lundi 4 mars 2013

தனித்தனி மனிதர்களாக சுயநலப் பித்துப் பிடித்தவர்களாகவே அலைந்து கொண்டிருக்கிறோம்.நமக்குள் மானுடம் உருப்பெறவில்லை.

இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் புலம்பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை இன்று பத்து லட்சத்தைத் தாண்டிவிட்டதாகச் சொல்கிறார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மனிதவளம் பற்றாக்குறை என்பதால் வந்தாரை வரவேற்கும் பண்பை அந்நாடுகளில் சட்டமாகவும் இயற்றி வைத்திருக்கிறார்கள். இதுதவிர, பல்லின மக்களின் கூட்டுவாழ்க்கை சார்ந்த மானுட இலட்சியமும் இந்த வரவேற்புக்குக் காரணம். வெவ்வேறு மக்கள் குழுக்களின் கலாசாரத்தை, மனிதப் பழக்கங்களை, வாழ்க்கை முறைகளை ஒருங்கிணைத்த வானவில் அழகை உருவாக்குவது மனித மேன்மையாகப் பார்க்கப்படுகிறது.

வேறு வேறு மொழிகளைப் பேசுபவர்கள், வித்தியாசமான கலாசாரங்களைக் கொண்டவர்கள், மாறுபட்ட வாழ்வுக் கோலங்களைக் கொண்டவர்கள் ஒரே நாட்டுக்குள் சேர்ந்தொன்றாய் வாழமுடிந்தால் அதுவே மனித நாகரிகத்தின் உன்னதங்களை உணர்த்துவதாகும் என்பது இன்றைய பூவுலகின் நம்பிக்கை. எனவே புலம்பெயர்ந்து செல்பவர்கள் வரவேற்கப்பட்டார்கள். சொந்த நாட்டில் நன்கு வாழ முடியாது என நினைத்தவர்களுக்கு இந்த மேற்கு நாடுகள் சொர்க்கமாக தோன்றியது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் உருவாக்கிய நாடு அமெரிக்கா. எனவே அந்த நாடு வேற்று நாட்டினர் வருகையைத் தடுக்கவில்லை. வருடா வருடம் கிறீன் கார்ட்களை வழங்கியது.

பிரச்சினைக்குப் பின்னர் நம்மில் பெரும்பான்மையோரைத் தாங்கிக் கொண்டது கனடா. அதற்கு முன்பே சீனர்கள் சென்றுவிட்டார்கள். வருடத்திற்கு இத்தனை பேர் என்று கட்டாய வரவேற்பளிக்கிறது அந்த நாடும். அடுத்த சொர்க்கம் ஐரோப்பா. வந்தேறிகள் என்று ஒதுக்காமல் உரிமைகளும் சலுகைகளும் வழங்கும் தாராளமான சட்டங்கள் அங்கு அமுலில் உள்ளன. மொத்த மக்கள் 73 கோடியில் பத்து சதவீதம் புலம்பெயர்ந்து சென்று குடியேறியோர்தான்.

நான்கு கோடி மக்கள் வசிக்கும் ஸ்பெயினில் 14 சதவீதத்துக்கு மேல் வெளிநாட்டினர். மற்றவர்களைச் சகித்து, மற்றவர்களின் இருப்பை அங்கீகரித்து, அந்த பன்மைத்துவ வாழ்வில் மகிழ்ச்சியடைதலே இன்று நாம் கற்றுக்கொள்ள வேண்டிய கலை. மாறாக, நம் வீட்டு வாசற்படிக்குப் புறத்தே உள்ள பகுதியை அந்நிய உலகமாகவே பார்க்கும் பழக்கத்திற்கு இங்கு நாம் ஆட்பட்டிருக்கிறோம். நான், என் வாழ்க்கை என்பதற்கு அப்பால் சிந்திக்காதவர்களாக நாமிருப்பது பற்றியும், எனக்காக, என் குடும்பத்திற்காக என்ற அளவிற்குமேல் யோசிக்காமல் விடுவது பற்றியும் வெட்கப்பட வேண்டும்.

சமூகமனிதர்கள் என்ற வகையில் நமது கடமை எதுவாக இருக்க வேண்டும் என்று தேர்ந்து கொள்வதும், அந்தக் கடமைகளைச் செய்வதில் காணும் திருப்தியும் நம் சந்தோஷங்களாதல் வேண்டும். பல்லுயிர்களதும் கூட்டு வாழ்வில் அழகுபெறும் ஒரு பூங்கா மாதிரியான வாழ்க்கையே மனிதர்களாகிய நம் வாழ்வுச் சூழலையும் அழகுபடுத்தும். மனித உரிமை, மானுட நேயம் என்பதையெல்லாம் பேச்சளவில் வைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர, இங்கு நமக்குள் மானுடம் உருப்பெறவில்லை.

தனித்தனி மனிதர்களாக சுயநலப் பித்துப் பிடித்தவர்களாகவே அலைந்து கொண்டிருக்கிறோம். வெளி உலகம் ஒன்று இருப்பதையே மறந்து வருகிறோம் இருந்தாலும் அது நமக்காகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.தன்னளவிலேயே சுருங்கிக் கொள்ளாமல், பிறரும் சேர்ந்ததாக இந்த வாழ்க்கையை - உலகைப் பார்ப்பதிலேயே நமக்கான பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள முடியும். மகாசமுத்திரத்தில் நானும் ஒரு துளி என்ற அளவில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire