தேகமானதே.

சர்வதேச சமூகத்தின் மூலம் தீர்வைப் பெறுவதில் தமிழ்த் தலைமைக்கு உண்மையான நம்பிக்கை இருந்திருந்தால், மேற்கூறிய நிலைமையைக் கவனத்தில் எடுத்துச் சிங்கள மக்களின் ஆதரவை வென்றெடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். கூட்டமைப்புத் தலைவர்கள் அதைச் செய்யவில்லை.

மேலே கூறியவற்றின்  அடிப்படையில் பார்க்கையில் சர்வதேச சமூகத்தின் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெறலாம் என்ற நம்பிக்கை வீணானது என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. இந்த நம்பிக்கை இனப் பிரச்சினையின் தீர்வு நிரந்தரமாகப்  பின்தள்ளிப் போவதற்கே வழிவகுக்கும். சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிப்பது தமிழ் மக்கள் உள்ளதையும் கோட்டை விட்டு அரசியல் தீர்வும் இல்லாமல் கையேந்தி நிற்கும் நிலையைத் தோற்றுவித்துவிடும்.

பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் படிப்படியாக மேலதிக அதிகாரங்களைப்பெற்று முழுமையான அரசியல் தீர்வை அடையும் அணுகுமுறையே நடைமுறைச் சாத்தியமானது. இது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குக் கட்டங்கட்டமாகத் தீர்வு காண்பதற்கும் முழுமையான அரசியல் தீர்வை அடைவதற்கும் வழிவகுக்கும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire