mardi 17 juillet 2012

ஜே.வி.பி.குற்றஞ்சாட்டுகிறது தீர்வை வழங்கும் மனோநிலை மஹிந்தவிடம் அறவேயில்லை


 இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் மனோநிலை மஹிந்த அரசிடம் அறவே இல்லை. போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அடிப்படை உரிமைகளைக் கூட வழங்குவதற்கு இந்த அரசு எதுவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லையென ஆவேசமாகக் குமுறியுள்ள ஜே.வி.பி.  அரசியல் கைதிகளின் பிரச்சினை விடயத்திலும் அரசு தீர்வை நோக்கிப் பயணிக்காமலுள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
 
ஜனநாயகத்தை கலையச் செய்து மக்களைப் பிரச்சினைகளுக்குள் அரசு தள்ளியுள்ளமைக்கு எதிராகத் தொடர்ந்தும் போராடுவோம் என்றும் ஜே.வி.பி. சூளுரைத்துள்ளது. அரசு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் அராஜக ஆட்சி முறைமை, ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் ஆகியவை தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஜே.வி.பி. அமைப்பொன்றை உருவாக்கியுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறியவை வருமாறு:
இந்த அரசின் பொருளாதார முறைமை மக்களைப் பாதாளத்துக்குள் தள்ளும் வகையிலேயே உள்ளது. கடன், தண்டப்பணம், வரி ஆகியவற்றின் ஊடாக நிதியைத் திரட்டும் முறைமையிலேயே ஆட்சிப்பீடம் நகர்ந்து செல்கின்றது.
 
டெங்கு ஒழிப்புக்கான பொறுப்பு மக்களுக்குமுள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இருப்பினும், அரசு மக்களுக்குள்ள பொறுப்பை எடுத்துரைத்து அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், அரசு அவ்வாறு செய்யாமல் தண்டப்பணம் அறவிடும் முறைமையொன்றை அமுல்படுத்தியுள்ளது.
 
மீனவர்கள் இன்று பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென அரசு கூறியது. ஆனால், போதுமானளவு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.
 
யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அடிப்படை உரிமைகளைக்கூட வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. முகாம்களிலுள்ள மக்கள் இன்னும் இன்னல்களை எதிர்நோக்கிய மக்களாகவே  வாழ்கின்றனர்.
 
 அத்துடன், கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்தான பிரச்சினைக்கும் அரசு இன்னும் தீர்வைக் காணவில்லை என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire