mardi 17 juillet 2012

வரும் 27 ஆம் திகதி தேவேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரையில் அரசாங்கத்திற்கு எதிரான "வாகனப் பேரணி

  "மக்களை நசுக்கும் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்தல்' என்ற தொனிப் பொருளில் எதிர் வரும் 27 ஆம் திகதி தேவேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரையில் அரசாங்கத்திற்கு எதிரான "வாகனப் பேரணி எதிர்ப்பை' மேற் கொள்ளவுள்ளதாக ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தேர்தலை இலக்காக வைத்து இப் போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லையென்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பெலவத்தை யிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று திங்கட் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

அரசாங்கம் நாட்டில் ஜன நாயகத்தை இல்லாதொழித்து அடக்கு முறை ஆட்சியை முன்னெடுக்கின்றது.

புதிய லிபரல் வாதக் கொள்கைக்கு அமைய கடன்களைப் பெற்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப் பட்டு மக்கள் மீது வரிச் சுமைகளை சுமத்தியுள்ளது.

அத்தோடு பல் வேறு காரணங்களை முன் வைத்து மக்களிடமிருந்து தண்டப் பணம் அற விடப்படுகின்றது. டெங்கு ஒழிப்பு என்ற போர்வையிலும் தண்டப் பணம் அறவிடப்படுகிறது.

டெங்கு நுளம்பு பரவாமலிருக்கும் விதத்தில் சூழலை வைத்திருக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும். அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் டெங்கு தொடர்பில் மக்களை தெளிவு படுத்தி அதற்காக மக்களின் பங்களிப்பை பெறுவதையே அரசாங்கம் மேற்கொண்டிருக்க வேண்டும்.

அதனை விடுத்து தண்டப் பணம் அறவிடப்படுகிறது. கல்வித் துறை சுகாதாரத் துறை அனைத்தும் சீர் குலைந்துள்ளது. இதன் பலா பலன்களை மக்கள் இன்று அனுபவிக்கின்றனர். வரட்சியால் விவசாயிகள் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். விதை நிலங்கள் பாழாகிப் போயுள்ளன.

மழை பெய்யாவிட்டால் அதற்கு அரசாங்கம் என்ன செய்யும் என விவசாயிகளை ஏளனப் படுத்துகின்றது. உண்மையில் இவ் வரட்சிக்கு மழையே காரணமல்ல. வாவிகளில் தேங்கியிருந்த நீரை வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும், வீணாக விரயம் செய்ததுமே காரணமாகும்.

இதற்கான முழுப் பொறுப்பை அரச அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எரி பொருட்களின் விலை உயர்வால் மீன் பிடித்துறையில் ஈடுபட்டுள்ளோரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். தொழிலுக்கு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கத்தால் தீர்வு காணப்படாது இழுத்தடிக்கப்படுகிறது.

சாதாரண மக்களுக்கு வங்கிகளில் கடன் பெற முடியாத நிலை தோன்றியுள்ளது. ஊழியர் சேமலாப நிதி, நம்பிக்கை நிதியத்திலுள்ள பணத்தை நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டையும் மக்களையும் அரசாங்கம் அதளபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. இதனை எதிர்த்தே எமது நாடு முழுவதும் மக்களை தெளிவுபடுத்தும் வாகனப் பேரணி போராட்டத்தை தேவேந்திர முனையில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். இப்போராட்டம் ஆகஸ்ட் முதலாம் திகதி பருத்தித்துறையை சென்றடையும்.

அரசாங்கத்தின் அடக்கு முறை தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் இதன்போது விநியோகிக்கப்படும் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மா நாட்டில் விஜித்த ஹேரத் எம்.பி. மற்றும் லால்காந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்

Aucun commentaire:

Enregistrer un commentaire